என் ஊர்! - சிற்பி

என் ஊர்!
கவிஞர் சிற்பி

''மூன்று பக்கங்களும் ஆழியாறு பாயும் தீவு போன்ற ஆற்றுப் பொள்ளாச்சி என்கிற குக்கிராமம்தான் எனது சொந்த ஊர். ஆனாலும், எனது வாழ்நாளின் பெரும் பகுதியை அள்ளிக்கொண்டது என்னவோ பொள்ளாச்சிதான். 'பொழில் வாய்ச்சி’ என்பதே இந்த ஊரின் பெயர். கால இயந்திரம் விரைந்து இயங்கும்போது, இதன் பெயர் உருமாறி பொள்ளாச்சி என ஆனது!


வரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொள்ளாச்சி வட்டாரத்தில் ரோமானிய நாணயங்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன. எங்கள் கிராமத்து ஆற்றுப் படுகையில் 'குட்டுவன் கோதை’ பெயர் பொறித்த சங்க காலக் காசும் கிடைத்து இருக்கிறது. பக்கத்தில் உள்ள மலைச் சாரலில் சமணர் படுகைகள் ஏராளம். இப்படி ஆதியின் மீதிகளை அவ்வப்போது உமிழ்ந்து ஆச்சர்யம் ஊட்டும் அதிசய மண் இது.

இன்று நிறைய வளர்ச்சிகள் இருந்தாலும், பொள்ளாச்சி இன்னமும் ஒரு வளர்ந்த கிராமம்தான். விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்பு சக்கரத்தை உருட்டிக்கொண்டு ஓடும் விவசாயிகள்தான் இந்தக் களத்தின் நாயகர்கள். தென்னைதான் பிரதான விவசாயம். கன்றில் இருந்து காய்ப்பு வரை தென்னையைச் சீராட்டி வளர்க்கும் நுட்பம் பொள்ளாச்சி விவசாயிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது. பெற்ற பிள்ளை கைவிட்டாலும்கூட தென்னையால் தாங்கப்பட்டு, நிமிர்ந்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் இங்கே அநேகம். தென்னை தவிர, சர்க்கரை ஆலைகள், வார்ப்பட ஆலைகள் எனத் தொழில் துறையிலும் வெற்றி கண்ட மனிதர்கள் இங்கே ஏராளம். அமரர் நாச்சிமுத்துக் கவுண்டரை மறக்க முடியுமா? பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் போன்றவர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்களே!

ஒரு காலத்தில் சந்தையால் புகழ்பெற்று இருந்த இந்த ஊரில், இன்று கல்லூரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. வானவராயரின் முயற்சியால் வேளாண்மையியல் கல்லூரி இங்கே வந்தது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். பொள்ளாச்சியின் ஆகப் பெரிய விழா மாரியம்மன் நோன்புதான். ரங்க ராட்டினங்களும் பஞ்சு மிட்டாய் தின்னும் குழந்தைகளுமாக நெஞ்சம் இனிக்கிற தினம் அது. அதேபோல், பொள்ளாச்சி ரேக்ளா ரேஸ் உள்ளூர் வீர விளையாட்டு!

பொள்ளாச்சியைக் குட்டிக் கோடம்பாக்கமாக வெளியுலகம் பார்ப்பதில் எங்களுக்கு ஒரு செருக்கு உண்டு. பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. 'இந்த சினிமாக்காரங்களால சாமான்யன் எவனும் லாட்ஜ் பக்கம் போக முடியாத அளவுக்கு வாடகை ஏறிக் கெடக்குதுங்ணா!’ என்று உள்ளூர் வெள்ளியங்கிரிகள் விசனப்படுவதும் காதில் விழுகிறது. சினிமா புள்ளிகள் எங்கள் ஊரில் மையம்கொள்ள, பச்சை மலைச் சாரல்களும் பண்ணைகளும் மட்டும் காரணம் இல்லை. குறைந்த செலவில் நிறைவாகப் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற பட்ஜெட் கணக்கும் காரணம்.

நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு வாய்க்கப் பெற்றது பொள்ளாச்சி. இது இயற்கையின் கொடை. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப் சிலிப்பின் யானைகள் முகாமும் தமிழக சுற்றுலா சூழலின் உச்சம். இந்த மண்ணில் ஆன்மிக ஆல மரங்களும் அழுத்தமாக வேர் ஊன்றி நிற்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். ஆழியாறு அறிவுத் திருக் கோயில், வேதாத்திரி மகரிஷி உள்ளிட்டவர்கள் அதற்கு அசையா சாட்சி!


கலை, இலக்கிய உணர்வைப் பசுமை மாறாமல் 40 ஆண்டுகளாய்க் காத்துக் கொண்டாடி வரும் பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கத்தை நினைவு இருக்கும் வரை மறக்க முடியாது. பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.ஞானம் போன்ற கலைஞர்களைத் தந்ததும் இந்த மண்தான். இன்று இந்தியக் காவல் துறையின் ரோல் மாடலாக விளங்கும் மராட்டிய மாநிலக் காவல் துறை அதிகாரி சிவானந்தத்தையும் 'நாசா’ விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியல் அறிஞரான நா.கணேசனையும் உருவாக்கியது எம் ஊரே. அடுத்தடுத்த ஜென்மங்கள் சாத்தியம் எனில், அத்தனையிலும் பொள்ளாச்சியிலேயே பிறக்க வேண்டுவதன்றி வேறொன்றும் வரம் வேண்டவில்லை நான்!''

சந்திப்பு: எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் சிற்பி. படைப்பு, மொழிபெயர்ப்பு என இரு துறைகளிலும்இயங்கும் படைப்பாளி. பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறைத் தலைவராக இருந்த கல்வியாளர் !

நன்றி: ஆனந்த விகடன் - 20-ஏப்ரல்-2011

ௐ மதுரை மீனாட்சியே போற்றி! தமிழர்ச்சனை
1. ௐ அங்கயற்கண் அம்மையே போற்றி
2. ௐ அகிலாண்ட நாயகியே போற்றி
3. ௐ அருமறையின் வரம்பே போற்றி
4. ௐ அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
5. ௐ அரசிளங் குமரியே போற்றி
6. ௐ அப்பர் பிணிமருந்தே போற்றி
7. ௐ அமுத நாயகியே போற்றி
8. ௐ அருந்தவ நாயகியே போற்றி
9. ௐ அருள்நிறை அம்மையே போற்றி
10. ௐ ஆலவாய் அரசியே போற்றி
11. ௐ ஆறுமுகன் அன்னையே போற்றி
12. ௐ ஆதியின் பாதியே போற்றி
13. ௐ ஆலால சுந்தரியே போற்றி
14. ௐ ஆனந்த வல்லியே போற்றி
15. ௐ இளவஞ்சிக் கொடியே போற்றி
16. ௐ இமயத்தரசியே போற்றி
17. ௐ இடபத்தோன் துணையே போற்றி
18. ௐ ஈஸ்வரியே போற்றி
19. ௐ உயிர் ஓவியமே போற்றி
20. ௐ உலகம்மையே போற்றி
21. ௐ ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
22. ௐ எண்திசையும் வென்றோய் போற்றி
23. ௐ ஏகன் துணையே போற்றி
24. ௐ ஐங்கரன் அன்னையே போற்றி
25. ௐ ஐயம் தீர்ப்பாய் போற்றி
26. ௐ ஒப்பிலா அமுதே போற்றி
27. ௐ ஓங்கார சுந்தரியே போற்றி
28. ௐ கற்றோர்க்கு இனியோய் போற்றி
29. ௐ கல்லார்க்கும் எளியோய் போற்றி
30. ௐ கடம்பவன சுந்தரியே போற்றி
31. ௐ கல்யாண சுந்தரியே போற்றி
32. ௐ கனகமணிக் குன்றே போற்றி
33. ௐ கற்பின் அரசியே போற்றி
34. ௐ கருணை ஊற்றே போற்றி
35. ௐ கல்விக்கு வித்தே போற்றி
36. ௐ கனகாம்பிகையே போற்றி
37. ௐ கதிரொளிச் சுடரே போற்றி
38. ௐ கற்பனை கடந்த கற்பகமே போற்றி
39. ௐ காட்சிக்கு இனியோய் போற்றி
40. ௐ காலம் வென்ற கற்பகமே போற்றி
41. ௐ கிளியேந்திய கரத்தோய் போற்றி
42. ௐ குலச்சிறை காத்தோய் போற்றி
43. ௐ குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
44. ௐ கூடல் கலாப மயிலே போற்றி
45. ௐ கோலப் பசுங்கிளியே போற்றி
46. ௐ சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
47. ௐ சக்தி வடிவே போற்றி
48. ௐ சங்கம் வளர்த்தாய் போற்றி
49. ௐ சிவகாம சுந்தரியே போற்றி
50. ௐ சித்தம் தெளிவிப்பாய் போற்றி
51. ௐ சிவயோக நாயகியே போற்றி
52. ௐ சிவானந்த வல்லியே போற்றி
53. ௐ சிங்கார வல்லியே போற்றி
54. ௐ செந்தமிழ்த் தாயே போற்றி
55. ௐ செல்வத்துக் கரசியே போற்றி
56. ௐ சேனைத்தலைவியே போற்றி
57. ௐ சொக்கர் நாயகியே போற்றி
58. ௐ சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
59. ௐ ஞானாம்பிகையே போற்றி
60. ௐ ஞானப்பூங்கோதையே போற்றி
61. ௐ தமிழர் குலச்சுடரே போற்றி
62. ௐ தண்டமிழ்த் தாயே போற்றி
63. ௐ திருவுடை யம்மையே போற்றி
64. ௐ திசையெல்லாம் புரந்தாய் போற்றி
65. ௐ திரிபுர சுந்தரியே போற்றி
66. ௐ திருநிலை நாயகியே போற்றி
67. ௐ தீந்தமிழ்ச் சுவையே போற்றி
68. ௐ தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
69. ௐ தென்னவன் செல்வியே போற்றி
70. ௐ தேன்மொழியம்மையே போற்றி
71. ௐ தையல் நாயகியே போற்றி
72. ௐ நற்கனியின் சுவையே போற்றி
73. ௐ நற்றவத்தின் கொழுந்தே போற்றி
74. ௐ நல்ல நாயகியே போற்றி
75. ௐ நீலாம் பிகையே போற்றி
76. ௐ நீதிக்கரசியே போற்றி
77. ௐ பக்தர்தம் திலகமே போற்றி
78. ௐ பழமறையின் குருந்தே போற்றி
79. ௐ பரமானந்தப் பெருக்கே போற்றி
80. ௐ பண்ணமைந்த சொல்லே போற்றி
81. ௐ பவளவாய்க் கிளியே போற்றி
82. ௐ பல்லுயிரின் தாயே போற்றி
83. ௐ பசுபதி நாயகியே போற்றி
84. ௐ பாகம்பிரியா அம்மையே போற்றி
85. ௐ பாண்டியர் தேவியே போற்றி
86. ௐ பார்வதி அம்மையே போற்றி
87. ௐ பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
88. ௐ பெரிய நாயகியே போற்றி
89. ௐ பொன் மயிலம்மையே போற்றி
90. ௐ பொற்கொடி அன்னையே போற்றி
91. ௐ மலையத்துவசன் மகளே போற்றி
92. ௐ மங்கல நாயகியே போற்றி
93. ௐ மழலைக் கிளியே போற்றி
94. ௐ மனோன்மணித் தாயே போற்றி
95. ௐ மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
96. ௐ மாயோன் தங்கையே போற்றி
97. ௐ மாணிக்க வல்லியே போற்றி
98. ௐ மீனவர்கோன் மகளே போற்றி
99. ௐ மீனாட்சியம்மையே போற்றி
100. ௐ முழுஞானப் பெருக்கே போற்றி
101. ௐ முக்கண்சுடர் விருந்தே போற்றி
102. ௐ யாழ்மொழியம்மையே போற்றி
103. ௐ வடிவழகம்மையே போற்றி
104. ௐ வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி
105. ௐ வேத நாயகியே போற்றி
106. ௐ வையகம் வாழ்விப்போய் போற்றி
107. ௐ அம்மையே அம்பிகையே போற்றி
108. ௐ அகிலம் ஆளவந்தாய் போற்றி! போற்றி!!


This posting uses Tamil Om sign which is designed to have identical properties as Hindi Om in Unicode. We hope your computer will show it correctly, e.g., Windows 7. Otherwise, at least the Latha font needs to be replaced with the latest version of it.

<> கரம் குவிப்போம் <>


அரனுடன் உமைமகிழ் முருகோனே
.. அரியவன் பெருமைகொள் மருகோனே
சுரர்துயர் அடுபெருந் திறலோனே
.. துணைவியர் மருவிடும் அழகோனே
பரமெனும் நிலையுறை பொருளோனே
.. பதமலர் சரணமென் றுனைநாளும்
கரவரு டமதனில் மறவாதே
.. கருதிட உனதருள் புரிவாயே!

~ பேரா. அனந்த், கனடா, 14-4-2011

வசந்த கால வரவாக
.. வந்து நிற்கும் கரவருடம்
கசந்திருக்கும் வேப்பம்பூ
.. கன்னல் வெல்லம் வாழ்க்கையிலே
இசைந்திருக்கும் தன்மையினை
.. எடுத்துச் சொல்லும், நலங்கள் நம்
வசந்தான் என்று சொலும் வகையில்
.. வழங்கட்டும் இப் புது வருடம்!

~ இலந்தை, சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழுமம்.Michael Rogge, Old Madurai, 1945, watch at:
http://www.youtube.com/watch?v=TV21eP0uu_0

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

பொன்னர் - சங்கர் காப்பியம் - கேட்பொலி நாடா வெளியீட்டு விழா!

கொங்குநாட்டின் பழைய நாட்டுப்புறக் காப்பியம் அண்ணன்மார்கதை. அதில் 3 குழந்தைகள் ஒன்றாய்ப் பிறந்தனர்: பொன்னர்-சங்கர்-தாமரை. அந்நாட்டின் பாணர்கள், புலவர்கள் பாடி சில வாரங்கள் அளவில் பாட்டாகப் படிக்கப்படும். இன்று அவை எல்லாம் மறைந்துவிட்டன.

அந்த நாட்டுப்புறக்கதையை நல்லமுறையில் பதிப்பித்தவர் கவிஞர் சக்திக்கனல் ஐயா ஆவார். சக்திக்கனல் புதுக்கவிதைகளின் ஆரம்ப கட்டத்தில் கோவையில் இருந்து எழுதியுள்ளார். வானம்பாடிக் கவிஞர்களில் - புவியரசு, சிற்பி, சக்திக்கனல், .... என்று போகும். பழமைபேசி அவர்களுக்கு வானம்பாடி இயக்க வெளியீடுகள் தெரியலாம். பொள்ளாச்சி நசன் வானம்பாடிகள் இதழ் தொகுப்பு முழுக்க ஒரு சிடி தந்தார் ஒருமுறை. இப்போது வலைத்தளத்தில் இருக்கிறதா என்று அவரைக் கேட்கணும்.

----------

தமிழக முதல்வர் சங்க - பொன்னர் காவியத்தை நாவலாக எழுதியுள்ளார். சிலம்பொலி செல்லப்பனாரைச் சொல்லச் சொல்லிக் கேட்டு எழுதியுள்ளார்.

அதனை சினிமாவாக தியாகராஜன் தன் மகன் பிரசாந்த்தை இரட்டை வேடத்தில் வைத்து எடுக்கிறார்கள். அதில் இளையராசா இசையில் காலத்தை வென்ற சில பாடல்களைத் தருவார் என்று நம்புவோம். வைரமுத்து பாடலாசிரியர். இதன் ஆடியோ வெளியீடு நடந்துள்ளது.

கலைஞருக்கு முன்னமே ஆராய்ந்து எழுதியவர் கொங்கு அம்மாள் என்றால் பிரியப்படும் ப்ரெண்டா பெக். நாட்டுப்பாடல் இலக்கியத்தில் மிகுந்த தேர்ச்சி உடைய கனடா நாட்டார். படிப்பு ஆக்ஸ்போர்டில். 20-25 வருஷமாய் எழுதுவதை விட்டுவிட்டார். இப்போது மீண்டும். அண்ணன்மார் கதையை டிஸ்கவரி சேனலுக்கு எடுக்க முயற்சி எடுத்துவருகிறார். ப்ரெண்டாவின் முயற்சிகள் வெல்க. கொங்குநாட்டார் அதற்கு உதவ வேணும்.

ஒரு கருத்தரங்கில், பொன்னர், சங்கர், தாமரை - 3 ட்வின்ஸ். அவருக்கு சங்கர் என்ற உடன் சங்கரன் சிவன் என்று பல ஆண்டுகளாய் நினைத்துவிட்டார். இது வைணவ பரமான காவியம். பொன்னர் - என்றால் விஷ்ணுவின் சக்கரம் - சூர்யன் பொன் போல், சங்கர் என்றால் வெண்மையான விஷ்ணுவின் திருக்கரத்துச் சங்கு. தாமரை(யாள்) என்று விளக்கினேன். அவருக்கு பிடித்துப் போனது. கொங்குநாட்டார் (தக்கை) ராமாயணம் மூலம் கம்பருக்கும், வில்லியை ஆதரித்து பாரதமும் தமிழ்ப்படுத்தினர். அந்த இதிகாசங்களின் தமிழ் நூலகளிலே நூலாசிரியர்கள் கொங்கர்கள் தம்மைப் புரந்ததைப் பாராட்டியுள்ளனர். வட தமிழகத்தில் தெருக்கூத்து பாரதக் கதைகள் வளர வரலாற்றில் வில்லி பாரதம் முக்கியக் காரணம்.

பொன்னர் சங்கர் சினிமாவின் கேட்பொலி விழாப் படங்கள் சிலவும், தமிழக முதல்வர் கலைஞரின் சொற்பொழிவையும் இணைத்துள்ளேன். தேர்தல் சமயம் இது. கலைஞரின்
கோவை பிரச்சாரக் கூட்டப் பேச்சும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்கலைப்பணிதான் நிரந்தரம் – கலைஞர்

முதல் அமைச்சர் மு.கருணாநிதி கோவையில் சிறுது காலம் வசித்தபொழுது கதையாக, பாடலாகக் கேட்டு ரசித்த வரகுதின்னாப் பெருங்குடியார் வம்சமான அண்ணன்மார் கதையினை 1989 ல் பொன்னர் சங்கர் என்கிற நாவலாக எழுதி அதனை பேராசியர் அன்பழகன் வெளியிட்டார். கொங்கு மண்டல காவல் தெய்வங்களாக விளங்கிய அண்ணன்மார் கதையினை பொன்னர் சங்கர் என்ற தலைப்பிலேயே கதை திரைக்கதை வசனத்தை முதல் அமைச்சர் மு.கருணாநிதி எழுதி, நடிகர் தியாகராஜன் டைரக்டு செய்திருக்கிறார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.


தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல் அமைச்சர் மு.கருணாநிதி வெளியிட தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குனர் தியாகராஜனும் பிரசாந்தும் இணைந்து கலைஞருக்குச் செங்கோலும் வாளும் வழங்கினார்கள்.

விழாவில் முதல் அமைச்சர் மு.கருணாநிதி பேசியதாவது:

எனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை என்றால் எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் அந்தப்பணி நிரந்தரம் அல்ல இந்தப்பணிதான் நிரந்தரம், அந்தப்பணி வந்து வந்து போவது இந்தப்பணி நிரந்தரமாக இருப்பது. மேலும் இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பது தான் காரணம்.

இன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.

இவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை உரையாடல்களை நடிப்பை இசையை இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித் தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும். சினிமா உலகத்தை விட்டு திரைப்படத் துறையை விட்டு எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.

ஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல் அமைச்சராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் எழுத வேண்டும் எழுத வேண்டும் என்பதிலே தான். எழுத்தை மறந்து விட்டு இந்தக் கலைத் துறையை விட்டு இலக்கியத் துறையை விட்டு விட்டு அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம். எனவே தான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

பொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாகஇருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். ஒரு பெரியவர்(?) அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் (?) என்று சிலரால் கருதப்படுபவர் சொல்லியிருக்கிறார் கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!

சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம் தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிறோம்? மன்னிக்க வேண்டும் ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

கலைக் குடும்பம் என்று நான் இந்தக் குடும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது இதிலே நான் மாத்திரம் என்ன வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? எல்லோரும் என்னுடைய குடும்பம் தான்.

அதனால் தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பது தான் வேடிக்கை, ஆச்சர்யம்.

தமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா? நான் படம் எடுத்து படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம் தான் இருக்கிறது என்கிறார்கள். நானும் பார்க்கிறேன்.

எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இது தான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது? எனக்கு குடும்பம் இருக்கிறதே? குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா? குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா? சரி தானா? என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆனால், சில பேருக்கு யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால் தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. எந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன கதையின் போக்கு என்ன கதையின் கதாபாத்திரங்கள் யார் கதை நடைபெறுகின்ற காலம் எது என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு “இசைஞானி” என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான். நல்ல காலம் பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பல பேர் என்னிடத்திலே பட்டம் பெற்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்? கொடுத்தது கொடுத்ததுதான்.

இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன். என்று பேசினார்.

முன்னதாக வாழ்த்துரை ஆற்றிய பொள்ளாச்சி ந.மகாலிங்கம்,” கொங்கு நாட்டுச் சரித்திரத்தைப் பற்றி பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அதனைப் படித்தவர்கள் மிகவும் குறைவு. இன்று இதனைத் திரைப்படமாக எடுத்திருப்பதன் மூலம் கொங்கு நாட்டுச் சரித்திரம் உலகம் முழுவதும் சென்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நவீன கால அடையாளங்கள் சிறிது அளவு கூட தெரிந்து விடாத வகையில் சிறப்பாகப் பட்த்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜனை வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

------------------------


கோவை சிவானந்தா காலனியில் 30.03.2011 அன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது:

இங்கு கூடியிருக்கும் மிகப்பெரிய கூட்டத்தையும் ஏராளமான மக்களையும் கூட்டணி வெற்றிக்காக அரும்பாடுபட்டு கொண்டிருக்கும் தொண்டர்களையும் பார்க்கும் போது திமுக கூட்டணி வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு விடை கிடைத்தாகி விட்டது. வெற்றி பெற்றாகத்தான் வேண்டும். ஏனெனில் கூட்டணி அமைந்திருக்கும் முறையை பார்த்தால் உங்களுக்கு தெளிவு பிறக்கும். நம்பிக்கை பிறக்கும். திமுக கூட்டணியின் வெற்றியை பல்வேறு இயக்க தலைவர்கள் மட்டுமல்ல கொங்கு சீமையில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் பெற முடியாத வெற்றியை இந்த முறை பெறுவதற்கு ஈஸ்வரன் தயவு நமக்கு நிச்சயமாக உள்ளது. நமது கூட்டணியில் கொங்கு முன்னேற்ற கழகமும் பிரதான இடம் பிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஆலோசிக்கும் போது கொங்கு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட்ராமசாமியை சந்தித்தேன். அவர் இந்த கூட்டணி உறுதியான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித் தார். அந்த வெற்றிக்கான நம்பிக்கையை இன்று காலை முதல் நான் பார்க்கும் மலர்ந்த முகங்கள் எல்லாம் சான்று கூறி வருகின்றன.

கோவைக்கு அரசியலுக் காக நான் வந்து புகுந்த இட மல்ல. என் வாழ்க்கையில் ஒர் அங்கமாக கோவை திக ழ்ந்த இடம். நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் திருக்குவளையில்.படித்தது 10 கல் தொலைவிலுள்ள திருவாரூரில். படித்தது மட்டுமன்று பகுத்தறிவை வளர் த்து கொண்டது அறிஞர் அண்ணா, தலைவர் பெரியார் ஆகியோரை சந்தித்தது எல்லாம் அங்குதான். நான் அரசியலுக்கு வந்து 75 ஆண்டுகளாகிறது. தற் போது 87வயதில் உங்களை சந்திக்க வந்துள்ளேன். கோவையை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியான, சோகமான பல நிகழ்ச்சிகள் என்னை தாக்குவதுண்டு.அறிஞர் அண்ணா திமுக வை துவங்கிய போது அவருடன் இருந்த பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, சாதிக்பாட்சா, எஸ்.ஏ.ராஜமாணிக்கம், உடுமலை நாராயணன், சி.டி.தண்டபாணி ஆகியோர் அன்று இருந்தார்கள் இன்று இல்லை.

கொங்கு இனமக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மு.கண்ணப்பனோடு வந்து வாதாடி போராடிய கோவை செழியன் அன்று இருந்தார். இன்று இல்லை. சாமிநாதன், காட்டூர் கோபால், மேட்டுப்பாளையம் தூயவன், விஜயலட்சுமி பழனிச்சாமி, பல்லடம் பொன்னுசாமி, திருப்பூர் முத்துலிங்கம், என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீ ராமுலு நாயுடு ஆகியோர் இன்றைக்கு இல்லை. அவர்கள் எல்லாம் இன் றைக்கு இல்லை என்றாலும் என்னோடு இருந்து எனக்கு ஊட்டிய உணர்வுகள் நெஞ்சில் அகலாமல் இருக்கிறது. கோவை திராவிட கழகத் தின் கோட்டை, கொள்கை வீரர்களின் கோட்டை, என்னை தாலாட்டிய தொட்டில், நான் துள்ளி விளையாடிய தாழ்வாரம் என்ற உணர்வோடு நான் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

1945ம் ஆண்டு நானும் எனது 40 ஆண்டு கால நண்பருமாகிய எம்ஜிஆரும் கோவையில் ஒரே வீட்டில் குடியிருந்தோம். பிளேக் எனும் தொற்றுநோயில் இருந்து எங்களை பாது காத்து கொள்ள,அக்கம்பக்கத்தினரை பாது காக்க, மக்களை காப்பாற்ற சிங்காநல்லூர், ராமநாதபுரம் என்ஜிஆர் வீட்டில் சில காலம் தங்கியிருந்தோம். இது பழங்கதை அல்ல. நமக்குள்ள சொந்தம் 40 ஆண்டுகால இணைப்பு என நான் நினைக்கின்ற போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அமர்ந்திருக்கும் மேடையில் திமுக நண்பர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நண்பர்கள் என பலர் உள்ளனர் முன்பெல்லாம் இந்த மேடையில் ஒருவர், இருவர் அதிகமானால் 3 பேச்சாளர்கள் அமர்ந்திருப்பர். ஆனால் இன்று சொற்பொழிவாளர்கள் அதிகம் பேர் மேடையில் அமர்ந்திருந்த போதும் பேசுவதற்கு உரிய நேரம் இல்லை. அந்தளவிற்கு சொற்பொழிவாளர்கள் அதிகரித்துள்ளனர். இதற்கு காரணம் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது, வளர்ந்து கொண்டிருக்கிறது, வளர்ந்து கொண்டே இருக்கும்

இங்கு என்.ஜி. ராமசாமி இல்லத்தில் தங்கி பழகியதை எண்ணி பார்க்கிறேன். கோவைக்கு வரும் போது எல்லாம் எண்ணி பார்க்கிறேன். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெருவாரியான வெற்றியை பெற்று காலடியில் வைப்போம் என்று தெரிவித்தனர். இதனால் ஆணவ மனப்பான்மை ஏற்படும். எனவே வெற்றியை காலடியில் வைக்க வேண்டாம். கழுத்தில் போடுங்கள். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அப்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

செம்மொழி மாநாட்டில் தமிழ் தாய் வாழ்த்தை தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாட விடவில்லை. இதற்கு முன் தஞ்சையில் நடந்த தமிழ் மாநாட்டின் போது அம்மையார் முதல்வராக இருந்தார். நான் அவரை அம்மையார் என்று தான் அழைப்பேன். அவர் வேண்டுமானால் என்னை கருணாநிதி என்று குறிப்பிடட்டும். சிலர் கூட என்னிடம் இதுகுறித்து கேட்டார்கள். அந்த அம்மையார் உங்கள் பெயரை சொல்லி அழைக்கின்றாரே? என்றனர். எனது அப்பா, அம்மா வைத்த பெயரை தானே கூப்பிடுகிறார். சிலர் வேண்டுமானால் பெயரை மாற்றி கொள்வார்கள். ஆனால் நான் எனது பெயரை மாற்றி கொள்ள மாட்டேன்.

பெரியார் கொள்கைக்கு, அண்ணாவின் இலட்சியத்திற்கு எதிராக இருந்தால் மாற்றி கொண்டிருப்பேன். இது பொதுவான பெயர். அனைத்து கடவுள்களுக்கும் உள்ள பெயர். கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து கடவுள்களில் கருணை உள்ள கடவுள்களுக்கு உள்ள பெயர். விளம்பரத்திற்காக நான் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதாக கூறினார்கள். சொல்லி விட்டுபோகட்டும்.

தமிழ் தாய் வாழ்த்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று தான் தெரிவித்தேன். ஆனால்,
‘அவ்வையும், ஆண்டாள் அம்மையாரும் அழகுற பாடி தமிழ் வளர்த்தனர், அன்னை ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தமிழ் வளர்க்கிறார்’ என தமிழ் தாயை அந்த அம்மையார் தனக்கு இணையாக்கி பேசினார். நான் தமிழ் தாயின் மகன். சுய விளம்பரம் தேடுபவர் அல்ல நாம். கழக ஆட்சியில் தான் தீரன் சின்னமலைக்கு சிலை வைக்கப்பட்டது. பெஸ்ட் ராமசாமி உள்ளிட்டோர் பொன்னர்& சங்கர் படத்தை பார்த்தனர். தீரன் சின்னமலை படத்தையும் உருவாக்க வேண்டும். அதனை நாங்கள் பார்க்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தனர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எவ்வாறு தீரன் சின்னமலை விரட்டியடித்தார் என்ற வீர சாகங்களை எழுதி வைத்துள்ளேன்.

பொன்னர்&சங்கர் படம் வெளி வந்த பின் விரைவில் தீரன் சின்னமலை படமும் வரும். படங்கள் மூலம் கிடைத்த தொகையை நலிந்த, ஏழை&எளிய மக்களுக்கு காசோலை, டிராப்ட் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னர்&சங்கர் பட தயாரிப்பாளர்கள் தந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தீரன் சின்னமலை படம் மூலம் கிடைக்கும் தொகையை கோவை வாழ் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவேன்.

தேர்தல் அறிக்கையில் மேலும் சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இங்குள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவே ஆகிவிட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனால் தான் ஒரு கோரிக்கை நிறைவேற்றிய பின் மற்றொரு கோரிக்கையை என கோரிக்கையை வைத்து கொண்டே செல்வார்கள். அதுபோல் மேடையில் பேசியவர்கள், மேடையில் இருப் போர் பல்வேறு கோரிக் கையை முன் வைத்துள்ளார்கள். இவற்றை பரிசீலித்து ஆவண செய்யப்படும் என்று உறுதியளிக் கிறேன்.

கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மீண்டும் கழக ஆட்சி அமையும் பட்சத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும். தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க உயர் ரக கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த னர். அது, வழங்கப்படும். திருப்பூர் சாய கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நீதி மன்ற நடவடிக்கையால் தாமதப்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எனது கனவிலும், நனவிலும் துன்புறுத்தும் திருப்பூர் சாய கழிவு பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பேசி, மத்திய&மாநில அமைச்சர்களுடன் ஒன்று கூடி பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்கள் மூலமாக கடன் வாங்கி வீடு கட்டிய பலர் அசலையும் கட்டமுடியாமல், வட்டியும் அதிகரித்து அவதிப்படுகின்றனர் என்ற தகவல் தரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் ஏற்று கடந்த காலத்தில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களில் வாங்கப்பட்ட கடனுக்கான வட்டி அறவே தள்ளுபடி செய்யப்படும்.

சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான ஊக்கத்தொகை மாநில அரசு மூலம் பரிசீலித்து செய்து கொடுக்கப்படும்.

இங்கே பேசிய காங்கிரஸ் பெரியவர் ஒருவர், என்னை வாழ்த்தி விட்டு எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்தீர்கள். அதேபோல் மின்சார பற்றாக்குறையையும் தீர்த்துக்கொடுக்கவேண்டும் என்று கூறினார். அவருக்கு சொல்வது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் நான் சொல்லி கொள்ள விரும்புவது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி மற்ற மாநிலங்களுக்கு நாம் வினியோகம் செய்யும் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை ஏற்பட்டு வரும் சிரமங்களை நாம் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டும் போது தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். உணவு தேவை, மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய மின்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் தான் புதிய திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

தற்போது இரண்டு தேர்தல் அறிக்கைகள் வந்துள்ளது. அதில் ஒரு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நம்பும்படியாக இல்லை. கருணாநிதி கொடுத்த தேர்தல் அறிக்கை தான் நம்பும்படியாக உள்ளது. கடந்த காலத்தில் நாம் சொன்னவற்றை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம் என்பதால் நம்பலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் நடைபாதை வாசிகள் நடமாடமுடியாத நிலை இருந்தது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் நள்ளிரவில் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். இது தான் கடந்த ஆட்சியில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த என்னையே நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்து அடித்து கொடுமைப்படுத்தினார். இது தான் அம்மையார் ஆட்சியின் சிறப்பு அம்சம்.

அந்தப்பழம் வேண்டுமா, இந்த பழம் தேவையா என்பதை எண்ணிப்பாருங்கள். அரசாங்க அதிகாரிகளை ஊழியர்களை, எப்படி சவுக்கடி கொடுத்து வேலை வாங்குகிறேன் பாருங்கள் என்று பெண் ஹிட்லராக ஆட்சி செய்ததை எண்ணி பாருங்கள்.

இந்த அம்மையார் ஊழலை பற்றி பேசுகிறார். அம்மையார் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில் புள்ளியில்லை, கமா இல்லை, கடைசியில் மொழி பெயர்ப்பு சரியில்லை என்றெல்லாம் கூறி காலதாமதம் செய்து வந்தார். வழக்கு விசாரணை முடிந்து இந்த தேர்தலுக்கு முன்பாகவே தீர்ப்பு அறிவித்திருக்கப்படும். தீர்ப்பு தள்ளிப்போகலாம். பெங்களூர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் கூட நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். தண்டனை கிடைப்பது வேண்டுமானால் தள்ளிப்போகலாம். தாமதமாகலாம்.அவர் அணிந்திருந்த ஒட்டியாணம், வைர நகைகள், தலைகிரீடம் இதுவெல்லாம் யார் வீட்டு சொத்து. அனைத்தும் தமிழனின் சொத்து. ஏழை தமிழன் கொடுத்த வரிப்பணம். தமிழன் ஒரு முறை ஏமாந் தான். அதற்காக ஒவ்வொரு முறையும் ஏமாந்து விடுவான் என்று எண்ணிவிடக்கூடாது. .

தமிழகத்தின் 6வது முறையாக நீ தான் முதல்வராகவேண்டும் என்று நீங்கள் எல்லாம் கூறினீர்கள். நான் அதை பதவியாக நினைக்கவில்லை. உங்களுக்கு பணி விடை செய்யும் வாய்ப்பாக தான் கருதுகிறேன். இவனை விட்டால் நமக்கு ஒரு நல்ல வேலையாள் கிடைக்கமாட்டான் என்று நீங்கள் என்னும் அளவுக்கு தான் பணியாற்றி வருகிறேன்.
இங்கு காலையில் நான் வந்தது முதல் இரவு வரையிலும் எனக்காக காத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என தெரியவில்லை. என்னையே உங்களுக்கு தருவதை தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை. தந்தை பெரியாரின் எண்ணங்களை, அண்ணா வின் லட்சியங்களை ஏந்தி இந்த சமுதாயத்திற்கு உழைக்கும் பணியினை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். அந்த பணியை நீங்களும் தொடர்ந்து செய்யவேண்டும். தேர்தல் பணியாற்றுவதில் சில இடங்களில் ஒற்றுமை குறைவாக இருப்பது தான் குறை. அதை சரி செய்து ஒற்றுமையை உறவாக்கி, உறுதிப்படுத்தி வெற்றியை ஈட்டுவோம்.