நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு

தமிழ்மரபு அறக்கட்டளை முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் கூகுள்குழுவில் Twitter(http://twitter.com/) பற்றி அறிமுகம் ஒன்றை எழுதினார். அங்கே, 'மைக்ரோப்லாக்கிங்', ’ட்விட்டர்’ - இணையான தமிழ்ச் சொற்கள் பற்றி ஒரு சுவையான திரி இழைக்கப்படுகிறது.

நா. கண்ணன்: ட்விட்டர் என்பது மிகப் பிரபலமாகி வரும் ஒரு இணையப் போக்கு. இதுவொரு குறுஞ்சேதி யோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம். சும்மா உட்கார்ந்து கதையளக்க முடியாது. 140 அட்சரம். அவ்வளவு தான். வள்ளுவருக்குப் பிடிக்கும். இதை 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கேள்விக்கு விடையாக அறிமுகப் படுத்தினாலும், இது சும்மா, 'நான் மதிய உணவிற்குப் போகிறேன்' 'குட்நைட், தூங்கப் போகிறேன்' என்று சொல்ல வந்ததல்ல என்று தோன்றுகிறது. ஈரான் தேர்தல் விவரம் சுடச்சுட இவ்வோடையில் பரிமாறி யிருக்கிறது.

சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக (rhyme with twitter) ஒரு சொல் வேண்டும்!

ஆம். ட்விட்டர் நுண்பதிவுலகை (microblogging) தோன்றச் செய்துள்ளது! twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே. twitter-er = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” . சிட்டர் என்னும் சொல்லைத் திருவாசகத்தில் கூடக் காணலாம்: ’சிட்டாய சிட்டற்கே’ (திருவாசகம் 10, 7). வள்ளுவரின் வழித்தோன்றல்கள் நம் கணினிச் சிட்டர்கள்!

பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில் ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின் சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு பறவை. சிட்டுக்குருவி, ...

சிட்டி/சிட்டுரை = நுண்பதிவில் இடும் சிறுமடல்/சிறுகடிதம்.
சிட்டுக்குருவி/சிட்டர் அனுப்பும் சிட்டுமடல் = “சிட்டி” இடுகை.

சிட்டி யென்பது நுண்பதிவின் இடுகை; அதுவொரு குறட்பதிவு. எண்ணச் சிக்கனம், நேரச் சிக்கனம் அங்கே இன்றியமையாதது.

நுணாக் காய் = சிறிய காய்வகையில் ஒன்று. இலந்தை வகை. அப்பெயர் பெற்ற ஊர், திரு-நுணா - திரு-நணா (தேவாரம்). வானி நதி காவிரியை வவ்வும் வவ்வானி/பவானி்யின் இடத்தில் பழைய ஊர்ப்பெயர் திருநணா. எழுத்தாளர் “சிட்டி”யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)

‘மைக்ரோப்லாக்’ நுண்மடல் இடுகை = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி < நுண்ணி). குருவாயூர் குழந்தைக் கண்ணன் உண்ணிக் கிருஷ்ணனை அறிவீர்கள்தானே.

‘மைக்ரோப்லாக்’ = நுண்பதிவு. செழுந்தமிழ் இலக்கியச் சொல்லாக, ’மைக்ரோபிலாக்’ நுண்மடல் இடுகையை நுணா/நுணல்/உண்ணி என்றும் அழைக்கலாம்.

யூனிகோட் நிறுவனம் தமிழில் ஒருங்குறி நிறுவனம் ஆவதுபோல் (அ) ஃபையர்பாக்ஸை நெருப்புநரி என அன்பாய் விளிப்பதுபோல்! ட்விட்டர் கம்பனிச் சேவையைப் பயனிக்கும் சிட்டுகள்/சிட்டர் அனுப்பும் நுண்மடல்கள் ”சிட்டிகள்”!

twitter-er (one who sends tweet messages) = சிட்டு (அ) சிட்டர்
twitter "tweet" message = சிட்டி (அ) சிட்டுரை


ட்விட்டர் சிட்டிகளுக்கு உதாரணமாக,
http://twitter.com/nchokkan
http://twitter.com/ksnagarajan
தமிழ்மணம் அன்பர்கள்,
http://twitter.com/thamizhsasi
http://twitter.com/rselvaraj

நுண்பதிவுலகின் ஒளிமயமான வருங்காலம்!

பழைய பனையோலைகள் போல நகர்கணிகளில் (மொபைல் கருவிகள்) தமிழ் வாசிக்கும் நாள் வந்துவிட்டது. கணிஞர்கள் எல்லோரும் சேர்ந்து இண்பிட் கருத்தரங்கு (http://www.infitt.org/ti2009/) போன்றவை நடாத்திப் பெரிய கம்பெனிகளை அணுகினால் எல்லாச் செல்பேசிகளிலும் தமிழ் தெரிய வைத்துவிடலாம்,

மேசைக்கணி, மடிக்கணி ~ இந்தியாவில் எல்லோரும் வாங்குவது என்பது எட்டாக் கனியாக உள்ளது. அரசாங்கம் எல்லாப் பள்ளி, நூலகம், பஞ்சாயத்து அலுவங்கள், ... இணைய வசதி தந்தாலொழிய இணையம் பல கோடி மக்களை எட்டவே எட்டாது. இதுபற்றிய என்பதிவு இங்கே.

இணையமும், இணையத் தொடுப்புகளும் செல்பேசிகளின் வழியாகத்தான் பல லட்சம் பேருக்கு இந்தியாவில் சென்றடையும். நுண்பதிவுச் சிட்டிகளில் குறுந்தொடுப்புகளாய்
(உ-ம்: http://bit.ly) செல்பேசிகளில் தமிழ் வலைப்பதிவுத் தொடுப்புகள் மக்களைச் சென்று சேரும். அரசாங்கம் பொது இடங்களில் உருவாக்கப்போகும் வலையேந்தல் (infrastructure) கூடங்களை நாடிச் சென்று விரும்புவோர் சிட்டர்கள் தரும் bit.ly தொடுப்புகளை வாசித்துக் கொள்வர்.

சிட்டிகளுக்குத் துழாவிகளும் உருவாகி வருகின்றன. கலெக்டா இன்னும் தமிழ்ச்சிட்டிகளைத் தேடமாட்டேன் என்கிறது :)
http://cybersimman.wordpress.com/2009/06/22/search-4/

தமிழ் நுண்பதிவுச் சிட்டிகளைத் திரட்டும் ”தமிழ்ச்சிட்டு” திரட்டியைத் தமிழ்மணம் விரைவில் தரலாமே.

நா. கணேசன்

மேலும் உசாவ,

ட்விட்டர்: எளிய அறிமுகம் - பாஸ்டன் பாலா
http://bit.ly/ljA9K

உங்கள் ட்விட்டர் தகவல்களை அப்படியே தரவிறக்க
http://www.tamilnenjam.org/2009/06/blog-post_5046.html

அடிக்கடி பதியும் சிட்டர்:
http://snapjudge.com/2009/06/12/top-16-tamil-twitter-users-by-influence/

நெருப்புநரி உலாவியில் ஒரு சிட்டிக் கும்மி
http://maruthanayagam.blogspot.com/2008/09/twitterfox-firefox.html

7 comments:

Tech Shankar said...

மிக அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.
ஒருங்குறி என அழைத்துப் பழகிவிட்டோம். சிட்டர் என அழைக்கப்போகிறோம். நன்றி.

M.Rishan Shareef said...

நல்ல பதிவு !

பழமைபேசி said...

சிட்டர், சிட்டி நல்லா இருக்குங்க அண்ணா.... சிட்டி நல்லா இல்லைன்னா, சிட்டும் பிடிச்சு உலுக்கலாம்... அகஃகா!

MSATHIA said...

tweeps- சிட்டுக்கள் ;-))

Anonymous said...

ஏனுங்க. இதுக்கு மின்னாடியே பத்து பேரு பதினேழு பேரு குடுத்திருக்காங்க. அதயும் பாத்து சொல்லறதுதான

குருவி குறுஞ்சேதிங்கிறத சேத்து குறுவின்னு சொல்லிடலாமுங்க

சிட்டு, 140 சிறுசு இதெல்லாம் சேத்து சிற்றுன்னும் சொல்லலாமுங்கோ.

டுவிட்டரு குறுஞ்சேதி பேரா கம்பனி பேரான்னு தெரியல்லயே. சீராக்ச காப்பி மெசினு ஆக்கனதுமாரித்தான் ஆவிடப்போவுது

தகடூர் கோபி(Gopi) said...

நுண்பதிவுலகம், தமிழ்ச் சிட்டு நல்லாயிருக்கு.

சிட்டர்.. சிட்டி.. ம்ம்ம்.... இன்னும் நல்ல சொற்களை யோசிக்கலாமோ?

எதுக்கும் இராம.கி ஐயா கிட்ட கேட்டுப்பாருங்க.. அவர் இன்னும் நல்ல ஒத்திசைவோடு உள்ள சொற்களைத் தருவார்.

K.S.Nagarajan said...

தாமதமாகத்தான் வர முடிந்தது.
எந்தப் பெயருமே கவரவில்லை.

சிட்டி, சிட்டர் எல்லாம் வேண்டாம்.
ஏன் நாம எப்போதுமே இருக்குற வார்த்தைகளை சேர்த்து, புணர்ந்து இன்னொரு வார்த்தையை உருவாக்க வேண்டும்? எந்தப் பெயருடனும் தொடர்பே இல்லாத ஒரு புது வார்த்தையை உருவாக்கலாமே!

தமிழுக்கு புதுசா ஒரு வேர்ச்சொல்லைக் கொடுத்த திருப்தி இருக்கும்.