தினமணி நாளிதழ் - யூனிகோட் எழுத்துருவில்!

பாரம்பரியம் மிக்க தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதனுடன் இப்பொழுதுதான் தொலைபேசினேன். இந்திரா காந்தியையே எமர்ஜென்சி காலத்தில் எதிர்த்தது. ஏ. என். சிவராமன், எழுத்து வரிவடிவச் சீர்மையை ஆதரிக்கும் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஆசிரியராய்ப் பணிபுரிந்த சிறப்புடையது தினமணி. சித்திரைத் திருநாளன்று தினமணி யூனிகோட் எழுத்துருவுக்கு மாறிவிட்டதற்கு அவரும் தொழில்நுட்பக் குழுவினரும் ஒருங்கிணைந்து உழைத்து மாற்றியதற்குப் பாராட்டுதல்கள் உரியன என்று தெரிவித்தேன். தினமலர், குமுதம், விகடன், விடுதலை, காலச்சுவடு, ... போலவே யூனிக்கோட் குறியேற்பில் இன்று தினமணி!
http://dinamani.com

இன்னும் மீதமிருக்கும் தினத்தந்தி, மாலைமலர், தி.மு.க கட்சி/குடும்ப பத்திரிகைகள் ஆகிய குங்குமம், முரசொலி, தினகரன், ... போன்றவற்றையும் யூனிகோட் குறியேற்றத்திற்கு மாறவைக்க அங்குள்ள மேலாண்மையினருக்கும், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் அறிவித்து ஆவன செய்யுங்கள். நனிநன்றி!

வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனிலிருந்து ஔவை ந. கண்ணன், M.D., மின்தமிழ் குழுவுக்கு அனுப்பிய மடல்:

சித்திரைதான் புத்தாண்டு!
Last Updated : ஏப்ரல் 13, 2009

பன்னெடுங்காலமாக தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டுத் துவக்கமாகச் சித்திரை முதல் நாளையே தமிழக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இது அறிவியல் பூர்வமாகவும், சரியானதாகவே அமைந்துள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு நாள்காட்டியை தமிழர்கள் அமைத்துக் கொண்டனர். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது. சூரியனின் சுற்றுப் பாதை முழுமையடைய 360 டிகிரி ஆகிறது. மீண்டும் "0" டிகிரியில் இருந்து தனது சுற்றுப் பாதையை சூரியன் துவக்கும் நாளே சித்திரை முதல் நாளாகும்.

எனவேதான் நமது புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு போல நள்ளிரவில் துவங்குவதில்லை. சித்திரை துவங்கி பங்குனி மாதம் வரை 12 மாதங்களின் பெயர்கள் அந்தந்த மாதத்தில் பெளர்ணமி தோன்றுகின்ற நட்சத்திரங்களின் பெயர்களாகத் தமிழர்கள் அமைத்துள்ளனர்.

கேரளத்தில் இராசிகளின் பெயர்களையே மாதங்களின் பெயர்களாக அமைத்துள்ளனர். மலையாளத்தில் சித்திரை மாதம், மேஷ மாதம் என அழைக்கப்படுகிறது. இன்றைய கேரளம் அன்றைய சேர நாடாக இருந்தது. அங்கு சித்திரை மாதத் துவக்கம் "விஷு கனி"யாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சித்திரைக் கனித் திருவிழாவாகத் தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். முக்கனியாம் மா, பலா, வாழை உள்ளிட்ட கனி வகைகளை இறைவனுக்குப் படைத்தும், வீடுகளில் மங்கலப் பொருள்களை அலங்கரித்தும் சித்திரைக் கனி பூஜை செய்து, அதில் கண் விழிப்பார்கள். ஆலயங்களில் அதிகாலை சூரிய உதயத்தை மையமாக வைத்து, புத்தாண்டுக்கான சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். வழிபாட்டின் ஒரு பகுதியாக, அந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தையும், அதன் பலன்களையும் திருக்கோயில்களில் படிக்க, அனைவரும் கேட்பார்கள்.

யோகம், கரணம், நாள், நட்சத்திரம், திதி என 5 அங்கங்களை உள்ளடக்கியதால் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. தொலைநோக்கி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, வானவியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் படைத்தவர்களாக நமது முன்னோர்கள் விளங்கினார்கள் என்பதற்குப் பஞ்சாங்கம் சிறந்த சான்றாகும்.

பொதுவாக, ஒரு பழமொழி உள்ளது. அதாவது "சாமி பொய் என்பவன் சாணியைப் பார்; சாஸ்திரம் பொய் என்பவன் பஞ்சாங்கத்தைப் பார்" என்று சொல்வார்கள். சந்திர கிரகணம், சூரிய கிரகணம், அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான விஷயங்களைப் பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்துள்ளது.

பஞ்சாபில் பைசாகி பண்டிகை எனும் பெயரிலும் அசாம், ஒரிசா என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டின் துவக்கமாக சித்திரை முதல் நாளையே கொண்டாடுகின்றனர். தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதித் திருநாள் சித்திரையை ஒட்டியே வருகிறது. வசந்த காலம், கோடை காலம் என பருவ காலங்களும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்வது கூடத் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகள், திருவிழாக்கள் ஆகியவையும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே பஞ்சாங்கத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பாரம்பரிய பண்டிகைகளும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. வீட்டில் நடக்கும் திருமண விழா, காதணி விழா, ஊர்த் திருவிழா ஆகியவை எல்லாம் மேற்கண்ட தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் தமிழ் மாதங்களின் பெயர்களிலேயே தெருக்கள் அமைந்துள்ளன.

தமிழ் மாதங்களை மையமாக வைத்தே விவசாயம் மற்றும் பருவ காலங்கள் தொடர்பான பொன்மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "ஆடிப் பட்டம் தேடி விதை", "ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" ஆகியவற்றைச் சொல்லலாம். கடந்தாண்டு முதல் தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டாக இருந்த சித்திரை முதல் தேதி என்பதை மாற்றி, தை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர் ஆண்டு என ஒரு நாள்காட்டி முறையை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

ஆட்சியாளர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வகையிலும், தங்களின் வெற்றிகளை நினைவுகூரும் வகையிலும் புதுகாலக் கணிப்பை, புதுநாள்காட்டிகளை உருவாக்கிக் கொள்வது என்பது பன்னெடுங்காலமாக உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. மன்னர்கள் விக்கிரமாதித்தன், சாலிவாகனன் ஆகியோர் தாங்கள் பெற்ற பெரும் வெற்றியை நினைவுகூரும் வண்ணம் தங்களது பெயர்களில் விக்கிரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் என வருமாறு சகாப்தங்களை தங்களது அரசுகளில் உருவாக்கினார்கள்.

அதே போல் கிறிஸ்தவர்கள் ஏசுவின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்தவப் புத்தாண்டையும், இஸ்லாமியர்கள் முகமது நபியின் வாழ்க்கைச் சம்பவத்தை மையமாக வைத்து ஹிஜ்ரி ஆண்டு எனவும் நாள்காட்டியை அமைத்துக் கொண்டனர். கிரேக்க நாட்டிலும் மிகப் பழமையான நாள்காட்டி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதில் கிரேக்க கடவுள்களின் பெயர்களும், மன்னர்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தன. ரோம் நாட்டிலும் மிகப் பழமையான நாள்காட்டி முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. சீனா போன்ற நாடுகளில் விலங்குகளின் வடிவமாக ஆண்டுகளை வடிவமைத்து நாள்காட்டிகளை உருவாக்கி அதைப் பின்பற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தலைமைக் குருவாகவும், வாடிகன் நாட்டின் அரசராகவும் இருந்த போப் கிரிகோரி என்பவரால் கிரிகோரி நாள்காட்டி முறை உருவாக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது பாரத நாட்டிலும் கிரிகோரியன் நாள்காட்டி முறை ஆங்கிலக் கல்வியில் படித்தவர்களால் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் இன்றும் பாரத நாடு முழுவதும் பெரும்பான்மை மக்கள், தங்களது பாரம்பரியமான நாள்காட்டி முறையையே பின்பற்றுகின்றனர். நம் நாட்டில் நெடுங்காலமாக சூரியன், சந்திரன் மற்றும் கோள்களை மையமாக வைத்தும், பருவ காலங்களை மையமாக வைத்தும் அறிவியல் பூர்வமாக நமது நாள்காட்டியை வடிவமைத்துள்ளனர்.

தை முதல் நாள் என்பது தமிழருக்குத் திருநாள். தமிழர்கள் சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபடும் நாள். குறிப்பாக உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், பொங்கல் திருவிழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். புண்ணிய காலமான அதாவது ஒளி பொருந்திய காலமான உத்ராயண காலத்தில் சூரியன் பிரவேசிப்பதை மகர சங்கராந்தி திருவிழாவாக அதாவது தைத் திருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தற்போது தமிழக முதல்வர் கருணாநிதி, தை முதல் தேதியை புத்தாண்டாக அறிவித்து சட்டப்பேரவையில் அதற்குரிய மசோதாவையும் நிறைவேற்றியுள்ளார். தை முதல் தேதியை வருடத்தின் துவக்க நாளாகக் கொண்டாட விரும்புகிறவர்கள் தாராளமாகக் கொண்டாடட்டும்; யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தற்போதைய தமிழக அரசு சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தை சீர்குலைக்க வேண்டிய அவசியம் என்ன?

சித்திரை முதல் நாளுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய காரணம் என்ன?

தமிழகம் முழுவதிலும் உள்ள ஆலயங்களில் சித்திரை முதல் தேதியன்று நடைபெறும் பூஜைகளை நடத்தக் கூடாது என தடுப்பதும், ஆலயங்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது எனத் தடை ஏற்படுத்துவதும் ஏன்?

இந்து சமய விவகாரங்களில் மட்டும் தமிழக அரசு தொடர்ந்து தலையிடுவது தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அமைப்பது போல கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புத்தாண்டு தேதிகளை மாற்றி அமைக்க முடியுமா?

அரசு மற்றும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி, தமது தனிப்பட்ட கொள்கைகளை மக்களின் மீது திணிப்பது எந்தவிதத்தில் ஜனநாயகமாகும்?

சித்திரை முதல் நாளை வருடத்தின் துவக்கமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதற்குச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

மேலும், திருமுறை, திவ்யப்பிரபந்த பாடல்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தமிழகத்தில் விதைக்கப்பட்ட பிரிவினை சிந்தனையை வேரறுப்போம். என்றும் தமிழர் கொண்டாடும் பாரம்பரியமான தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்.

தை மாதப் பிறப்பு தமிழர் திருநாள். சித்திரையே புத்தாண்டு!

அர்ஜுன் சம்பத்

நன்றி: தினமணி

பி.கு: தினமணியும் ஒருங்குறிக்கு மாறிவிட்டது திரு.நா.கணேசன் அவர்களே.

ந. கண்ணன்

1 comments:

தமிழ்நெஞ்சம் said...

பகிர்வுக்கு நன்றி.