திங்கள் - வல்லிக்கண்ணன்

திங்கள்
        பாரதி அடிச்சுவட்டிலே
        ’இளவல்’ (வல்லிக்கண்ணன்)

திங்களை வாழ்த்துகின்றோம்.
அது இனியது.
அழகின் சுடர்
ஒளியின் களஞ்சியம்
இன்பத்தின் வித்து
காதலுக்கு ஜீவன்
திங்கள் நன்று
அது வாழ்க.

திங்கள் வளர்வது; வளர்ச்சி தருவது. திங்கள் ஒளியுள்ளது ஒளி இல்லாதது. திங்கள் தேய்ந்து மறைவது, பிறப்பது, வளர்வது, மிளிர்வது, மனித வாழ்வு போல.

அது அழகு தருவது.
ஆனந்தம் அளிப்பது.
சாந்தி கொடுப்பது.
அது நன்று.

இரவின் கார்நிறம் ஆனந்த நிலையம்,
எண்ணற்ற மீன்கள் இன்பத் துகள்கள்
இருள் நீர்ப் பரப்பில்
மின்னும் மீனிடை
மலரும் திங்கள் மோகன மலரோ?
தேவருலகத்து ஒளித் தாமரை அதுவோ?
சக்தியின் சிரிப்போ?
இயற்கையின் முகமோ?
ரதி முகப் பிம்பமோ?
அரம்பையர் அழகு காணும் பளிங்கோ?
எதாயின் என்?
அது எழில் நிறைந்தது.
அது வாழ்க.

திங்கள் அழகானது.
அதுவே அழகு தருகின்றது.
அதன் ஒளி அமுதத் தூற்றல்.
சந்திரிகை பனி ஒளி தெளிக்கிறது.
பாரெங்கும் பால்ஒளிப் பகட்டு.
வான் வெளி, கோபுரம்,
தென்னை, மரக் கூட்டம்,
குட்டிச் சுவர், குப்பைமேடு
கட்டாந் தரை, நீர் நிலை,
துள்ளும் கடல்
அகண்ட மணல் வெளி
மங்கையர் வனப்பு
மிருகத் தோற்றம்
எல்லாம் சொக்கழகு பெறுகிறது.
அம்புலி மயக்கும் சக்தி உடையது.
அது இனியது.

திங்களே,
நீ வளர்ந்து பூர்ண முறுகின்றாய்.
பின் தேய்வது ஏன்?
ஏக்கமா, கவலையா, காதலா?
துக்கமா, வெறுப்பா, சோர்வா?
இருளைக் கொல்கிறாய் நீ.
அந்த இருளே தின்கிறதோ உன்னை?
மீண்டும் மலர்கிறாய் ஓர் நாள்.
அத் தோற்றம் கவர்ச்சி மிக்கது.
உமையின் சிரிப்புப் போல.

சசியே,
ஞாயிறு உன் காதலனா?
தந்தையா? போஷகனா?
ஞாயிறு வெம்மை தருவது.
நீ வெம்மை பெற்றாய்.
ஆனால் தண்மை சிந்துகின்றாய்.
குளிர் நிலவு உன் மேனியின் கதிர்.
அம்புலி, அழகின் உரு நீ.
அழகு ஒளி பெற்றாய். ஆயினும்
உண்மை ஒளி உனக்கு இல்லையோ?
பின் இந்த சோபை பெற்றது ஏனடி?
இரவல் உடையில், மேல் பூச்சில்
மின்னும் சுந்தரி நீயோ?
வெறும் பகட்டுக்காரி தானோ?
வெம்மைக் கதிரை
குளிர் நிலவாக்கும்
மாயக் கண்ணாடிதானோ?

உயிர்களுக்கு உணர்வூட்டுகிறாய் நீ.
மலருக்கு மகிழ்ச்சியும்
கடலுக்கு எழுச்சியும்
மனிதனுக்கு இன்பமும்
இரவுக்கு எழிலும் தருகிறாய்.
இருளின் மோனத்தில் புரளும் உயிர்கள்
இன்ப மூச்செறிகின்றன
உன் மென் ஸ்பர்சம் பட்டதும்.
நீ சிரிக்கின்றாய்.
வாழ்க.

திங்களே,
நீ ஞாயிற்றின் மகள் தான்.
ஆம். சந்தேகம் இல்லை.
ஒளியும் ஞாயிறும்
இணங்கிப் புணர்ந்த அதிர்ச்சியில்
பிறந்தாய் நீ.
செந்தழல்ப் பிழம்பின் பகுதி நீ.
ஒளி உயிர்ப்பின் சிறு உயிர் நீ.
செங்கதிரோனின் வெண் மகள் நீ.
உன்னுடன் பிறந்த கோளக் கூட்டங்கள்
உன் சோதரர் என்றுணர்.
சுக்கிரன், புதன், சனி,
யுரேனஸ், நெப்த்யூன் …
எல்லாம் உன் அண்ணன் தம்பியர்.
உங்கள் குலம் பெருமை பெற்றது.
உங்கள் புகழ் சிறந்தது.
நீங்கள் வாழ்க.

ஒளி உங்கள் தாய்.
அவள் உயிருக்கு உயிரூட்டும் மாயக்காரி.
அவளை மறைக்க முடியாது,
கொல்ல முடியாது, ஒழிக்க முடியாது.
ஆத்மாவைப் போன்றவள் அவள்,
அவளை வாழ்த்துகின்றேன்.
வணங்குகின்றேன்.
ஒளி வாழ்க.
ஒளிக் கூட்டம் வாழ்க.
சூரியன், சந்திரன், கோளங்கள்
சிருஷ்டியின் சிறப்புகள்.
அவை வாழ்க!


கிராம ஊழியன், 1-ஆகஸ்ட்-1944,
பொள்ளாச்சி நசன் வலைத்தளத்தில் pdf ஆக உள்ள பத்திரிகை.

1 comments:

ப.கந்தசாமி said...

கவிதை நல்ல கருத்துடன் இருக்கிறது.

என்னுடைய இந்தப்பதிவைப் பார்க்கவும்
http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html

உங்களுடைய மங்கல வாழ்த்துப்பாடல் பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன். மங்கல வாழ்த்துப்பாடல்களை யூட்யூப்பில் தரவேற்றி அவைகளின் சுட்டிகளையும் கொடுத்துள்ளேன். உங்களுடைய கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.