ஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்

அருந்ததி ராய் என்னும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் ஈழப் போரைக் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா' மும்பைப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதை இங்கே தருகிறேன்.

நா. கணேசன்

தமிழில் மொழிபெயர்ப்பு:
http://www.paristamil.com/tamilnews/?p=34370

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1238480431&archive=&start_from=&ucat=2&

படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது.

இலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம் அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. அங்கு என்ன தான் நடைபெறுகிறது? அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.

அவனோ அவளோ தாம் பயங்கரவாதி அல்ல என்று நிரூபிக்காதவரை ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதி என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் போரை நடாத்தி வருகிறது. மக்கள் வாழிடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாதுகாப்புக்காகத் தங்கியிருக்கும் இடங்கள் என்பனவற்றின் மீது குண்டுகளை வீசி வருகிறது. இலங்கை இராணுவத்தனர் டாங்கிகளுடனும். விமானப் படையினரின் உதவியுடனும் முன்னேறி வருகின்றனர். இரண்டு இலட்சம் மக்கள் இந்தப் போர்ப்பிராந்தியத்துள் அகப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீடிழந்த மக்களுக்காக நலன்புரிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்.14ஆம் திகதிய டெய்லி ரெலிகிராபின் அறிக்கையின்படி போர்ப்பிராந்தியத்திலிருந்து தப்பி வரும் எல்லா மக்களையும் கட்டாயப்படுத்தித் தங்க வைப்பதற்கான இடங்களாக இவை இருக்கின்றன. இவை மறைமுகமான இனவதை முகாம்களா?

அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள எல்லாத் தமிழர்களையும் பதிவு செய்யும் வேலையை ஆரம்பித்தது. இது 1930களின் நாசிகள் செய்ததைப் போன்று வேறு நோக்கங்களுக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர டெய்லி ரெலிகிராப்க்குத் தெரிவித்திருந்தார். இதனூடாக எல்லாத் தமிழர்களும் இயல்பாகவே பயங்கரவாதிகள் என்று அவர்கள் முத்திரை குத்தப்படப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பது தான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும் கூட மக்கள் மீது அல்லது பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பிறருக்கு அனர்த்தம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்ட இந்த அழிப்பு நடவடிக்கை, இலங்கை அரசாங்கம் இறுதியில் இனப்படுகொலையை நோக்கியே நகர்கிறது என்பதையே கோடி காட்டுகிறது.

ஐ.நாவின் கணிப்பின்படி ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மிக மோசமாகப் படுகாயமடைந்துள்ளார்கள். அந்த நரகத்தின் பயங்கரம் பற்றி விபரிக்கும் ஒரு சில கண்கண்ட சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. நாங்கள் எவற்றுக்குச் சாட்சியாக இருக்கிறோம்? இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்று திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நாங்கள் அதனை ஒரு இனரீதியான போர் என்று சொல்லலாமா?
எந்தவிதமான தண்டனைகளுக்கும் அகப்படாமல் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்தக் குற்றச் செயல்கள் உண்மையிலேயே மிகப் பாரதூரமான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளே. இவை இலங்கையில் உள்ள தமிழர்களை அவர்களுடைய இடத்திலிருந்து முற்றாகவே ஓரம்கட்டி விடுகிற அந்நியப்படுத்திவிடுகிற நடவடிக்கைகளாகும்.

சுமூக ஒடுக்குமுறை, சித்திரவதை, பொருளாதாரத்தடை என இனவாதத்திற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. இந்தத் தசாப்தத்தின் நீண்ட உள்நாட்டுப் போர், அமைதியாக வன்முறையற்ற எதிர்ப்புடன் தான் ஆரம்பமாகியது.

ஏன் இந்த மௌனம் என்ற மங்கள சமரவீரவின் இன்னொரு நேர்காணலில் சுதந்திர ஊடகம் என்பதை இன்று இலங்கையில் காண முடியாது என்கிறார் அவர்.

சமூகத்தை அச்சத்துள் உறையச் செய்திருக்கும் வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைக்குழுக்களைப் பற்றியும் அந்த நேர்காணலில் மங்கள சமரவீர பேசுகிறார். மாற்று அபிப்பிராயங்கள் கொண்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களை மௌனமாக்க அல்லது காணாமல் போகச் செய்ய இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்தைப் பாவிப்பதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IFJ) குற்றம் சாட்டியிருக்கிறது.

மனிதத்திற்கெதிரான இலங்கை அரசின் இந்தக் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகளையும் உபகரணங்களையும் வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்குமானால் இதுவொரு பாரிய குற்றமாகும். ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான், சீனா, அவை எவ்வாறு உதவி செய்கின்றன? அல்லது இந்தச் சூழலை எவ்வாறு பாழடிக்கின்றன?

இலங்கையின் இந்த நிலைமைகள் தமிழ்நாட்டில் தீவிர எழுச்சிக்குத் தூபமிட்டுள்ளன. இதனால் பத்துக்கு மேற்பட்டோர் தமக்குத் தாமே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்கள். பொதுமக்கள் கடும் கோபமும் கடுந்துயரும் கொண்டுள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை அப்பழுக்கற்றவை. எனினும்; சில எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட எந்தப்பிரயோசனமுமற்ற அரசியல் மோசடிகள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏன் இந்த மௌனம் இங்கு தொடர்கிறது? ஆகக் குறைந்தது இந்த விடயத்தில், அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் இல்லையா? மேற்கூறப்பட்டது போலல்லாமல் இலங்கையில் என்ன நடக்கிறது? இந்த மௌனம் மன்னிக்கப்படக் கூடியதா? முதலில் ஒரு பக்கம் சாய்வதும் பின்னர் மறுபக்கம் சாய்வதுமான இந்திய அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற போக்குத் தொடர்கிறது.

எங்களில் பலர் நான் உட்பட முன்னரே இதைப்பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் போரைப் பற்றிய தகவல்கள் போதாமலிருந்தது படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது. இது ஒரு மிகப்பிரமாண்டமான மனிதாயத் துயரம். உலகம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே காலம் தாழ்த்தியாகி விட்டது.


The silent horror of the war in Sri Lanka
Arundhati Roy, 30 Mar 2009, Times of India


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.

From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.

Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph:
‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’

Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.

Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’

Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.

There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.

It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.

It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.

தேர்தல் வியூகம் வகுப்பு - TM திரட்டியிலிருந்து

தேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும் வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில் வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனித் திரட்டியை உருவாக்கி இருக்கிறது.

தமிழ்மணம் திரட்டியைப் பயன்படுத்தி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
http://therthal.tamilmanam.net

தமிழ்மணம் சினிமா!
http://cinema.tamilmanam.net

தேர்தல் கூட்டணி வியூகப் படங்களில் சில:

’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்!

வெகுஜன மக்களின் மனங்கவர்ந்த பாடல்கள், செவ்வியல் தன்மை கொண்டவை, 1960, 1970களில் பிரபலமாக இருந்தவை, கிராமியப் பாடல்கள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், இளையராஜா, ரகுமான் ... பாடல்கள், கர்நாடக சங்கீதம் (வசந்தகுமாரி, எம்எஸ்,மகராஜபுரம், பாலமுரளி, ஏசுதாஸ், ...,) தமிழிசைக் கீர்த்தனங்கள், தெருக்கூத்து விவரணக் குறும்படங்கள், சங்கீதக் கச்சேரிகளில் பாடப்பெற்ற நல்ல தமிழிசைப் பாடல்கள் இவற்றின் எம்பி3 அல்லது காணொளித் தொடுப்புகளை ஆவணப் படுத்தவும், அலசவும் ஓரிடம் இருக்கலாமே என்று நினைப்பதன் விளைவே ”நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை" என்னும் மின்னம்பலம். நல்லிசைக் குழுமம் உங்களை வரவேற்கிறது, நல்லிசைக் குழுவில் இணைந்து கொள்ளலாமே!
http://groups.google.com/group/nallisai

Google Groups
Subscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை!


Email:

Visit this group


செந்தமிழிசை, தெருக்கூத்து குறும்படங்கள், நாட்டார் பாட்டு, கர்நாடக சங்கீதம், திரையிசைப் பாடல்களுக்கான சங்கீதக் குழு. YouTube, Cool Toad, hummaa, imeem போன்ற இணையதளங்களில் இருந்து செவ்வியல் நற்பாடல்களுக்குத் தொடுப்புத் தரவேண்டும். பாடல் வரிகளையும், இராக தாளங்களையும் குறிப்பிட முடியுமானால் சிறக்கும்.

மோகனத்தில் - முல்லைப் பண்ணில் தமிழ்நாட்டரசின் தமிழ்த்தாய் வாழ்த்து:


உலகச் சுழல்கோளத்தின் மீது அமர்ந்து தமிழ்த்தாய் யாழ் மீட்டத் தொடங்கிவிட்டாள்!

நல்லிசைத் தேர் உலா வரத் தொடங்கிவிட்டது. வடம் பிடிக்க வாரீர்!


இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே!
இதய நிழலில் இசையை இருத்தி இன்னல் துறப்போமே!

Google Groups
Subscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை!

Email:

Visit this group


Nallisai E-list will be useful and specially welcomes Tamil students and Music lovers from all over the World! Nallisai looks forward to their participation and contributions.

கொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்

இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவுகளைப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ‘கொசுத்தொல்லை தாங்கலை’ என்ற தொடர் விளங்காமல் இருந்தது. அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் பற்றிய வசனம் என்று பின்னர்தான் தெரிந்தது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பின்னர் வடிவேலு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். சந்திரலேகா படத்தின் வசனம் ‘அல்வா கொடுக்கிறது’ போல், ‘கொசுத்தொல்லை தாங்கலை’ - இத்தலைப்பில் காங்கிரஸின் இலங்கை நிலைப்பாடு, புத்தக நாட்டுடமை பற்றிய வே. மதிமாறன் அவர்களின் பதிவு, ... என்று படித்திருக்கிறேன். பிரபலமான வாக்கியத்துக்குத் தொடர்புடைய நடிகர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது குடும்பத்துக்கு எம் இரங்கல்கள்.இந்தக் காணொளியைத் தந்த நிலாரசிகன் (பண்புடன் குழுமம் அவர்களுக்கு என் நன்றி!

நா. கணேசன்

------------

சென்னை, மார்ச் 13, 2009, (தினமலர்): பழம்பெரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. இறுதிச் சடங்கு நாள் சென்னையில் நடக்கிறது. தமிழில், "அவ்வையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு எல்.ஐ.சி.,யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். "இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.
[...]

இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்; நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.

தேர்த்திருவிழா கவிதைகள்

இந்தவாரம் தமிழ்மணத்தில் தாமிரா நட்சத்திரப் பதிவுகளை எழுதி வருகிறார். வாழ்த்துக்கள்! தாமிராவின் ஊரில் நிகழும் தேர்த்திருவிழா பற்றிய பதிவு என்னைக் கவர்ந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் மின்குழுக்களுக்கு அனுப்பிய முக்கியமான இரண்டு தேரோட்டக் கவிதைகளயும் படிக்கத் தருகிறேன். சிந்தனையைத் தூண்டுபவை.

20-ஆம் நூற்றாண்டின் தமிழ்க்கவிகளுள் சிறந்தாருள் முன்வரிசையில் இருந்தவர், மகாகவி உருத்திரமூர்த்தி (1927-1971). யாழ் அளவெட்டி ஊர், கொழும்பில் எழுத்தராய்ப் பணி. மகாகவி limerick என்னும் இலக்கியவகையைத் தமிழ்ப்படுத்திக் 'குறும்பா' இலக்கணம் படைத்தவர் ஆவார். அவரது கவிதைகளும் காவியங்களும் நூலகம் தளத்தில் உள்ளன. படித்துப் பாருங்கள்.

முனைவர் இராமகி வளவு வலைப்பதிவிலும், மின்குழுக்களிலும் எழுதும் தமிழறிஞர். அவரது உரைவீச்சு கண்டதேவித் தேரோட்டம் பற்றியது. வாசிக்க இணைத்துள்ளேன்.

எங்கள் ஊர் சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர் தேவர்மகன் படத்தில் வரும். அதில் சிவாஜி கணேசன் வீடாக வருவது என் அம்மாவின் வீடு. அதிலிருந்து ஒரு காட்சி:
http://cvrintamil.blogspot.com/2009/03/blog-post_17.html

நா. கணேசன்

தேரும் திங்களும்
மகாகவி உருத்ரமூர்த்தி (1969)

"ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"
என்று
வந்தான் ஒருவன்.

வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.

வந்தான். அவன் ஒரு இளைஞன்;
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!

"ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.

"நில்!" என்றான் ஓரான்
"நிறுத்து!" என்றான் மற்றோரான்.
"புல்" என்றான் ஓராள்
"புலை" என்றான் இன்னோராள்
"சொல்" என்றான் ஓராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.

கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.

ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!


-------------------------------------------


மனசில் தேரோடுமா?
உரைவீச்சு - முனைவர் இராமகி, (ஜூன் 22, 2005)

(சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனாலும் சில தலைமுறைகளுக்கு முன்னால் வரை எல்லா மக்களும் தான் அங்கே தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு சாரார் வரட்டுக் குரவம் (கெளரவம்) காட்டுகிறார்கள்.

நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் நம்மைக் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)


'என்னங்கடா,
'இன்னார் மகன் 'னு
படங் காட்டுறீயளா ? '

'அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கே அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா ?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு 4 வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி.... '

'ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ ? '

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீகளோ ? '

'இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்! '

'போங்கடா, போக்கத்த பயகளா ?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வைய்யுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க! '

'அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்....,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா! '

'டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேண்டுமெனத்
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன ?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது ?
முக்கா மணியென்னடா ?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க ? '

'அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்களெலாம் வடந்தொட்டா,

அருள்மிகுந்த அவுகளுக்கு
ஆகிடவே ஆகாதாம்,
கொள்ளாம கூடாம,
கோச்சுக்கவும் செய்வாகளாம்,
மழையினிமே வாராமப்
மந்திரமும் பண்ணுவாகளாம். '

'இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
அவுகளை நாங்களும் விலக்கி வச்சுர்றோம் '

'டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே! '

'அடச்சே போங்கடா!
தேரோடுதா(ந்), தேர் ?

முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா ? '

-----------------------------------

கேஎஸ்ஆர் கல்லூரி இணையப் பயிலரங்கு - வலையொளிபரப்பு, 11 PM, 14-3-2009

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் இன்றைய இணையப் பயிலரங்கு இனிதே நடந்து முடிந்திருக்கிறது. அரங்கு முழுக்க கணினி, இணைய ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், ... என்று திரளான மக்கள் ஆதரவு நல்கியுள்ளனர். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு நம் நனிநன்றிகள் உரித்தாகுக! இன்னும் சிறிது நேரத்தில் (இந்திய நேரம் 11 PM அளவில்) பயிலரங்க நிகழ்ச்சிகளைச் சங்கமம் குழுவினர் வலையொளி பரப்புச் செய்கிறார்கள். பார்த்து மகிழலாம். ஐரோப்பா, மத்தியகிழக்கு, அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பார்க்கும் வகையில் இந்த ஒளிபரப்பு நேரத்தைக் கேஎஸ்ஆர் கல்லூரி தெரிவு செய்துள்ளது.

ஒரு தமிழ்நாட்டுக் கல்லூரி வலைப்பதிவர் பட்டறைப் பயிலரங்கம் வலையொளிபரப்பு ஆவது தமிழ்க் கணிமை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இன்னும் பல கணிப் பயிலரங்குகள் கல்லூரிகளில் இருந்து நேரடி ஒளிபரப்பாகி இணையத் தமிழ்மணம் கமழச் செய்ய தமிழாசிரியர்களுக்கு வேண்டுகோள்!தமிழர்கள் இணையத்தில் வலையாடப் பல்லாண்டுகளாய் உதவிவரும் பழைய குழுமம் தமிழ்-உலகம். அதன் மட்டுறுத்துனர்களில் ஒருவரான ஆல்பர்ட் பெர்னாண்டோ சங்கமம் குழுவினரால் வலையொளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள். அருமை நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கும் கேஎஸ்ஆர் தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் இந்நிகழ்ச்சியைத் தமிழ் கூறும் நல்லுலகம் உலகெங்கும் கண்டுகளிக்க வாய்ப்பளித்தமைக்காக என் நன்றிகள்!

திருச்செங்கோடு தமிழ் இணையப் பயிலரங்கு பற்றிய செய்தி:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=856&Itemid=31

நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:


விடுதலைவீரன் பூலித்தேவனின் திருச்செங்கோட்டுச் செப்பேடு

சனிக்கிழமை (14-3-2009) நாளில் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், தமிழ்மணம் வலைத்திரட்டி நிர்வாகமும் இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துகிறார்கள். திருச்செங்கோடு இணையப் பயிலரங்க நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் வலைஞர்கள் கண்டு களிக்கும் வகையில் சங்கமம் தளத்தினர் ஒளிபரப்புகின்றனர். சங்கமம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புத் தொடுப்பு:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=329

பூலித்தேவன் (1715 - 1767) இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்க எதிர்ப்பை முதன்முதலாகத் துவக்கிய விடுதலை வீரன் ஆவார். அவரது செப்பேடு அண்மையில் திருச்செங்கோட்டில் கல்வெட்டுப் புலவர் Dr. செ. இராசுவால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பூலித்தேவனுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் கட்டிய நினைவுமண்டபம்:
http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm

பூழிஉடையார் (பூலுடையார்) என்பது பூழித்தேவனின் (= பூலித்தேவன்) குலதெய்வப் பெயர். பாண்டிநாட்டின் ஓர் உள்நாடு பூழிநாடு. பாண்டிநாட்டில் பூலாங்குறிச்சி (பூழியங்குறிச்சி) இருக்கிறது, தமிழ்பிராமிக் கல்வெட்டில் இருந்து தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டாக மாறும் நிலையைக் காட்டுவது சடையவர்மனின் ஐந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு. முதலில் ஆற்றங்கரையில் துண்டாய்ப் போன கல்வெட்டை இரா. நாகசாமி படித்து 1981 உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டார். பின்னர் கே. ஜி. கிருஷ்ணன் அங்கே போய் மணலில் மறைந்திருந்த மறுபாதித் கல் துண்டத்தை அகழ்வாய்வில் கண்டுபிடித்தார். இச்சய்தியை எனக்குத் தெரிவித்தவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

புலவர் செ. இராசு ஐயா அனுப்பிய பூலித்தேவன் செப்பேட்டு வாசகங்களை இந்த வலைப்பதிவில் அடுத்தபடி தருவேன். அந்தச் செப்பேட்டு நகலைப் பின்னர் தமிழ் விக்கிபிடியாவிலும் இணைத்திடலாம்.

திருச்செங்கோடு சுற்றுலா:
http://konguvaasal.blogspot.com/2007/09/blog-post.html

திருச்செங்கோடு பயிலரங்கு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

விடுதலைப் போரை முதலில் துவக்கிய புலித்தேவன் செப்பேடு கண்டுபிடிப்பு

சென்னை : ஜூலை 12, 2008.

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் புலித்தேவன். வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755ம் ஆண்டு புலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த முதல் போர். புலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார். அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார்.

சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர், பூலித்தேவன் என அழைக்கப்பட்டது என்றும், அவரது முழுப்பெயர் "காத்தப்ப பூலித்தேவன்' எனவும் ஆய்வாளர் நா.ராசையா கூறியுள்ளார். ஆனால், 1748ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேட்டில், "ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்' என்று எழுதப்பட்டுள்ளது.

நெற்கட்டுஞ் செவ்வல்: கடந்த 1755ம் ஆண்டு வரி வசூலிக்க வந்த "அலெக்சாண்டர் கெரானிடம், ஒரு நெல்மணி கூட வரியாகக் கட்ட மாட்டேன்' எனக் கூறியதால் ஊர்ப்பெயர், "நெற்கட்டான் செவ்வல்' என அழைக்கப்பட்டதாகவும், மக்கள் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, "நெற்கட்டுஞ் செவ்வல்' என அழைத்ததாகவும் ராசையா கூறியுள்ளார். ஆனால், 1748ம் ஆண்டு வெட்டப்பட்ட இச்செப்பேட்டில், "கசுப்பா நெற்கட்டுஞ் செவ்வல்' என்றே எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டுச் செய்தி: தன் முன்னோர் தலைநகரான ஆவுடையார்புரம் தலைநகரை மாற்றி, நெற்கட்டுஞ் செவ்வலில் கோட்டைக் கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் புலித்தேவன். நெற்கட்டுஞ் செவ்வலில் ராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது. தலைநகர்ப் பகுதி வளம் பெற அக்குளத்தைப் புதுக்குளமாகக் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக்கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். விப வருடம் ஆடி மாதம் 25ம் நாள் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு மானிய பூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

குளம் பராமரிப்பு: குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயிலிருந்து குளம் பராமரிப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றுக்குக் கணக்கெழுதி ஒப்பிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டிருந்தது. 85, 86, 87, 88ம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நெல் கோட்டை, பாட்டம் என்ற அளவில் குறிக்கப்பட்டுள்ளது. விதை நெல் விரை என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாகப் பயின்று வரும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித் தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. குளம், மடை விருத்திக்குத் தனி மானியமும் விடப்பட்டிருந்தது. புலித்தேவன் "நம்மிட மனோ ராசியில்' இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.

நன்றி: தினமலர், ஜூலை 12, 2008.

கே.எஸ்.ஆர். கல்லூரி - தமிழ்மணம் இணையப் பயிலரங்கு, திருச்செங்கோடு, 14.03.2009, சனிக்கிழமை

அன்புடைய தமிழ் வலைப்பதிவர்களே,

வரும் சனிக்கிழமை (14-3-2009) தினத்தில் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், தமிழ்மணம் வலைத்திரட்டி நிர்வாகமும் இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கு நடத்த இருக்கிறோம். இந்த இணைய விழாவைப் பற்றி விரிவாக முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பூவில் செய்தி இருக்கிறது. தமிழ்மணம் முகப்பிலும் தொடுப்புள்ளது. ஈரோடு நகரத்தின் பத்திரிகைகளில் செய்தி வெளிவர இருக்கிறது.
http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_9901.html

திருச்செங்கோடு இணையப் பயிலரங்க நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் வலைஞர்கள் கண்டு களிக்கும் வகையில் சங்கமம் தளத்தினர் ஒளிபரப்புகின்றனர். சங்கமம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புத் தொடுப்பு:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=329

திருச்செங்கோடு பழமையான ஊர். சிலப்பதிகாரத்தில் திருவேரகம் என்று பாராட்டப்படும் ஊர். அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்தது. அப்பொழுது சுவாமிமலைக்கு வெண்குன்று என்று பெயர். பின்னர் பல நூற்றாண்டு ஆன பின்னர் சுவாமிமலை ஏரகம் ஆகியிருக்கிறது. மார்ச் 14 உலகப்புகழ் பெற்ற இயல்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினமாகும். ஐன்ஸ்டைன் திருநாளில் (π 'பை' தினம்) தமிழில் கணினி அறிவியல், இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் வலைத்திரட்டியின் பங்களிப்பு போன்றவை பற்றிப் பயிலரங்கு திருச்செங்கோட்டில் நடக்கிறது. பல தமிழர்க்கும் அறிமுகம் செய்யும் களப்பணி. இணைய வேகம் கூடக்கூட, அதன் பயனும் தமிழ்நாட்டில் வரும்காலங்களில் அதிகரிக்கும் (உ-ம்: 3ஜி சேவை). வலைப்பூக்கள் நிறைய மலர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இது தொடக்கம் தான். இலட்சக்கணக்கானோர் இணையத்தை நாம் இப்போது மின்சாரம் பாவிப்பதுபோல் வருங்காலங்களில் பயன்படுத்த எழுத்து சுதந்திரம் கிடைத்துப் பல புதிய செய்திகள், கலைச் செல்வங்கள் தமிழில் சேர்ந்து சமூக மறுமலர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கேஎஸ்ஆர் கல்லூரி நிர்வாகமும், கல்வெட்டு அறிஞர்கள் முனைவர் செ. இராசு, புலவர் வெ.இரா. துரைசாமி, கரூரில் இருந்து வரலாற்றறிஞர் இராசசேகர தங்கமணி, புதுச்சேரி முனைவர் மு. இளங்கோ, ... பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

நீங்களும் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊக்கம் தரும். வலைப்பதிவிலும் எழுதுங்கள்.

நன்றி!
நா. கணேசன்

தமிழ் வளர வழிவகைகள்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html

தமிழ் இணையப்பயிலரங்கம் - 14.03.2009 நிகழ்ச்சி நிரல்

காலை 10.00 - தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்பு - திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை - முனைவர் த.கண்ணன்
அறிமுகவுரை - முனைவர் இரா.சந்திரசேகரன்
தொடக்கவுரை - புலவர் செ.இராசு
விருந்தினர்களைச் சிறப்பித்தல்

முதல் அமர்வு முற்பகல்
முனைவர் மு.இளங்கோவன் தலைப்பு - தமிழும் இணையமும்
முனைவர் இரா.குணசீலன் - வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை

முனைவர் மு.இளங்கோவன் - இணைய இதழ்கள்
தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம், விக்கி பயனாளிகள்
திரு.ப.சரவணன் - இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு
முனைவர் த.கண்ணன் - தமிழ் வலைப்பதிவுகள்
திரு.செல்வமுரளி - இணையத்தளப் பாதுகாப்பு
நிறைவு விழா - நாட்டுப்பண்

Hello Friend,

Tamilmanam ( http://tamilmanam.net ) has conducted Bloggers' workshops at different venues and colleges to promote Tamil computing over the last several years increasing Awareness about the possibilities of Internet in Tamils' social and scientific growth. For example in the last Summer (June 7, 2008), we did the Tamilmanam computing workshop at Tirunelveli:
http://nganesan.blogspot.com/2008/05/tirunelveli-june7-meeting.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_8712.html

Now this coming Saturday (14/March/12009), Tamilmanam and Dept. of Tamil, K.S.R. College of Arts and Science is doing another Bloggers' Workshop at Tiruchengode. It will be broadcast over the Web live. Many Tamil experts like Dr. S. Rasu, Prof. Rajasekara Thangamani (Dept. of History, Karur), Dr. V. R. Duraisamy (Epigrapher), Dr. Mu. Elango (Pudhucheri), ... are coming to Tiruchengode to particpate. Free Lunch will be served, and the announcements are in Tamilmanam muhappu, as well as in Erode newspapers.

Please inform your friends and relatives to attend if possible.

N. Ganesan

Pictures from Tamilmanam Workshop, Tinneveli, Summer 2008.
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_1278.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_5603.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_9550.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_20.html

கோகர்ணன் - மறுபக்கம் - தினக்குரல் பத்திரிகை

இரண்டு நாளாய் கோகர்ணன் (பேரா. சி. சிவசேகரம், கொழும்பு, என்றும் கேள்வி) என்பவரின் ஞாயிற்றுக் கிழமைப் பத்தி ‘மறுபக்கம்’ என்னும் கட்டுரைகளை தினக்குரலில் வாசித்தேன். 100-கணக்கில் இருக்கின்றன.

தினக்குரல்:
http://thinakkural.com/

உங்களுக்குப் பயன்படலாம்.

நா. கணேசன்

Try googling "site:thinakkural.com மறுபக்கம்"

முருகதாஸ் வருணகுலசிங்கம் ~ வீர சாசனம்

ஈழத்தமிழர் இனம் அழித்தல் பற்றி உலகக் கவனப்படுத்தலை வேண்டிப் பலர் தீப்பாய்ந்து மாய்ந்துள்ளனர். 2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் (தமிழ் விக்கிபீடியா கட்டுரை): http://tinyurl.com/c7ouj6

இவர்களில் சுவிஸ் நாட்டு ஐநா சபைக் கட்டட முன்றலில் அமரர் முருகதாசன் அளித்த இறுதி சாசனம்:
http://www.lankasrinotice.com/murukathas_tamil/
http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12077-2009-02-12-22-57-14.html
முருகதாசனின் இறுதி சாசனம்:
http://www.alaikal.com/news/?p=12308

’முருகதாசன் வருணகுலசிங்கம்’ என்னும் தீக்குளித்த இளைஞரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும், விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது. தமிழக, இந்திய, இலங்கை அரசியல்வாதிகள், அமைச்சர்கள் கையிலே தான் இருக்கிறது. மக்கள் தம் வேண்டுதலை தேர்வு முடிவின் மூலம் அறிவிப்பர். பார்ப்போம்.

இந்த இளைஞரின் முழுப்பெயரைக் கேட்டதும் தமிழிலக்கியங்கள் பற்றிய நினைவுகள் மனத்தில் இழையாடின. 15-ஆம் நூற்றாண்டில் ஈழத்தின் மறுகரையில் நெய்தல் நிலத்தலைவன் காத்தான் என்பவன் வருணகுல ஆதித்தனாக விளங்கினார். நாகப்பட்டினம் என்னும் கடற்கரைத் துறைமுக ஊரில் சத்திரம் கட்டித் தருமம் செய்தவன். அச் சத்திரத்துக்கு நேரங்கழிந்து வந்தார் காளமேகம். இவரது போதாத காலம் பணியாளர்கள் வேலை முடித்துத் தூங்கப் போய்விட, உணவு வேண்டிப் பணியாளை எழுப்புகிறார். பணியாளர், புதிதாக உலையேற்றிச் சமைத்துக் கவிஞருக்குப் படைக்கக் கால தாமதம் ஆகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகம் பாடிய வெண்பா.

இகழ்ச்சிப் புகழ்ச்சி (நிந்தாஸ்துதி)

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையில்இட ஊர்அடங்கும், ஓரகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்

வசைக்கவியாய்ப் பொருள்கொள்ளின், “அலை சத்தமிடும் கடல் சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.”

பாடலைக் கேட்ட பின்னர்தான் மேலாளருக்கு ‘வந்திருப்பது காளமேகம்’ என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தான் அவன். தமிழ் இரசிகனான தலைவன் காத்தானிடம் ஓடி முறையிடுகிறான். முதலாளியும் ஓடோடி வந்து கவிஞரை வணங்கி, உபசரணைகள் பல புரிந்து தம்மை நிந்தித்த பாடலைக் கைவிட்டு வேறுபாடல் தந்திட வேண்டி நிற்கிறார். காத்தானை ஏசிய கவிஞரின் வயிறும், நெஞ்சும் தற்போது நிறைந்திருப்பதால் மேற்படிப் பாடலையே இசைக்கவிப் பொருளாகச் சொல்கிறார்.

"ஊரெல்லாம் பஞ்சம் தலைவிரித்தாடி அரிசி அத்தமித்துப் போனாலும், உன் சத்திரத்தில் தானஞ் செய்ய மூட்டை மூட்டையாய் வண்டிகளில் வந்து இறங்கும். அதைக் குத்தி உலையிட்டுச் சமைத்துப் பரிமாற ஒரு ஊரே பசியடங்கும். ஊர் விருந்தாடுகையில் இலையில் வைக்கும் அன்னத்தின் வெண்மை கண்டு வெள்ளி நட்சத்திரமும் வெட்கப்பட்டு மேற்கிளம்பும்."

தாசி காளிமுத்து அம்மை காத்தான்மீது பாடிய ‘வருணகுலாதித்தன் மடல்’ இருக்கிறது. அதைத் ’தமிழ்க்கடல்’ காரைக்குடி ராய. சொ. ஐயா 1948-ல் அச்சிட்டார்கள். மகாத்மா தமிழ்நாடு வந்தபோது அவர் இல்லத்தில் தங்கினார். அவர் எழுதிய புத்தகங்களில் சில: காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் (1925), வள்ளுவர் தந்த இன்பம், வில்லியும் சிவனும், கம்பனும் சிவனும், ஆழ்வார் அமுது, காதற்பாட்டு, பிள்ளைப்பாட்டு, திருமணப்பாட்டு, பாவைப்பாட்டு, புதுமைப் பூ. எனக்கு அவர் கையால் வழங்கிய அப்புத்தகத்தை மின்கொடையாய் வழங்க வேண்டும். நாகை பழைய வணிகத்தலம். அஞ்சுவண்ணத்தார் என்று பல தேசத்து இசுலாமியர் பல நூறு ஆண்டுகளாகச் சிறப்புடன் வாழும் ஊர். அவ்ர்களுக்கு காளமேகம் சொன்ன நிந்தாஸ்துதிப் பாட்டுகள் இரண்டு உள்ளன. வசைக்காயிரம் பொன், இசைக்காயிரம் பொன் என்று இந்நிகழ்ச்சியை சோழமண்டல சதகம் பேசும். பல இனத்தார்கள் வாழ்ந்ததால் கல்விக்கு நாகை புகழ்பெற்ற நகராக விளங்கியது. யாழ்ப்பாணம் போலவே கல்விக்குப் பெயர்போன நகரம் நாகைப்பட்டினம். ’சோறு எங்கே விக்கும்’ என்று காளமேகம் கேட்க, பாக்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார் ‘தொண்டையிலே விக்கும்’ என்றார்கள். ’கற்றார் பயில் கடல் நாகைக் காரோணம்’ - தேவாரம். அக்கல்விச் சிறப்பை வாழ்த்திக் காளமேகம் பாடிய வெண்பா இருக்கிறது. பிறகொரு நாள் அவற்றை யெல்லாம் பேசுவோமே.

நா. கணேசன்

உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்

என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.

எனது பெயர் முருகதாசன்

பிறந்த திகதி 02 - 12 - 1982

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து london நாட்டின் முகவரியில் வசிக்கும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவன்.

இலங்கையில் வாழும் தமிழ் இனம் பெரும்பான்மைச் சிங்கள இனத்தின் அரசால் நசுக்கப்பட்டு வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அதனை நீங்கள் எவரும் தடுத்து நிறுத்தவில்லை. பார்த்துக்கொண்டு ஊக்கம் கொடுத்துக்கொண்டும் இருக்கின்றீர்கள்.

போர் தொடர்பான நடைமுறைகள், ஜெனீவா பிரகடனம், அடிப்படை மனித உரிமைகள், இன அழிப்பு அதற்கான சட்டங்கள், நடைமுறைகள் எல்லாவற்றையும் ஐநா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வைத்திருக்கின்றன தனது உறுப்பு நாடுகள் அவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றெல்லாம் சட்டம் வைத்துள்ளீர்கள் - ஆனால் இவற்றையெல்லாம் மீறி எனது தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருக்கின்றது.

இன்று வன்னியில் எனது நான்கரை லட்சம் தமிழ் உறவுகள் எப்படிக் கொடுரமாக வதைக்கப்படுகின்றார்கள் என்பதை உலகின் பிரதிநிதிகளான ஐ.நா அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அங்கிருந்து வெளியிடும் அறிக்கைகளில் இருந்தே தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

வன்னியில் என் இனத்தின் நான்கரை லட்சம் பேர் ஒரு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரச படைகளால் நாள்தோறும் எறிகணைத் தாக்குதல்கள் மூலமும் வான்குண்டுத் தாக்குதல் மூலமும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான என் உறவுகளின் பிணங்கள் வீதிகள் எங்கும் கிடப்பதை அறிந்த போது எனக்கு தாங்க முடியாத துயரமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. நாள்தோறும் எமக்கு கிடைக்கும் செய்திகளில் வீதி வீதியாக கொல்லப்பட்டுக் கிடக்கும் என் இனத்துப் பாலகர்கள், பால்குடிக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் நோயாளர்கள், பற்றித்தான் தகவல்கள் வருகின்றன.

மருத்துவமனைகள் அங்கு பாதுகாப்பானவையாக இல்லை. மருத்துவமனைகள் கூட குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. மருத்துவமனைகளைத் தாக்குவதை ஸ்ரீலங்கா அரசே நியாயப்படுத்துகின்றது. அவர்கள் தொடர்தாக்குதல்கள் நடத்தி மக்களை கொல்கின்றார்கள். வன்னியில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அதனால் தாக்குவோம் என்கிறார்கள்.

உங்களின் மொழியில் கேட்கிறேன் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றார்கள். சிறார்கள் கொல்லப்படுகின்றார்கள். வயிற்றில் இருக்கும் சிசுக்கள் கூடக்கொல்லப்படுகின்றனர். அவர்களும் பயங்கரவாதிகளா?

மக்கள் கொல்வது பயங்கரவாதம் என்கிறீர்கள். அங்கு தமிழ் மக்கள் அரசால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் இடம்பெயர்கின்றபோதும், இடம்பெயர்ந்து ஒரு இடத்தில் தனித்து நிற்கின்றபோதும் மருத்துவமனைகளுக்கு செல்கின்றபோதும் வீதிகளில் நடமாடுகின்ற போதும் என்று எங்கும் அவர்கள் கொல்லப்படுகின்றனர். கொத்தாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.

முல்லைத்தீவு சுதந்திரபுரச்சந்தி திடலில் ஐநாவின் உலக உணவுதிட்ட அதிகாரிகள் கொடியை ஏற்றி நிலைகொண்டு நிவாரணத்தை வழங்கிக்கொண்டிருந்த போதும் அந்த திடல் மீது 26-01-09 அன்று பகல் இரவாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதியில் இருந்த செஞ்சிலுவைக் குழு அலுவலகமும் தாக்கப்பட்டது. அன்று மட்டும் 302 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1199 பேர் படுகாயமடைந்தனர். அன்று அதிகளவில் உடையார்கட்டு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளெங்கும் பிணக்காடாக இருந்ததை எனது உறவினர் நேரில் பார்த்து தொலைபேசியில் சொல்லியபோது நான் அதிர்ந்து விட்டேன். யார் இருக்கிறார்கள், யார் மடிந்தார்கள் என்பதை அறியாமல் உயிருடன் இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். அவலங்களின் சாட்சியாக நின்ற ஐநா அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரிகளும் சிறிய பதுங்குகுழிகளுக்குள் பாதுகாப்பு தேடி இருந்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.

அன்றைய நாளை மறக்க முடியாதளவுக்கு எனக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி ஐநா பிரநிதிகள் செஞ்சிலுவைக்குழுப் பிரிதிநிதிகள் அறிக்கை வெளியிட்டனர். அப்பகுதி பாதுகாப்பு வலையம் என்று ஸ்ரீலங்காவால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகும். இவ்வாறு தானே பாதுகாப்பு வலையம் என அறிவித்து அதில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் சாட்சியாக இருக்க, ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது. நாள்தோறும் இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. இது அரச பயங்கரவாதம் இல்லையா? அரசே நடத்தும் இனப்படுகொலை இல்லையா?

இவ்வாறே, போரின் போது மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்படக் கூடாது என்ற மரபையும் புறந்தள்ளி, ஐநா அதிகாரியும் பன்னாட்டு செஞ்சிலுவைக்குழுப் பிரதிநிதிகள் நின்றவேளையில் ஸ்ரீலங்கா அரசுப்படைகள் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிவந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009.02.02 தொடக்கம் 2009.02.04 திகதி வரை குண்டுகளை வீசி நோயாளர்களைக் கொன்றதற்கு உங்களவர்களே சாட்சி.

4ம் திகதி ஸ்ரீலங்காவில் சுதந்திரநாள் கொண்டாட்டம். அன்றுதான் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக அழிந்துச் செயலிழக்கச் செய்யப்பட்ட நாளாகவும் அமைந்தது.

புதுக்குடியிருப்பு மருந்துவமனை தொடர் விமானக் குண்டுவீச்சுகளாலும் ஆட்லறி கொத்துக்குண்டுகளாலும் தாக்கப்பட்ட போது அங்கு அப்பாவி மக்கள் 500 பேர் சிகிச்சை பெறுகின்றார்கள் என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரிதிநிதி உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, இதற்கு ஒரு கிழமைக்கு முன் 26.01.2009ல் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கபட்டு மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டு உடையார்கட்டு மருத்துவமனை மீதான தாக்குதலை நியாயப்படுத்தியிருக்கிறார். உடையார்கட்டு பகுதியை சில தினங்களுக்கு முன்னர்தான் பாதுகாப்பு வலையமென குறிப்பிட்டு அங்கு மக்களை ஒன்றுகூடுமாறு சிறிலங்கா அரசு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த மருத்துவமனை தாக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவப் பேச்சாளர் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார புதுக்குடியிருப்பு மருத்துவமனையே சில தினங்கள் கழித்து தாக்கப்பட்டது. 02/02/2009 தொடக்கம் 04/02/2009 குண்டுவீசி நோயாளர்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதிகள் குறித்த மருத்துவமனை வளாகத்தில் தங்கிநின்ற நிலையிலேயே சிறிலங்கா அரசு படைகள் மேற்படி மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டன.

பிரித்தானிய ஸ்கை ஒலிபரப்பு நிறுவனத்திற்கு 03/02/2009 அன்று வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் பாதுகாப்பு வலத்திற்கு வெளியே எந்த வைத்தியசாலையும் இல்லை. அதனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இலக்கு என்று வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்தி சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தியும் இனியும் மருந்துவமனைகள் தாக்கப்படும் என்பதை வலியுறுத்தியும் மேற்படி சிறிலங்கா அரசின் இராணுவப் பேச்சாளாரும் மற்றும் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்ச ஆகியோர் உத்தியோக பூர்வமாகவே உலக செய்தி நிறுவனங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றது. சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு இவ்வாறான ஒரு கருத்தை அவர்களால் கூறமுடிகின்றது என்றால், மருத்துவமனைகள் தாக்கப்படுவது உலக நாடுகள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று தானே பொருள்படும்.

முள்ளியவனையில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, வள்ளிபுனத்தில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, விசுவமடுவில் இயங்கிய கிளிநொச்சி பொது மருத்துவமனை, உடையார்கட்டில் இயங்கிய கிளிநொச்சி பொதுமருத்துவமனை, மூங்கிலாறில் இயங்கிய மல்லாவி மருத்துவமனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை என்பன மருத்துவமனைகள் என்பதற்காகவே தாக்கப்பட்டுள்ளன.

இரு தரப்புக்களையும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கும்படி கோரும் இந்நாடுகளுக்கு வைத்தியசாலைகளைத் தாக்குவதன் மூலம் வேண்டுமென்றே தமிழர்களை இலக்கு வைக்கும் சிறிலங்கா அரசு அதன் காரணமாக அந்தச் சட்டங்களை முழுவதுமாக மீறுகின்றது என்று நன்கு தெரியும்.

சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கொள்கை நிலைப்பாடு மனித இனத்திற்கு எதிரான தீங்கியல் குற்றமாகும் இந்தக் கொள்கையை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசின் போக்கால் சென்ற மாதம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படவும், காயமடையவும் நேர்ந்துள்ளது.

எனது தமிழ் மக்கள் இலங்கை தீவில் படும் துயரத்தின் பால் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தும் இடைக்காலத்தில் கூட தினம் தினம் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இலங்கைத் தீவெங்கும் வீதி வீதியாக கொல்லப்படுகின்றார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மனித துன்பியல் கொடூரம் மனிதாபிமான உதவிகள் தமிழ் மக்களுக்குக் கிட்டுவதைத் தடை செய்துள்ள இலங்கை அரசின் நடவடிக்கையால் மேலும் தாமதமாகியுள்ளது. அனைத்துலக சமூகம் இந்த உண்மைகளை முழுமையாக அறிந்துள்ள போதிலும் பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களை பின்பற்றுமாறு சிறிலங்க அரசிற்கு கடும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்து சிறிலங்கா அரசிற்கு படை மற்றும் பொருண்மிய உதவிகளை வழங்கி வருகின்றமை பெரும் துர்பாக்கியமாகும்.

தமிழ் தேசம், சிங்கள தேசம் ஆகியவற்றின் வாழிடமே இலங்கைத்தீவு என்பது தமிழ் மக்களின் உறுதியான மாற்றமுறாத கருத்து நிலைப்பாடாகும். இந்த யதார்தத்தை அங்கீகரிக்கும் அடிப்படையில் தான் இரு தேசங்களினதும் உண்மையான பிரதிநிதிகள் அதாவது இரண்டு தேசங்களினதும் எதிர்கால பாதுகாப்பு பரஸ்பர நலன் போன்றவற்றிற்காக எவ்வாறு இரண்டு தேசங்களும் கூடிச் செயற்பட்டு தமிழரின் தேசிய பிரச்சனைக்கு நீதியான நீடித்து நிற்கக்கூடிய தீர்வைக்காணலாம் என்பது குறித்து பேச்சுகளில் ஈடுபட வேண்டும்.

இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள இனத்தவருக்கு உரித்தானது என்ற கொள்கை நிலைப்பாட்டினால் தான் சிங்களவர்களோடு சமத்துவமான தமிழ் தேசம் உள்ளது என்ற இந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கு மறுத்த இந்த பௌத்த சிங்கள இன ரீதியிலான தேசியவாதமே இன அழிப்பு நோக்கிலான போர் வழித் தீர்விற்கு சிறிலங்கா அரசைத் தள்ளியுள்ளது.

நான்கு நூற்றாண்டுகளாக அந்தத்தீவில் தமிழ் இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இந்த உரிமைகளுக்காக அறவழியில் தமிழினம் போராடியபோது அதை சிங்கள அரசு வன்முறை கொண்டு அடக்கியதனாலேயே தமிழினம் அடிக்கு அடி கொடுக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் படை மற்றும் பௌதீக ரீதிலான அடக்கமுறையை எதிர்த்து நிற்பது அவசியம் என்பதும். அதவே ஆயுதம் தாங்கிய தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டியது என்பதையும் உலகம் கவனிக்க வேண்டும். தமிழ் தேசம் என்ற உண்மை இருப்பு நிலையை தனது இனவழிப்பு செயற்பாடு மூலம் சிதைத்து அழிப்பது தான். சிறிலங்கா அரசு தொடுத்துள்ள போரின் நோக்கமாகும். இதை அங்கீகரிப்பது போல 03.02.2009 இல் நோர்வே, யப்பான், அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் ( அல்லது இணை தலைமை நாடுகள்) விடுத்த கூட்டறிக்கை அனைத்து தமிழர்களின் மனதையும் ஆழக்காயப்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ் மக்களது உரிமை போரினதும் சிங்கள இனவாததினதும் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டுமே இணைத்தலைமை நாடுகள் சிறிலங்கா அரசிற்குச் சார்பாகவும் தமிழ் மக்கள் தமது உரிமைப்போரைக் கைவிட வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டமையும் கூட எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு இனம் தனது உரிமைகளைக் கேட்பது தவறு என்று உலகம் கருதுகின்றதா ? குறிப்பாக ஐநா அவ்வாறு தான் கருதுகின்றதா..? உலகில் ஏன் தமிழ் இனத்துக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன அல்லது உரிமை மறுப்புக்கு உலகம் ஆதரவு கொடுக்கின்றது. அந்த மறுப்புக்கு ஏன் உலகம் துணை போகின்றது? நாம் ஏன் அடிமைகளாக இருக்க வேண்டும் என உலகம் நினைக்கின்றது.

இன்று ஒரு அரசு பிரகடனப்படுத்தி ஒரு இனத்தை அழித்துக் கொண்டிருப்பது தெரிந்தும் உலகமே அதனைத் தடுக்கவில்லை . அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு விட்டு அமைதியாகி விடுகின்றன . ஆனால் அந்த அமைதியை நீங்கள் அந்த அரசின் இன அழிப்பிற்கு கொடுத்த அனுமதியாக கருதியே சிறிலங்கா அரசு இன அழிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு இனத்தின் அழிவைத்தான் நீங்கள் வரலாற்றில் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். இன அழிப்பைச் செய்யும் அந்த நாட்டுக்கு நீங்கள் ஏன் அழுத்தம் கொடுக்கிறீர்கள். இல்லை? இதுதான் உங்கள் நடுநிலையா?

1958 முதல் இன்று வரை தமிழினத்துக்கு உரிமைகள் வழங்கப்படுவதாக கைச்சாத்திடப்பட்ட உடன்பாடுகள் எல்லாம் சிறிலங்கா அரசால் பல தடவைகள் குறிப்பாக கடைசி நோர்வே போர்நிறுத்த உடன்பாடு வரை கிழித்தெறியப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். கடைசியாக நடந்த பேச்சுக்களின் போது இணைத்தலைமை நாடுகள் சிறிலங்காவுக்கு சார்பாகவே செயற்பட்டன . இந்த பேச்சுகாலத்தில் சிறிலங்கா படைத்தரப்பு தன் படையை பலப்படுத்தவே பயன்படுத்தியது என்பதும் தெளிவாக தெரிந்தது. பேச்சுகளின் காலங்களை தமிழரை ஏமாற்றும் காலங்களாகவே சிறிலங்கா அரசு பயன்படுத்தியது. மக்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும் என்று சொல்கின்றீர்கள். சிங்கள சிறிலங்கா அரசு எமது தமிழ் மக்களை ஆட்சிபுரிய அனுமதிக்க வேண்டுமென மறைமுகமாகச் சொல்கிறீர்கள்.

ஒருபுறம் சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் எனது இன மக்கள் கடத்தப்பட்டு கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் அநாதரவாகப் போடப்படுகின்றார்கள். இவற்றைச் செய்வது யார் என்று புள்ளி விவரங்கள் எல்லாவற்றையும் மனித உரிமை நிறுவனங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டும் நீங்கள் எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக அப்பகுதியில் மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்கிறார்கள்.

ஈராக்கிற்கு அடுத்த படியாக உலகளவில் சிறிலங்காவிலேயே அதிகளவில் மக்கள் காணாமல் போகின்றனர் என்பதை உலக மனித உரிமைகள் அமைப்புகள் அடையாளப்படுத்தியும் நீங்கள் எவரும் அவற்றிற்கு பரிகாரம் காணாது அப்பகுதிகளினுள் மக்களைபோகும்படி கூறுகிறீர்கள்.

சிங்கள சிறீலங்கா அரசின் ஆளுகையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது தமிழ்மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போயும் உள்ளமை உங்களுக்கு தெரியாதா? நூற்றுக்கணக்கில் அல்லாமல் ஆயிரக்கணக்கில் நடைபெற்று முடிந்த இவ்வாறு காணமற் போவதற்கு எதிராக உலகநாடுகள் என்ன செய்தன.

இணைத்தலைமை நாடுகளின் பின்புலத்தில் நோர்வேயின் அனுசரணையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் காலத்திற்கு கூட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை தீவெங்கும் சிங்கள் சிறீலங்கா அரச படைகளால் இரகசியமான முறையில் காணாமல் போகச் செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்டமைக்கு எதிராக உலகநாடுகள் எதனைச் செய்தன.

இறையாண்மை என்ற பேரில் நடக்கும் இந்த இன அழிப்பை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். தமிழினத்தின் மீது இன அழிப்பைச் செய்வது ஸ்ரீலங்கா அரசு என்றவுடன் நீங்கள் இறையாண்மை பற்றித் தொடங்குகின்றீர்கள். இறையாண்மை கொண்ட அரசின் உறவைப் பேணுவதற்காக அல்லது பாதுகாப்பதற்காக நீங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாகவே நாங்கள் எல்லோரும் கருதுகின்றோம். ஒரு இனத்தை நசுக்க அல்லது இனத்தை அழிக்க நீங்கள் எல்லோருமே ஆதரவளிக்கின்றீர்கள். தமிழர் உரிமைக்கக போராட்டம் செய்தால் வன்முறை அல்லது பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லுகிறீர்கள். தமிழரை 1958ல் இருந்து ஒரு அரசு அழித்துக் கொண்டிருப்பதை வன்முறையாக நீங்கள் பார்க்கவில்லையா? தமிழினம் இந்த ‘பூமியில் வாழும் இனமில்லையா? அவர்கள் உரிமைகளுடன் வாழ உரித்துடையவர்கள் இல்லையா? நீங்கள் ஏன் எம்மை மட்டும் நசுக்க ஒத்துழைக்கின்றீர்கள்?

புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து எமது தமிழ் மக்கள் உங்களுக்கு உங்கள் மொழியில் அறவழியில் எனது இனத்தை காப்பாற்றுமாறு குரல்களை எழுப்பினார்கள். ஆனால் எதையும் நீங்கள் காது கொடுத்துக் கேட்க்கவில்லை மிக கொடூரமாக வதைக்கப்படும் என் இனத்துக்கு என்னால் இங்கிருந்து எதையும் செய்யமுடியவில்லை. குறைந்தது ஆறுதல் சொல்லக்கூட என்னால் முடியாத கையறு நிலையில் இருப்பது குறித்து நான் வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன்.

இந்தச் சூழலில் புலம் பெயர் நிலையில் இருக்கும் எனக்கு அங்கு அவலப்படும் என் மக்களுக்கு செய்யக்கூடியதாக எதுவும் இல்லை. உங்களுக்கு அழுத்தமாக என் இனத்தின் சார்பில் எனது வேண்டுகோளைத் தெரிவித்து என் இனத்தை காக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக எனது உயிரை தீயிற்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளேன்.

உலக நாடுகளே,

குறிப்பாக, இலங்கை அரசுடன் கைகோத்துள்ள இணைத்தலைமை நாடுகளே

ஐ.நா நிறுவனமே

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சிங்கள அரசு எமது தமிழ்மக்களுக்கு செய்துவந்த கொடுமைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அந்த நீண்ட துன்பியல் வரலாற்றின் நிகழ்காலப் பரிணாமாகவே, தமிழ் மக்களின் பிரச்சனையில் உலக நாடுகளின் தலையீடு ஏற்பட்டது. உலக நாடுகள் தலையிட்டபோது தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் நம்பினார்கள். ஏன் நானும்கூட நம்பினேன். ஆனால் நிகழ்காலத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றோம்.

சிங்கள அரசின் கபட நாடகத்திற்கு உலக நாடுகளும் துணைபோவதைக் கண்டதனாலேயே இந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது தமிழ்மக்கள் தங்களது தாய்நாட்டில் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டும் உலகம் பாராமுகத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் சிறிலங்கா அரசை ஊக்குவித்து வருவது கண்டும் மனம்வெதும்பியே உலகப் பொதுமன்றமாம் ஐ.நா முன்றலில் தீயின் சாட்சியாக என்னை அர்ப்பணிக்க முடிவெடுத்தேன்.

எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின்முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீதி கிடைக்கச் செய்வதில் ஐ.நா.வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாக இலங்கைத் தமிழ் இளைஞன் முருகநாதன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

சிங்கள அரசின் இன அழிப்பிற்குத் துணைப்போகும் ஐ.நாவே இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்தச் முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் கோபம்கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உத்வி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும்.

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
முருகதாசன்