புரட்சிக்கவிஞர் 1926-ல் பாடிய மணக்குள விநாயகர் திருப்புகழ்

மணக்குள விநாயகர் மேல் பாரதியார் நான்மணிமாலை பாடியுள்ளார். கவிஞர் பாரதிதாசன் முதலில் எழுதி வெளியிட்ட மூன்று நூல்கள் மயிலம் முருகன் மீது பாடப்பெற்றவை:
(1) மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு (1920)
(2) மயிலம் ஸ்ரீ ஷண்முகக் கடவுள் பஞ்சரத்நம் (1925)
(3) மயிலம் சுப்பிரமணியர் துதியமுது (1926). இதில் புதுவை மணக்குள விநாயகரைத் துதிக்கும் சந்தப்பாடலை முதலில் துதியாகப் பாடிச் சேர்த்துள்ளார்.

  மணக்குள விநாயகர் திருப்புகழ்
பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், 1926)



சந்தக் குழிப்பு:
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதானா



உலகுதி னமுனெழில் மலரடி
உளமதி னினைகுவ தெனிலவர்
உறுவினை எவைகளு மிலையென இனிதாமால்
உமையவள் தருமுதன் மகனுனை
உளமொழி மெய்களினி லடியவன்
உவகையொ டுதொழுகு வதையினி மறவேனே



மலியவல் பொரியொடு பயறுகள்
மதுநிகர் கனிவகை யனுதினம்
வரையென நிறையவு னதுதிரு வடிமேலே
மனமகி ழஇடுவ னருள்ககு
மரனழ ஒருகனி யையரனை
வலமிடு வதிலுணு மரிமகிழ் மருகோனே



மலைமத கரிஇடர் புரியுமொர்
மதியிலி அசுரனை ஒருநொடி
மடியவ மரர்துயர் களையுமொர் அடல்வீரா
வருபுதை யலினிதி யெனமலை
வழியரு வியெனவெ னதுகவி
வளமொடு புதியன வெனவிரி புவிமேலே



பொலிதர அவைபுகழ் பெறமிகு
புலவரெ வருமினி தெனநனி
புவியினர் உளமதி லொளிதர அருள்வாயே
புரைதவிர் தெருவரி சையொடமர்
புனிமொ ழியரிவை யர்களுறை
புதுவையி லமர்கய முகமுறு பெருமாளே

  மணக்குள விநாயகர் திருப்புகழ்
பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், 1926)



சந்தக் குழிப்பு:
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதானா



உலகு தினம் உன் எழில் மலர் அடி
உளம் அதில் நினைகுவது எனில் அவர்
உறு வினை எவைகளும் இலை என இனிதாமால்
உமையவள் தரு முதல் மகன் உனை
உளம் மொழி மெய்களினில் அடியவன்
உவகையொடு தொழுகுவதை இனி மறவேனே



மலி அவல் பொரியொடு பயறுகள்
மதுநிகர் கனி வகை அனுதினம்
வரை என நிறைய உனது திருவடி மேலே
மனமகிழ இடுவன் அருள்க
குமரன் அழ ஒரு கனியை அரனை
வலமிடுவதில் உணும் அரி மகிழ் மருகோனே



மலை மதகரி இடர் புரியும் ஒர்
மதியிலி அசுரனை ஒரு நொடி
மடிய அமரர் துயர் களையும் ஒர் அடல் வீரா
வரு புதையல் இனிதியென மலை
வழி அருவி என எனது கவி
வளமொடு புதியன என விரி புவி மேலே



பொலி தர அவை புகழ்பெற மிகு
புலவர் எவரும் இனிதென நனி
புவியினர் உளம் அதில் ஒளிதர அருள்வாயே
புரைதவிர் தெரு வரிசையொடு அமர்
புனி மொழி அரிவையர்கள் உறை
புதுவையில் அமர் கயமுகம் உறு பெருமாளே


வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம் கிருத யுகந்தான் மேவுகவே.
~ மகாகவி பாரதியார்

அன்புடன்,
நா. கணேசன்

பி.கு.: (1) இட்டவி : இட்டலி, வ > ல பிறழ்ச்சி கல்வெட்டுப் படிப்போரால் ஏற்பட்டாற்போல், ”உளமதி னினைகுவ தெனிலவர்” - வ என்பது ல என்று அச்சாகியுள்ளது. இது “உளமதில் நினைகுவது எனில் அவர்” என்று பதம் பிரிக்கவேண்டும். 'தொழுகுவது' என்றும் அடுத்து அதே வரியில் வருவதால் 'நினைகுவது' என்று கொள்க. ”நினைகுலது” என்றால் பொருள் இல்லை.

(2) இரண்டாமடியில் “வடிமேலே” என்பது பிழையாக “வடிவேலே” என்று அச்சாகி உள்ளது. “திருவடி மேலே” என்றால் தான் பொருள் உண்டு. வடிவேல் என்று முருகனை இங்கே குறிக்க இடமில்லை என்பதுணர்க.

--------------------

அன்னையும் விநாயகரும்!
வெள்ளி, 14 செப்டம்பர் 2007
Webdunia

ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார்.

அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார்.

என்ன வேண்டும் என்று வினவினார்.எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.

எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க முடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது. ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாக நிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன். இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்று அன்னை விரிவான பதிலளித்து முடித்தார்.

இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம்.

அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும், அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாக ஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர்.

புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குள விநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம் செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்கு இடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம் ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்கு அளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின் தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

3 comments:

Unknown said...

கணேசன்,
பாரதிதாசனின் புதுச்சேரி மணக்குள விநாயகர் பாடல் படிக்க இனிமையாக் இருக்கிறது. இந்தப் பாடலை சந்தி பிரித்துப் பதிவின் அடியில் தந்தீர்களானால் இசைச் சந்தம் தெரிந்து பாடுபவர்களுக்கு முன்னதும் சொற்களின் பொருள் விரும்புபவர்களுக்குப் பின்னதும் பயன்தரும். பதிவுக்கு நன்றி.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஆகச்டு 22, 2009

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புரை தவிர் தெரு வரிசையொடு
அமர் புனி மொழி அரிவையர்கள் உறை
புதுவையில் அமர் கயமுகம் உறு பெருமாளே//

சூப்பரோ சூப்பர்! பாவேந்தர் அருணகிரியார் ஸ்டைலில் கலக்கீட்டாரு போங்க! முடிச்ச விதமும்! :)

குமரன் (Kumaran) said...

அறிமுகத்திற்கு நன்றி ஐயா. இது பாரதிதாசனாரால் எழுதப்பட்டது என்ற குறிப்பு மட்டும் இல்லையேல் அருணகிரிநாதர் எழுதியது என்றே நினைத்திருப்பேன்.