ஜார்ஜ் வில்லி - வழக்குரைஞர் ஹ்யூஸ்டன் உரை - ஸ்ரீலங்கா

ஹூஸ்டனில் வாழும் வக்கீல் ஜார்ஜ் வில்லி ஸ்ரீலங்கா ஜனாதிபதி முன்னர் காலரியா வெஸ்டெர்ன் ஓக்ஸ் வரவேற்பறையில் இனி ஸ்ரீலங்கா அரசு நேர்மையுடன் நடந்துகொண்டு தமிழர்க்கு உரிமைகளை வழங்கி நல்லிணக்கம் ஏற்படுத்த அறிவுரை வழங்கினார்.

நா. கணேசன்மேதகு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அவர்களே, திருமதி இராஜபக்சே, கனம்பொருந்திய காங்கிரஸ் பெண்மணி ஷீலா ஜாக்சன் லீ! ஷீலா, தூதரக முதல்வர் அரோரா, முதற்கண் இந்நிகழ்வை ஏற்படுத்தியமைக்கு, என் பாராட்டுகள், மேலும் இது நடப்பதற்கு என் நன்றி.

தகைமைசால் விருந்தினர்களே, சீமாட்டிகளே, சீமான்களே, மேதகு ஸ்ரீலங்கா தலைவரை இம்மாநகருக்கு வரவேற்கிறேன். இங்கிருக்கும் ஓக் மரங்களையும், நையாண்டிப் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நீங்கள் இவ்விடத்தை ஸ்ரீலங்காவென்றே தவறாக மயங்கக் கூடும்.

நான் பிறந்த மண்ணோ ஸ்ரீலங்கா, என் தாயார், என் துணைவியார் சாந்தியின் பெற்றோரும், எங்கள் பாட்டன், பாட்டிகளும், பிறந்து மடிந்ததும் கூட அப்புனிதமானத் தாய்நாட்டு மண்ணிலே தான். மேதகு தலைவரே, நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, பின்னர் எனக்கு 10 அகவை இருக்கையில் கொழும்புவிற்குக் குடிபுகுந்தோம். என் துணைவி பிறந்ததோ பதுளையில், வளர்ந்தது தியாத்தலாவையில். அங்கே அவளின் தந்தை அனைவராலும் மதிக்கப்பட்ட அரசுப்படை கேப்டன்.

நான் யாழ்ப்பாணத்தில் வேப்ப மரங்களின் சுகந்த நறுமணத்தை நுகர்ந்தேன்; கொழும்புவில் வளர்கையில், பள்ளி செல்லும் போது, பள்ளியின் வெண்சீருடையில் செங்கறைகள் படியும்படி சிவந்த நாவல்பழங்களைச் சுவைத்தேன். மரங்களிலே பழுக்கும் பலாக்கனியைக் காகங்கள் கொத்திக் குடையும் காட்சி தரும் மன ஈர்ப்பை அறிவேன்.

புத்த பூர்ணிமை வெசாகத்தின் போது போடப்படும் வண்ணமயமான பந்தல்களை அறிவேன்; ஏழைகளுக்கென்று தானசாலையில் தரப்படும் உணவினை வெட்கமின்றி உண்டிருக்கிறேன். கோயில்களில் ஒலிக்கும் மந்திரங்களை கேட்டிருக்கிறேன்; தூவப்படும் மல்லிகை மலர்களின், ஏற்றி வைக்கப்படும் ஊதுவத்திகளின் மணங்களை நுகர்ந்திருக்கிறேன். பேராயர் ஹீராத் அவர்களின் திருப்பலிப் பூசையில் உதவி புரிகையில் அப்புனித தேவாலயத்தில் ஒலிக்கும் மணியோசையைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் 1975இல் நான் ஸ்ரீலங்காவை விட்டேகியதில் இருந்து, அங்கே சொல்லொணா வலிகளும், துயரமும், வேதனையும் நிறைந்துவிட்டது. சாதாரணமாக, நெல்வயல் வெளிகளுக்கு தன்னுடைய புனித நீரை மட்டுமே கொணர்ந்த மாவலி மிக்க ஜீவநதி மஹாவெலி கங்கை, சிங்களவர் தமிழர் இருவருடைய குருதியைப் பொழிந்தது. இங்கே அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு, எம் முன்னோரின் நிலமானது, சொர்க்கத்தை விட்டுக் கீழிறங்கி நரகமெனும் ஆழ்குழியில் போனதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார் செய்த குற்றமென்று எவருமே நிச்சயமாய் கூற முடியாது; ஆனால் குற்றம் குறை கூறும் காலமெல்லாம் மலையேறிப் போனது.

மேதகு தலைவரே, எங்களுடையது எல்லாளனிடம் இருந்து வந்ததைப் போல, உங்கள் சக்தி துட்டகாமனுவிடம் இருந்து வந்திருக்கலாம். எப்படி அந்த துட்ட காமனு தன்னுடைய கந்துலா என்ற யானையின் மீதிருந்து எல்லாளனைப் போரிலே கொன்றான் என்று நினைவுகூருங்கள். துட்டகமனு ஸ்ரீலங்காவை முதன்முதலாக ஒன்று சேர்த்தமைக்காக நினைவு கொள்ளப்பட்டாலும், கூடவே இன்னொன்றிற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறான். எல்லாளனைப் போரில் தோற்கடித்து கொன்றபின்னர், அம்மாவீரனின் வீரத்தை மெச்சி ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டியதோடன்றி, அனைத்து மக்களும் அதன் முன்னர் வரும்போது, நின்று கீழிறங்கி மரியாதைகள் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டான். இதனால் தானொரு உயர்ந்த பண்புடையவன் என்பதை மட்டுமல்லாது, கூடவே சிறந்த அரசியல்வாதியென்றும் நிலைநாட்டினான். ஏனெனில் எல்லாளனின் தோல்விக்குப்பின் தமிழ் மக்களையும் ஆளவேண்டும் என்ற பேருண்மை அவனுக்குத் தெரிந்திருந்தது.

மேதகு தலைவரே, நம்பிக்கையும், நற்பேறும், சிறந்த அரசியல் திறமையும், உங்களை, வரலாற்றின் மறக்கமுடியாத, தனிப்பட்டதோர் நிலையில் ஏற்றி வைத்திருக்கிறது.

வருங்கால இளைய சந்ததியானது, மகிந்த ராஜாபக்சே என்ற சிறந்த தலைவர், சிறந்த போராளி, மற்றவர்களால் முடிக்க இயலாமல் தோல்விகண்ட, 25 ஆண்டுகள் நடந்த பெரும் புரட்சியை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று தங்கள் வரலாற்று நூல்களில் படிக்கப் போகிறார்கள். அவர்கள் உங்களை 21ஆம் நூற்றாண்டின் நவீன துட்ட காமனுவென்று கூடச் சொல்லலாம். ஆனால், துட்டகாமனு என்ற பெரும் வீரனின் பெயரை ஏற்க வேண்டுமெனில், மேதகு தலைவரே, நீங்களும் நினைவுச்சின்னம் எழுப்பியாகவேண்டும். வெறும் டகோபா [1] அல்லது இன்னொரு காரை சுண்ணத்தால் எழுப்பிய தூபியல்ல அது. பல்லிருக்கும் வலிய சட்டங்களால் கட்டிக் காக்கப்படும் புதிய திட்டமாக இருக்கவேண்டும் அந்த நினைவுச் சின்னம்.

58களில் ஏற்பட்ட கலகங்களைத் தூண்டிய தவறுகளை செய்யாதீர்கள். பல்கலைக் கழகங்களில் நுழையவேண்டும் என விரும்பும் தமிழர்களை தடுத்து நிறுத்தாதீர்கள். தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்று அவர்களே எண்ணும்படிச் செய்யாதீர்கள். தமிழர்களின் மதங்களை மதியுங்கள். தமிழ்மொழியை மதியுங்கள். தமிழர்களைப் பற்றி நீங்கள் முக்கியமாக அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று உண்டு. தமிழர்கள் தங்களை மொழியை தெய்வமாக மதிப்பவர்கள். உலகில் அப்படிப்பட்ட மொழிப்பற்று உடைய இனம் மிகக்குறைவு.

உங்கள் ஆரம்பகால அரசியலில் வழக்குரைஞராக இருந்திருப்பதால், நீங்கள் இளமையில் மனித உரிமைக்குப் போராடும் உள்ளம் கொண்டிருந்தீர்.

இப்போது உங்களூக்கு பேர், புகழ் வந்திருக்கிறது. தன்னுடைய படையெடுப்புகளை வெற்றிகரமாக முடித்து, ரோமுக்கு வரும் ஜூலியஸ் சீசரைப் போன்று, அதிகாரம் பெற்ற வரலாற்று நாயகன் நீர். நீங்கள் கேட்பதை எவருமே மறுக்க முடியாது. நீங்களூம் நானும் சட்டப் பள்ளியில் பயின்ற சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட ஷரத்துகளை மீண்டும் அங்கீகரிக்கும்படி நாடாளுமன்றத்திற்குக் கட்டளையிடுங்கள். எங்கள் உதவி தேவையெனில், இவ்வுரை கேட்கும் சபையார் பலரும் செய்ய முன்வருவது போலவே, அதை நான் இலவசமாகவே செய்து அளிக்கிறேன். தமிழர்கள் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று தாங்கள் அளிக்கப் போகும் உறுதியை எதிர்நோக்கி நிர்வாணமாகவும், பசியுடனும் ஏதிலிகளாய்க் கிடக்கிறார்கள்.

அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் பிரபாகரனைக் முடித்துவிட்டீர்கள்; ஆனால் மற்றொரு பிரபாகரன் வளர்தற்கு விதைக்காதீர்கள். கத்திகளாலும், துமுக்கிகளாலும், மற்றொரு பிரபாகரனின் வரவை தடுக்கவே இயலாது. மனத்தாலும், மகத்தான அறிவாலுமே அதனைத் தடுக்க இயலும். நீங்கள் புத்தரிடம் கற்ற கருணை, உண்மை, நீதி இவை போன்ற ஆயுதங்களால் மட்டுமே அதைச் செய்ய இயலும். தம்மபதத்தின் கூற்றின்படி, வெறுப்பினை அன்பினாலன்றி, வெறுப்பு கொண்டு அழிக்க முடியாது. இது புத்தர் சொன்ன பழமையான நியதி.

மேதகு தலைவரே, ஸ்ரீலங்கா செல்ல, இந்த இனிய நகரை விட்டேகும் போது, நீங்கள் எனக்கு உறுதிகள் தர வேண்டும். ஒரு பத்து வயது சிறுவன் வெள்ளைச் சீருடையுடன் பள்ளி செல்லும் போது, அச்சீருடையில் சிவந்த நாவல் பழக்கறையன்றி, வேறு சிவப்புகறைகள் இல்லாதிருக்க வேண்டும். காலையில் காகங்கள் பழுத்த பலாப் பழத்தையன்றி வேறு எதையும் குத்திக் கிழிக்கக் கூடாது. வேம்பு மரங்களில் நான் நுகர்ந்த வாசனைதரும் பழங்களன்றி வேறெதுவும் தொங்கக் கூடாது.

மேதகு தலைவரே, எங்களை மீளவும் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள்; மீளவும் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள். நன்றி.

தமிழில்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி

[1] சைத்தியத்துக்கு ஒரு பெயர்: தாதுகர்ப்பம். மேலைநாட்டார் அதை ‘டகோபா’ ஆக்கினர். (நன்றி: இரா. நாகசாமி).

ஆங்கில உரை:

Your Excellency, Mrs. Rajapaksa, Hon Congresswoman Sheila Jackson Lee. Sheila thank you for making this, really appreciate this and Consul General Arora, Consul thank you for making this.

Distinguished guests, Ladies and Gentlemen, welcome Your Excellency to this great city. If you can ignore the oak trees and the mockingbirds you could easily mistake this for Sri Lanka.

It is in Sri Lanka that I was born, and my mother and the parents of my wife Shanthi, our grand fathers and grand mothers are all buried under the sacred soil of my motherland. I grew up Your Excellency, in Jaffna and moved to Colombo when I was only 10 years old. My wife is from Badulla, grew up in Diyatalawa where her dad was a well a respected captain in the army.

I have smelt the sweetness of Magosa trees in Jaffna and taste of the Red Jumbu fruits that left red stains on my white shirt as I walked to school in Colombo. I know the allure of Jack fruits ripening on the trees as crows begin to break them open.

I have seen the bright colour of pandals during Wesak and shamelessly ate food at Dansala meant for the poor. And I have heard the chanting of Kovils and inhaled the smell of jasmine and Joss sticks. I’ve heard the bell of All Saint’s church as I assisted Father Herath during Mass.

But since I left Sri Lanka in 1975 there has been such pain, such sorrow and such agony. The mighty Mahaweli Ganga that usually brings its sacred waters to the paddy fields spat out blood. Both the Sinhalese and Tamils. From up here in the United States I have watched the land of my forefathers descend from paradise deep into hell. No one can say with certainty who is to blame but the time for blaming is long gone.

Your Excellency, your power be descended from Dutugemunu and my people from Elara. Remember how Dutugemunu fought Elara on his Elephant Kandula and killed Elara. Dutugemunu of course is still remembered for uniting Sri Lanka for the first time. But he is also remembered for something else. After defeating and killing Elara he built a monument for Elara out of respect for his worthy opponent. He ordered all the citizens of the land to stop, dismount and pay respect to Elara. In so doing he not only showed what a great noble man he was. But also proved to be a great politician. He knew that He had to rule the Tamil people too after the defeat of Elara.

Your Excellency, faith and fortune and your great political skills have placed you at a unique point in history.

Children years to come, will read in their history books, that a great leader, a great warrior by the name of Mahinda Rajapaksa finally defeated the rebellion after nearly 25 years when several before him failed. They may even say that you are Dutugamunu of the 21 century. But if you want to wear Gemunu’s mantle, Your Excellency, you will have to build a monument too. That monument does not have to be a Dagoba or a building. It will have to be new policy backed by laws with teeth to enforce.

Do not make the mistake that started 58 riots. Do not hold back Tamils who want to get into Universities. Do not make the Tamils feel like they are second class citizens. Respect their religion, and respect their language. There is something about the Tamil people you need to know Your Excellency. To them their language is God. There are only few cultures in the world which has such devotion to the language.

You were trained as a lawyer and in your early career you were a formidable defender of human rights.

Now you have the popularity, you have the power of a hero, like Julius Caeser, returning to Rome from his conquests. No one can deny what you ask. Ask the parliament to pass some entrenched clauses; you and I read in law school. Then we have had to study the Soulbury Constitution. If you need my help I will give it free like many in this audience would. The Tamil people are naked and hungry looking for you to assure them that there is a place for them.

Make sure they have one. You killed one Prabhakaran but do not let another grow. You cannot prevent another one with swords and guns. You can only do that with your heart and wisdom. Compassion, truth and justice, you learnt from Buddha are the only weapons you will need. According to Dhamma Pada, Buddha said that hatred does not cease by hatred at any time. Hatred cease by love. This is an old rule. That's what the Buddha said.

Your Excellency, as you leave this fair city and return to Sri Lanka, promise me that a 10 year boy walking to school tomorrow in his white shirt will have no other red stain than from the Jumbu fruits. The morning crow will not open anything other than the jackfruit. That there will be nothing else hanging from the Magosa trees, than the fruits I smelt.

Your Excellency return us to paradise, return us to paradise. Thank You