1905-ல் உருவான வள்ளலார் சிலை (பண்ருட்டி மலையாண்டவர் கோயில்)

19.4.1905-ல் செய்யப்பட்ட வள்ளலார் சிலையொன்றை பண்ருட்டி அருகே கண்டுபிடித்துள்ளதாகப் படத்துடன் செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது. அது வள்ளலார் திருவுரு தானா? என்று உறுதிப்படுத்த சமயபுரம்/வடலூர் தவத்திரு. ஊரன் அடிகளார் போன்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கைகள் திருவருட்பிரகாச வள்ளலார் வைத்திருந்ததுபோலவே உள்ளன. அருட்பிரகாசர் என்பது க்ருபாபிரகாசர் என வடமொழி வாசகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது: "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி”. இந்தச் செப்புப்படிம வாசகம் ஒளிப்படமாக வெளியாக வேண்டும்.

நா. கணேசன்

தினமணி வாசகர் பின்னூட்டையும் இணைத்துள்ளேன்.


வள்ளலார் வாழ்ந்த மலையும், சிலையும் கண்டுபிடிப்பு
தினமணி, செப்டம்பர் 13 2009

பண்ருட்டி, செப். 11: வடலூர் ராமலிங்க அடிகளாரின் வெண்கலச் சிலையும், அவர் வாழ்ந்த மலையும் பண்ருட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள சி.என்.பாளையம், மலையாண்டவர் கோயிலில் (புஷ்பகிரி) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் வேல்முருகன் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், நெல்லிக்குப்பம் நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியது:

சென்னப்பநாயக்கன்பாளையம் உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் மலைக்கோயில், பண்டைய காலத்தில் மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

இம்மலையில் கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பல்லவர் கால சிவன் கோயில் இருந்ததற்கானச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இக்கோயிலில் அம்மன் சன்னதியிலிருந்த வெண்கலச் சிலை புத்தராக, சமண தீர்த்தங்கரரின் சிலையாக இருக்கலாம் என இக்கிராம மக்கள் கருதினர்.

சிலையை ஆய்வு செய்தபோது, "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி என்று சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படித்ததில் இது வள்ளலாரின் உருவச் சிலை' என உறுதி செய்யப்பட்டது.

48 செ.மீ. உயரமும், 22 செ.மீ. அகலமும், 60 செ.மீ. சுற்றளவும் உள்ள இச்சிலை, இடது கால் மீது வலது காலை மடித்து வைத்தும், இடது கை மீது வலக்கையால் மூடிய தியான நிலையில் அரைக் கண் பார்வையில் கருணை ததும்பும் முகத்தோடு காணப்படுகிறது.

இச்சிலையை 19.4.1905-ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் தருமம் செய்ததாக பொறிக்கப்பட்டுள்ளது.

சுபானு ஆண்டு புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.1.1823-ல் அவதரித்த வள்ளலார், ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ம் தேதி 30.1.1874-ல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருகாப்பிட்டுக் கொண்டவர்.

1862-ல் வள்ளலார் தனது அன்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு என்றும், தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இது வென்று குறிப்பதற்கூடாது' என்றும் அவர் எழுதியுள்ளார்.

எனவே அவர் வாழ்ந்த இடங்களில் மலையாண்டவர் மலையும் (புஷ்பகிரி) ஒன்று என அறியப்படுகிறது.

வள்ளலாருடன் சீடர்களும் வாழ்ந்துள்ளனர்.

அவருக்கு பின்னரும் சில சீடர்கள் சித்தர்களாக வாழ்ந்து சமாதி நிலை அடைந்துள்ளனர் என தெரிகிறது. "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி தரிசன வழிபாட்டு முறையை தொடங்கிய ராமலிங்க அடிகளாருக்கே வெண்கலச்சிலை அமைத்திருப்பது வியப்பிற்குரியது.

இச்சிலை, தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத ஒன்றாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

----------------


வாசகர் ஒருவர் பின்னூட்டு:

வள்ளலாரை பற்றிய அடிப்படை அறிவில்லாத ஆராய்ச்சி, தவறான கருத்து சொல்லப்பட்டுள்ளது. வள்ளலார் சமாதியை எதிர்த்தவர் ,அவர் சமாதி அடையவில்லை .அவரது தியான முறைகளும் வேறு .அவர் எப்போதும் வெண்மையான ஆடையால் உடலை முழுமையாக மூடியிருபார் ,செருப்பு அணிந்து கொள்வார் . இந்த விடயங்கள் சன்மார்கத்தை பின்பற்றுவர்களுக்கு நன்கு தெரியும் ,இந்த சிலை அவருடையது இல்லை என்பதும் தெரியும்.
By Unmai

0 comments: