இருந்து பாடிய இரங்கற்பா! - கவியரசு கண்ணதாசன்

பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
என்சொல்லி வருந்து வேனே!

தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே!

பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
எம்மொழி யாற்செப்பு வேனே!

பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
கொண்டவன் தான் புறப்ப டானோ!

வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
நாம்கேட்டால் பொருள்செய் யானோ!

கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
பூப்பூத்த கோல மென்னே!

போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!

தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் கவிதைகள் - 4-ஆம் தொகுதியில் உள்ளன. இன்று அவர் பிறந்தநாள் (1927). சிக்காகோவில் 1981-ல் மறைந்தார்.

நா. கணேசன்

என் பழைய பதிவுகள்:

(1) கோயம்புத்தூர் மீது கவியரசர்:
http://nganesan.blogspot.com/2008/01/2.html

(2) சங்கிலி அரசனின் வீணைக்கொடி:
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html

(3) நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html

4 comments:

Rathnavel said...

அருமை.

Murugeswari Rajavel said...

இருந்து பாடிய இரங்கற்பா!
பழைய பதிவுகளையும் இணைத்து எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று சொன்ன கவிஞருக்கு அஞ்சலி.

நளினா லாவண்யா said...

அவனெழுதிச் சென்றபினும் நினைவில் வைத்து
நீ அதைஇங் கெடுத்திட்டாய் நன்றி சொன்னேன்.
கவி யிறந்து போனாலும் காலம் என்றும்
அவன் நினைவை மறக்காது ஓகே ஓகே

ராஜ நடராஜன் said...

இதுவரை கண்ணில் படாத இரங்கற்பா!