தமிழ்மணம் பாடல்கள்! - பாரதிதாசன், தஞ்சை ராமையாதாஸ், திருச்சி தியாகராசன்

தமிழ்மணம் ( http://tamilmanam.net ) தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவுவிழாவைச் சென்ற ஆகஸ்ட்டில் கொண்டாடியாயிற்று. தமிழ்மணம் குழுவின் உழைப்பால் பதிவுலக வாசகர்களுக்கு இலவசச் சேவை தொடர்கிறது. வழமைபோல் இவ்வாண்டும் தமிழ்மணம் விருதுகளை அளித்து சிறந்த பதிவுகளைக் கௌரவிக்கிறது. தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009. இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா:
http://blog.thamizmanam.com/archives/187

தமிழ் இலக்கியங்களில் தமிழ்மணம் என்ற சொல்லாட்சி உள்ளதா? 20-ஆம் நூற்றாண்டு அல்லது அதன் முன்னர். பாரதிதாசனின் காதல் பாட்டுகள் நூலில் கிடைத்த பாடலைத் தருகின்றேன். இணையத்திலே நேரத்தைச் செலவிடுவதால் மனையாளின் சீறாட்டு! தமிழ்மணமே கதியென்று இருப்போருக்குப் பொருத்தம்தான்! கூடவே ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) திரைப்படப் பாடலும், தண்டபாணி தேசிகரின் பிரபலமான பாடலையும் கேட்கலாம்.

தமிழ்மணம் என்ற சொல் இழைகிற பாட்டிருந்தால் தாருங்கள்! நன்றி.

நா. கணேசன்



கன்னித் தமிழ்மணம் வீசுதடி!
தஞ்சை ராமையாதாஸ்

பாடியவர்: பி. சுசீலா, அடுத்த வீட்டுப் பெண் (1960)

கன்னித் தமிழ்மணம் வீசுதடி!
காவியத் தென்றலுடன் பேசுதடி! (கன்னி)
காவிலே பூவிலே காணுமின்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே! (கன்னி)
சோலைக்குயில் மாலையிலே இன்னிசையும் பாட
நீலமயில் ஆவலுடன் தோகைவிரித் தாட
புள்ளிமகள் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓட
பொங்கும் கதிரவன் தங்கத் தகிடாய்
பூவாரம்போல் சூட!
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்தச் சோலை இதுவே! (கன்னி)
வட்டம் போடும் சிட்டுகளே! வானகத்தில் நாமே   
பட்டம் போல வேகமாய்ப் பறந்து செல்லு வோமே!
இஷ்டம்போல உல்லாசமாய் ஓடியாடுவோமே!
இன்னோசைதான் நாமே இன்ப கானம் பாடுவோமே!
இன்ப கானம் பாடுவோமே
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்தச் சோலை இதுவே! (கன்னி)


Get this widget | Track details | eSnips Social DNA



தமிழ் வாழ்க்கை
பாரதிதாசன்
இரண்டடிதான் வாழ்க்கைத்துணை
என்றானே - என்னை
ஏறெடுத்துப் பார்க்காமலே
சென்றானே
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
கூத்துண்டா - அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
கற்கண்டா? (இரண்டடிதான்)
மேகலையும் கையுமாக
வாழ்கின்றான் - என்
விருப்பம் சொன்னால் சீறி
என்மேல் வீழ்கின்றான்
சாகையிலும் அவள் அகமே
தாழ்கின்றான் - அவன்
தமிழ்மடந்தை புறப்பொருளே
சூழ்கின்றான் (இரண்டடிதான்)
தமிழ்மணத்தில் என்னையும்வை
என்றேனே - அவன்
தனிமனத்தில் இருநினைவா
என்றானே
தமியாளும் இந்தி அன்றோ
என்றேனே - நான்
தமிழனடி என்று சொல்லிச்
சென்றானே!



தாமரை பூத்த தடாகமடி! 
கவிஞர் திருச்சி தியாகரா’சன்
பாடியவர்: எம். எம். தண்டபாணி தேசிகர்
பல்லவி 
தாமரை பூத்த தடாகமடீ - செந்
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடீ - ஞானத் ( தாமரை)
அனுபல்லவி 
பாமழை யால்வற்றாப் பொய்கையடீ - தமிழ்ப்
பைங்கிளி கள்சுற்றிப் பாடுதடீ - ஞானத் (தாமரைப்)
சரணம் 
காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவிம கிழும்தமிழ்த் தென்றலதே - இசை
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞானத் (தாமரை)
ஆதாரம்: ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்க் கவிதைக் களஞ்சியம், 1960
நன்றி: சு. பசுபதி, டொராண்டோ, கனடா

எம். எம். தண்டபாணி தேசிகர் - தாமரை பூத்த தடாகமடீ!


சுதா ரகுநாதன் - தாமரை பூத்த தடாகமடீ!


யு. ஸ்ரீனிவாஸ், மண்டோலின் - தாமரை பூத்த தடாகமடீ!


திருவிழா ஜெயசங்கர், - நாதசுரம் - தாமரை பூத்த தடாகமடீ!

5 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

பதிவுக்கு நன்றி
மு.இளங்கோவன்
புதுச்சேரி

செல்வநாயகி said...

நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா! கன்னித் 'தமிழ்மணம்" பாடல்வரிகளைக் கேட்டு, மின்தமிழிலும், வேறு சில குழுமங்களிலும் பாட்டு எழுதச் சொன்னது இதற்குத்தானா?!

புதுசாவே எழுதிட்டாப் போச்சு:-))

Thamiz Priyan said...

நல்ல ஆராய்ச்சி.. ;-)

SP.VR. SUBBIAH said...

கன்னித் தமிழ்மணம் வீசுதடி
படம் அடுத்தவீட்டுப் பெண்
பாடியவர்: பி.சுசீலா!

ந்ன்றி வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா