என் ஊர்! - சிற்பி

என் ஊர்!
கவிஞர் சிற்பி

''மூன்று பக்கங்களும் ஆழியாறு பாயும் தீவு போன்ற ஆற்றுப் பொள்ளாச்சி என்கிற குக்கிராமம்தான் எனது சொந்த ஊர். ஆனாலும், எனது வாழ்நாளின் பெரும் பகுதியை அள்ளிக்கொண்டது என்னவோ பொள்ளாச்சிதான். 'பொழில் வாய்ச்சி’ என்பதே இந்த ஊரின் பெயர். கால இயந்திரம் விரைந்து இயங்கும்போது, இதன் பெயர் உருமாறி பொள்ளாச்சி என ஆனது!


வரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொள்ளாச்சி வட்டாரத்தில் ரோமானிய நாணயங்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன. எங்கள் கிராமத்து ஆற்றுப் படுகையில் 'குட்டுவன் கோதை’ பெயர் பொறித்த சங்க காலக் காசும் கிடைத்து இருக்கிறது. பக்கத்தில் உள்ள மலைச் சாரலில் சமணர் படுகைகள் ஏராளம். இப்படி ஆதியின் மீதிகளை அவ்வப்போது உமிழ்ந்து ஆச்சர்யம் ஊட்டும் அதிசய மண் இது.

இன்று நிறைய வளர்ச்சிகள் இருந்தாலும், பொள்ளாச்சி இன்னமும் ஒரு வளர்ந்த கிராமம்தான். விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்பு சக்கரத்தை உருட்டிக்கொண்டு ஓடும் விவசாயிகள்தான் இந்தக் களத்தின் நாயகர்கள். தென்னைதான் பிரதான விவசாயம். கன்றில் இருந்து காய்ப்பு வரை தென்னையைச் சீராட்டி வளர்க்கும் நுட்பம் பொள்ளாச்சி விவசாயிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது. பெற்ற பிள்ளை கைவிட்டாலும்கூட தென்னையால் தாங்கப்பட்டு, நிமிர்ந்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் இங்கே அநேகம். தென்னை தவிர, சர்க்கரை ஆலைகள், வார்ப்பட ஆலைகள் எனத் தொழில் துறையிலும் வெற்றி கண்ட மனிதர்கள் இங்கே ஏராளம். அமரர் நாச்சிமுத்துக் கவுண்டரை மறக்க முடியுமா? பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் போன்றவர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்களே!

ஒரு காலத்தில் சந்தையால் புகழ்பெற்று இருந்த இந்த ஊரில், இன்று கல்லூரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. வானவராயரின் முயற்சியால் வேளாண்மையியல் கல்லூரி இங்கே வந்தது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். பொள்ளாச்சியின் ஆகப் பெரிய விழா மாரியம்மன் நோன்புதான். ரங்க ராட்டினங்களும் பஞ்சு மிட்டாய் தின்னும் குழந்தைகளுமாக நெஞ்சம் இனிக்கிற தினம் அது. அதேபோல், பொள்ளாச்சி ரேக்ளா ரேஸ் உள்ளூர் வீர விளையாட்டு!

பொள்ளாச்சியைக் குட்டிக் கோடம்பாக்கமாக வெளியுலகம் பார்ப்பதில் எங்களுக்கு ஒரு செருக்கு உண்டு. பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. 'இந்த சினிமாக்காரங்களால சாமான்யன் எவனும் லாட்ஜ் பக்கம் போக முடியாத அளவுக்கு வாடகை ஏறிக் கெடக்குதுங்ணா!’ என்று உள்ளூர் வெள்ளியங்கிரிகள் விசனப்படுவதும் காதில் விழுகிறது. சினிமா புள்ளிகள் எங்கள் ஊரில் மையம்கொள்ள, பச்சை மலைச் சாரல்களும் பண்ணைகளும் மட்டும் காரணம் இல்லை. குறைந்த செலவில் நிறைவாகப் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற பட்ஜெட் கணக்கும் காரணம்.

நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு வாய்க்கப் பெற்றது பொள்ளாச்சி. இது இயற்கையின் கொடை. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப் சிலிப்பின் யானைகள் முகாமும் தமிழக சுற்றுலா சூழலின் உச்சம். இந்த மண்ணில் ஆன்மிக ஆல மரங்களும் அழுத்தமாக வேர் ஊன்றி நிற்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். ஆழியாறு அறிவுத் திருக் கோயில், வேதாத்திரி மகரிஷி உள்ளிட்டவர்கள் அதற்கு அசையா சாட்சி!


கலை, இலக்கிய உணர்வைப் பசுமை மாறாமல் 40 ஆண்டுகளாய்க் காத்துக் கொண்டாடி வரும் பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கத்தை நினைவு இருக்கும் வரை மறக்க முடியாது. பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.ஞானம் போன்ற கலைஞர்களைத் தந்ததும் இந்த மண்தான். இன்று இந்தியக் காவல் துறையின் ரோல் மாடலாக விளங்கும் மராட்டிய மாநிலக் காவல் துறை அதிகாரி சிவானந்தத்தையும் 'நாசா’ விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியல் அறிஞரான நா.கணேசனையும் உருவாக்கியது எம் ஊரே. அடுத்தடுத்த ஜென்மங்கள் சாத்தியம் எனில், அத்தனையிலும் பொள்ளாச்சியிலேயே பிறக்க வேண்டுவதன்றி வேறொன்றும் வரம் வேண்டவில்லை நான்!''

சந்திப்பு: எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் சிற்பி. படைப்பு, மொழிபெயர்ப்பு என இரு துறைகளிலும்இயங்கும் படைப்பாளி. பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறைத் தலைவராக இருந்த கல்வியாளர் !

நன்றி: ஆனந்த விகடன் - 20-ஏப்ரல்-2011

4 comments:

V. Dhivakar said...

நன்றி திரு கணேசன்.

சிற்பி அவர்கள் கைவண்ணம் என்னுடைய புத்தகத்துக்கும் கிடைத்துள்ளது. திருமலைத் திருடன் புத்தகத்துக்கு ஒரு அருமையான முன்னுரையை அருளிச் செய்தார்.

அன்புடன்
திவாகர்

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றிங்கண்ணா!!

ஈரோடு கதிர் said...

ஆஹா பொள்ளாச்சி....

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ராஜ நடராஜன் said...

வானம்பாடிக் கவிஞர்களில் சிற்பியும் ஒருவர் என்பதையும் பதிவு செய்கிறேன்.