இணைய விண்மீன் மு. இளங்கோவனார்

அன்பு நண்பர் முனைவர் மு. இளங்கோவன் கல்லூரியில் தமிழ் பயிற்றும் பேராசிரியர்களில் இணைய உலகின் விண்மீனாக விளங்கி வருகிறார். நிறையப் புதிய செய்திகளையும், தமிழ்ப்பணி புரிபவர்களையும் அறிமுகப்படுத்திப் படங்களுடன் விரிவாக அவரது பதிவில் எழுதி வருகிறார். இவ்வாரம் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக தமிழ்கூறும் வலையுலகை உலாவருகிறார். வாழ்த்துக்கள்!

மு. இளங்கோவின் பதிவுகளைப் படிக்கும்போது என் நினைவுக்கு வருபவர் குன்றக்குடி பெரியபெருமாள் அவர்கள். தான் எழுதும் சான்றோரை நன்கு அறிந்து, அவர் படைப்புகளை வாசித்து எழுதியவர் குன்றக்குடி பெரியபெருமாள் (பி. 1933) ஆவார். அவரது புத்தகங்களை நண். இளங்கோ வாசித்துப் பார்த்தல் வேண்டும். குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், காமதேனு பப்ளிகேசன்ஸ், சென்னை, 1996. என் நண்பர்(சிகாகோ) இந்நூல் வெளிவரப் பாடுபட்டார்.

இன்னொன்று: நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், எழுத்துச் செம்மல் குன்றக்குடி பெரியபெருமாள், பதிப்பாளர்: மதி நிலையம்.

கவிஞர் அறிவுமதியின் நண்பர், இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரத்திடம் பணிகற்றவர். தன் ஆற்றுப்படை நூல்களுடன், பனசைக் குயில் கூவுகிறது, திருத்தமான பாரதிதாசன் கவிதைகள், பொன்னி இதழ்க் கவிதைகள், பஞ்சமரபு, ... அத்தனையும் இணைய உலகில் ஏற்ற அவருக்கு பதிவுலகர்கள் உதவ முன்வரவேண்டும், அது கடமை. பத்திரிகை உலகின் எழுத்துச் செம்மல் குன்றக்குடி. இணையத்தின் எழுத்துச் செம்மல் என மு. இளங்கோவன் திகழ்ந்து தமிழ் உலகம் அறியவேண்டும்! கணிதமிழை, வலைநுட்பை ஆயிரமாயிரம் ஆசிரியர்களுக்குத் தமிழ்நாட்டில் எடுத்துச் செல்லும் பெரும் பணியில் உழைக்கும் செம்மல் மு. இளங்கோ வளம்பல பெற்று வாழ்க!


மறைந்த குன்றக்குடி பெரியபெருமாள் பற்றி உரைத்தேன் அல்லவா? அவர் எழுத்தின்
சில உதாரணங்களைக் காண்போம்.

(1) சி. வை. தாமோதரம் பிள்ளை
(2) சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை
(3) சுவாமி விபுலாநந்தர்
(4) சுப்பிரமணியன் 'பாரதி'யானது எப்படி?

எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக் கொள்வர். அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.

நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக் கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களிப் புலவரிடம் வழங்கினர். கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களைப் புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர். சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரியபெருமாள்

-------

உவேசா அவர்களின் ஆசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்று (பெரியபெருமாள், த. வ. ந. நூல்)

"சீர்காழியில் நீதிபதியாக வீற்றிருந்த வேதநாயகர் மகாவித்துவான் அவர்களைச் சீர்காழிப் பதியின் மீது ஒரு கோவை நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்று மகாவித்துவான் அவர்கள் தண்தமிழ்ச் சீகாழிக்கோவை நூல் ஒன்றை எழுதி சீர்காழிச் சிவன் கோவிலில் அரங்கேற்றினார். அரங்கேற்றத்துக்குத் தலைமை ஏற்ற வேதநாயகர் நீதிபதிக்கே உரிய தோரணையில், திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசனைச் சாட்சிக் கூண்டில் ஏற்றி, 'சத்தியமாகச் சொல்கிறேன்... நான் கூறுவது உண்மையைத் தவிர வேறில்லை' எனக் கூற வைப்பது போல ஒரு பாடலைச் சொல்லி, கோவையைப் பற்றிக் கருத்துக் கேட்டார்.

விதி எதிரில் அரி முதலோர் புகல் புகலி ஈசரே! விண்ணோர் மண்ணோர்
துதிபொதி பல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சிசுந்தரப் பேர்
மதிமுதியன் கோவையைப்போல் பெற்றீர்கொல்? இக்காழி வைப்பின் நீதி
அதிபதி நாம் என அறிவீர்! நம் முன்னம் சத்தியமா அறைகுவீரே!

அரங்கேற்றம் நிறைவு பெற்ற அக்கணமே, அறம் கூறும் திருவாயினின்றும் வெளிப்பட்ட பாடல் இது.

சீகாழிப் பதியின் ஈசனே! உம்மை மண்ணில் வாழும் மனிதர்களும் விண்ணில் இருக்கும் தேவர்களும் பல பாமாலைகள் சூட்டிப் புகழ்ந்திருப்பர். எங்கள் மீனாட்சி சுந்தரனின் இப் பாமாலை பற்றிய உமது கருத்தைச் சத்திய வாக்காக உரைப்பீர்! இதனை நீதிபதி என்ற முறையில் உம்மை நான் கேட்கின்றேன்" என்ற பொருளில் அமைந்திருந்த இந்தப் பாடலைக் கூடி இருந்தோர் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்."

அன்புடன்,
நா. கணேசன்

விதி எதிரில் அரி முதலோர் புகல் புகலி ஈசரே!

(1) விதி = நீதிபதி.

திருமால் முதலானவர்கள்புகலிடமாகக் கொள்ளும் சிவனே! நீதிபதி முன் நிற்பவரே!

(2) விதி = பிரமன்,

பிரமன், ஒப்பற்ற ஹரி இருவரும் அடிமுடி தேடிக் காணாது புகலடையும் சிவனே!

இருவிதத்திலும் பொருள்படும் நயம் காண்க.

பத்மசிறீ ஐராவதம், பத்மபூடணம் ஜெயகாந்தன்

இந்த ஆண்டு பல தமிழ்நாட்டுக் காரர்களுக்குப் பத்மம் விருதுகளை இந்திய அரசு வழங்கிக் கௌரவித்துள்ளது. பாராட்டுதல்கள்!
http://www.hindu.com/2009/01/26/stories/2009012656850400.htm

6-7 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி செய்து இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நகரமாகத் திருப்பூரை மாற்றியமைத்தவர்களுக்கு அங்கீகாரமாக ஏ. சக்திவேல் அண்ணனுக்கு பத்மஸ்ரீ பரிசு! அண்மையில் வெளிவந்துள்ள ஹரீஷ் தாமோதரனின் புத்தகத்தில் திருப்பூரின் பொருளாதார வளர்ச்சி பற்றிப் படிக்கலாம்.

120 ஆண்டுகளாய் ஹார்வர்ட் ஓரியெண்டல் சீரீஸ் பழைய நூல்களை செம்பதிப்பாய் அச்சிடுகிறது. இருக்குவேதம், புத்த வசனம், திரிபிடகம், மகாயானம், ... என்றே இருக்கும். இந்நிலையை மாற்றியவர் ஐராவதம் மகாதேவன்!
http://www.hindu.com/mag/2007/02/04/stories/2007020400260500.htm

2003-ல் ஐராவதத்தின் Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D ஹார்வர்ட் ஓரியெண்டல் வரிசை வெளியீடாக வந்தது.

வாய்மொழி இலக்கியமாக இருந்த தமிழ் எழுத்தை எவ்வாறு அடைந்தது?
http://www.hinduonnet.com/fline/fl2007/stories/20030411001208100.htm
http://www.varalaaru.com/Default.asp?articleid=729

ஐராவதச் செவ்வி,
Straight from the Heart - Iravatham Mahadevan
http://www.varalaaru.com/Default.asp?articleid=740

பத்மஸ்ரீ ஐராவதத்திற்கு வாழ்த்துக்கள்!

----------------------------------------------------

பல ஆண்டுகளாக குமுதம், விகடன் எழுதி நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு புரிந்துவரும் முருகேசன் என்னும் இயற்பெயர் கொண்ட செயகாந்தனுக்குப் பத்மபூடணம் விருது. ஏற்கெனவே சாகித்திய அகாடமி, ஞான பீட விருதுகளை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் போல மறைந்த எழுத்தாளர் சுஜாதா பெற்ற விருதுகள் என்னென்ன? என்பதறிய ஆவல். வெகுசனப் பத்திரிகைகளில் கதை எழுதிப் புகழ் படைத்த ஜெயகாந்தன், அசோகமித்திரன், .... போன்றோருக்கு அடுத்துத் தமிழின் பெரிய எழுத்தாளர்கள் கணினியை, வையவிரிவலையை ஒதுக்க முடியாது. சுஜாதா வலையுலகில் முதலில் எழுதிக் காட்டினார். கணினியுலகம் புதுப்புது நல்ல எழுத்தாளர்களைத் தோற்றுவிக்கும். கணினியிலும், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதும் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு, ஜமாலன், நாகார்ஜுனன், போன்ற அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், அவர்களின் வாசகர்கள், ... என்று பெருகும்.

மரங்களை அழித்து வெட்டி இலட்சக்கணக்கான புத்தகங்களாக அச்சடித்து வினியோகிப்பதைவிட, இனி வரும் காலங்களில் சிறுகதை, நாவல் முதலிய புனைகதைகளை பிரபல எழுத்தாளர்கள் கணிவலையில் வைத்துவிட்டால் ஜனப்பெருக்கத்தாலும், காடுகள் அழிவதாலும், பேப்பர் தயாரிப்புத் தொழிற்சாலைகள் கெடுக்கும் சுற்றுப்புற இயற்கையும் இந்தியாவில் ஓரளவு சீராகும். தமிழ்நாட்டில் சுற்றுப்புற மாசு நீங்க புனைவு எழுத்தாளர்கள் மென்மேலும் கணிவலை உபயோகிக்க வேண்டும். செத்த மரத்துக் காகிதங்களைச் செதுக்கும் எழுத்தாளர்கள் புனைவுகள் மிகுதியாக வலையில் இடம்பெற்றால் இயற்கைக்கும் மரங்களுக்கும் பளுக் குறையும்.

இதைப் பத்மபூஷண் செயகாந்தன் போன்றோர் முன்னெடுத்துச் செல்லவேண்டும், அறிவுரை வழங்க வேண்டும்.

கணினி பற்றித் தெரியாதவர் ஜெயகாந்தன் போலும். அவர் வலையுலகில் எழுதாதவர். வலைப்பூக்கள், தமிழ்மணம், திரட்டி போன்ற மேடைகளை, புது ஊடகங்களின் ஆற்றலை இன்னும் பயன்படுத்தாதவர். சென்ற ஆண்டு சுஜாதா இரங்கல் கூட்டத்தில் "கணினி" என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர் என்று ஜெயகாந்தன் கூறினார்! அவர் உரை: "இது விமரிசன மேடையில்லை. உணர்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் என்னைத் தேடி வந்தார். அக்காலக் கட்டங்களில் மனைவியின் பெயரில் கதை எழுதுபவர்களை நான் கிண்டலடித்ததுண்டு. தமிழுக்கு அவர் கொடுத்த புதுமையான விஷயங்களை சிலாகிக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு கணினி என சொல் உருவாக்கியது அவரே. அவரது விஞ்ஞானக் கதைகள் பாராட்டத்தக்கவை."ஆனால், ஜெ.கா-வின் இக்கூற்று உண்மை அல்ல. "கணினி" என்னும் கலைச்சொல்லை மலாயா தொலைக்காட்சியிலும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியிலும் 1970களின் கடைசி, 1980கள் தொடக்கத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். 1990களின் மையம் வரை சுஜாதா கணிப்பொறி என்றுதான் எழுதினார்.

ஜெயகாந்தன் போன்றவர்கள் இனிக் கணினியில் கட்டுரைகள் எழுதவேண்டும். எழுத, எழுதப் பின்னூட்டங்கள் கிடைக்கும் அல்லவா?

நா. கணேசன்

பி. கு.:
http://rprajanayahem.blogspot.com/2009/01/blog-post_26.html
நாகேஷ், அசோகமித்திரன், .... இருக்கும்போதே விருதுகள் பெறுவரா?

ஸம்ஸ்க்ருதம், தமிழ் பற்றி மயிலாப்பூரில் ஜெயகாந்தனின் உரை (2005) கணினியுலகில் பெரும் சர்ச்சை ஆனது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஜெ.கா-வுக்கு அனுப்பிய கடிதம்:
http://manikoondu.blogspot.com/2005/05/blog-post.html

ஒபாமா - காந்தி, அண்ணா ஒப்பீடு

காந்தியும் ஒபாமாவும் என்று வைத்தியநாதையர் தலையங்கம் எழுதியுள்ளார். சிந்திக்க வேண்டிய கட்டுரை. நேற்று கவிஞர் சிற்பியுடன் பேசிக்கொண்டிருந்த போது படிக்கச் சொன்னார். சென்னைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி அவர்களும் வந்திருந்தார்.

1967-ல் தமிழ்நாட்டின் அப்போதைய ஒபாமா சிஎன்ஏ என்றேன்.

பொள்ளாச்சியில் பிப். 4-6 தேதிகளில் சிலப்பதிகாரக் கருத்தரங்கு. டெல்லியில் இருந்து கி. நாச்சிமுத்து வருகிறார் என்றார்.

நா. கணேசன்


-------------------


தினமணி ஸ்ரீ வைத்தியநாதையர் எழுதின தலையங்கத்தை இணைத்துள்ளேன். அவரது நண்பர்கள் யாராகிலும் தொடர்பு கொண்டு தினமணி மேனேஜ்மெண்ட்டை அணுகி தினமணியை யூனிகோடு எழுதுருவுக்கு மாற்றச் சொல்லவும். குமுதம், விகடன், காலச்சுவடு, தினமலர், .... இன்ன பிற வெகுஜன பத்திரிகைகளைச் சான்று காட்டி, தேடி எந்திரங்களின் பயன்கூறி விளக்கினால் நிச்சயம் தினமணி யுனிகோட் ஆகிவிடும்.

உதவ வேண்டுகிறேன். அதுவரை, உங்களுக்குப் பிடித்த கட்டுரையை (தமிழ், சங்கீதம், அரசியல், ....) யூனிகோட் மாற்றி, - சுரதாவின் பொங்குதமிழ் - கைகொடுக்கும்.

பாவிக்க:
http://www.suratha.com/reader.htm

மேல்பெட்டியில் தினமணி பத்திகளை இடுக. Dinamani என்ற பொத்தானைச் சொடுக்குக. கீழ்ப் பெட்டியில் உங்கள் விருப்பக் கட்டுரை யூனிகோடில் அவதாரமாகும்.

தினமணியை யூனிக்கோட் ஆக்க உதவுங்கள்!

நன்றி!
நா. கணேசன்


...எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்: காந்தி கண்ட கனவு!

கே.வைத்தியநாதன், தினமணி, 22-1-2009

அமெரிக்காவின் 44-வது அதிபராக 47 வயது பராக் ஹுசேன் ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவைத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் பார்த்த அனைவரும், நடப்பதெல்லாம் நிஜம்தானா என்று பல தடவை கிள்ளி விட்டுக் கொள்ள நேர்ந்திருக்கும்.

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையையோ வெளிவிவகாரக் கொள்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கலாம். "நாம்' என்று கூறுவது ஏன் என்றால் என்னைப் போன்ற பலருக்கும் அவை ஏற்புடையதல்ல. ஆனால், மக்களாட்சியின் மகத்துவத்துக்கு அமெரிக்காவைவிட ஒரு உதாரணம் இருக்க முடியுமா என்றால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி "இல்லை, இல்லை' என்று குரலெழுப்பத் தோன்றுகிறதே!

இப்படியெல்லாம் ஒரு தலைவர் இருக்க முடியுமா? இப்படி ஒரு ஜனநாயக உணர்வுள்ள ஒரு தேசம் இருக்க முடியுமா? இப்படி ஒரு தேசப்பற்றுள்ள மக்கள் வேறு எங்காவது இருப்பார்களா, இருக்கிறார்களா என்று பிரமிக்கவைத்து விட்டார்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அங்கே போய் குடியேறிய இப்போது அமெரிக்கர்களாக இருக்கும் பல்வேறு இனத்து மக்களும், மதத்தினரும்!

பராக் ஹுசைன் ஒபாமா! எத்தனை அற்புதமான தலைவர் இவர். அவரது முகத்தில் வெற்றிக் களிப்பைக் காணமுடியவில்லை. இறுமாப்பின் நிழல்கூட இல்லை. ஆனால், என் தாய் மண்ணின் தலையெழுத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி இருக்கிறது.

ஒட்டுமொத்த மனித இனத்தை வழிநடத்தும் பொறுப்பு தான் வகிக்கும் பதவிக்கு இருக்கிறது என்கிற கடமை உணர்வு இருக்கிறது.

ஒருபுறம் பயங்கரவாதம், மறுபுறம் பொருளாதாரப் பின்னடைவு. இவைகளுக்கு இடையே தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு நம்பிக்கை ஊட்டுவதுடன் மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சவால்களை எதிர்கொள்ளவும், வெற்றி காணவும் முடியும் என்று அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாரே, இவரல்லவா தலைவர்?

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். அதிகாலையில் எழுந்திருந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாதா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்துகிறார். நான் நாத்திகன் என்றோ, கடவுள் இல்லை என்றோ ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. மனைவியையும் குழந்தைகளையும் மாதா கோயிலுக்குத் தனது சார்பில் அனுப்பிவிட்டு, நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பகல் வேஷம் போடவில்லை. தனது இறை நம்பிக்கையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நாணயம் அவருக்கு இருக்கிறது.

சரி, பெருவாரியாக கிறிஸ்தவர்கள் வாழும் அமெரிக்காவில் அதிபராகும் வேளையில் தனது இஸ்லாமியப் பின்னணியை மறைக்க வேண்டும் என்று நின்றால் அதுவும் இல்லை. உலகமெலாம் பரந்துகிடக்கும் இஸ்லாமிய சமுதாயம் அமெரிக்காவின் மீது கோபமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தனது பிறப்பையோ, வளர்ப்பையோ மறைக்க விரும்பாத இந்த னிதனின் துணிவு நம்மை அசர அடிக்கிறதே...

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக முதன்முதலில் உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்று, அதற்காகத் தனது உயிரைப் பலி கொடுத்த முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தனது பதவிப் பிரமாணத்துக்கு 1861-ல் யன்படுத்திய அதே பைபிள் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பராக் ஒபாமாவின் செய்கை நமது இந்திய அரசியல்வாதிகளின் சில்லரை புத்திக்கு ஒரு சம்மட்டி அடி.

பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ஆபிரகாம் லிங்கனோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆச்சரியம் இத்தோடு முடிந்து போகவில்லை.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிப் பிரமாண சடங்கில் பிரமிக்கவைத்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. அங்கு கூடியிருந்த 20 லட்சம் மக்களில் ஒருவர்கூட ஜனநாயகக் கட்சி கொடியுடன் வந்திருக்கவில்லை. அத்தனைப்பேரும் தேசியக் கொடியுடன் தங்களது ஒட்டுமொத்த தேசத்தின் தலையெழுத்தையும் அடுத்த நான்கு ஆண்டுகள் வழி நடத்த இருக்கும் கறுப்பர் இனத் தலைவரிடம் பதவிப் பிரமாணத்தின் மூலம் அமெரிக்க நாட்டின் சாதனையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்களே! அந்த தேசிய உணர்வுக்கு தலைவணங்காமல் இருப்பது எங்ஙனம்?

நமது நாட்டில் இப்படியொரு பதவிப் பிரமாணம் நடந்திருந்தால் அதில் கட்சிக் கொடிகள் அல்லவா இருந்திருக்கும்? தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்து விட்டால் கட்சி மாச்சரியங்களை மறந்து, ஒட்டுமொத்த மக்களின் தலைவராக பதவியேற்று ஆட்சி நடத்தும் அரசியல் பக்குவம் நம்மிடம் இல்லாமல் போனது ஏன்?

தனது பதவிப் பிரமாணத்தைக் காண அமெரிக்காவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் திரண்டு வந்திருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், "ஆதலால் ஆண்டவரே எனக்கு உதவுவீராக' என்று இறைவனின் துணையுடன் தனது சரித்திரக் கடமையை நிறைவேற்ற இருக்கும் இந்த மாமனிதன் அதற்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரை இருக்கிறதே, அதன் தனிச் சிறப்பு உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் அது பொருந்துவதாக இருக்கிறது என்பதுதான்.

பராக் ஒபாமாவுக்கு பதில் அந்த உரையை புதினோ, சர்கோசியோ, மன்மோகன்சிங்கோ யாராக இருந்தாலும், அவரவர் நாட்டு மக்களின் பிரச்னைகளின் கடுமையையும், அதிலிருந்து வெளிவர முடியும் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அற்புதமான உரை அது.

""நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை. அவை பலதரப்பட்டவை. அவை கடுமையானவை. மிகவும் குறுகிய காலத்தில் அவைகளுக்கு நாம் தீர்வு காண்பது இயலாத விஷயம்'' என்கிற உண்மை நிலைமையைத் துணிந்து மக்கள் முன் வைக்கிறார்.

""கருத்து சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்களும், பெண்களும் தங்களுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தி, தேசநலனுக்காக, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட்டு செயல்பட்டால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்'' என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

""நமது அரசாங்கம் பெரியதா, சிறியதா என்பதல்ல பிரச்னை. அது செயல்படுகிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். குடும்பங்களில் நிம்மதியும், அமைதியும் நிலவுகிறதா, வேலையில்லாத் திண்டாட்டம் போகப் பயன்படுகிறதா, கெüரவமான ஊதியத்துக்கு வழி செய்கிறதா, முதியவர்கள் கண்ணியத்துடனும், நிம்மதியாகவும் வாழ சமூக பாதுகாப்பு தரப்படுகிறதா என்பதுதான் நம் முன் உள்ள பிரச்னைகள்'' என்று அடைய வேண்டிய லட்சியங்களைப் பட்டியல் இடுகிறார்.

""மக்களுடைய பணத்தைச் செலவிடும் பொறுப்புள்ள நாம் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசுப் பணத்தை முறையாக, சரியாக செலவிட வேண்டும். நமது செயல்பாடுகள் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்'' என்று நிர்வாகத்திற்கு வழிகாட்டுகிறார்.

""சந்தையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாவிட்டால் அது ஒரு நாள் கட்டுமீறிவிடும். பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஒரு நாடு என்றால் அது வளர்ச்சியடைய முடியாது. நமது பொருளாதார வெற்றி என்பது நாட்டின் இந்த வளர்ச்சியின் பயனை எல்லோருக்கும் கொடுப்பதில்தான் இருக்கிறது'' என்று தனது பொருளாதாரப் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

அண்ணல் காந்தியடிகள் சொன்ன அதே விஷயங்கள் இப்போது அமெரிக்க அதிபரால் வாஷிங்டனிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்படுகிறது என்பதை எண்ணும்பொழுது அதிசயமும், ஆச்சரியமும் ஏற்படுவது நியாயம்தானே.!

அதிபர் பராக் ஒபாமா மாதா கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட கையொடு, பதவிப் பிரமாணம் முடிந்து உரையாற்றுகிறார், ""கிறிஸ்தவர், இஸ்லாமியர், யூதர், இந்துக்கள் மற்றும் மதநம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இதில் எந்த மதமும் ஏற்றத்தாழ்வுடையதல்ல'' என. இதைத் தானே 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அண்ணல் காந்தியடிகள் சொன்னார்.

பராக் ஒபாமாவின் வெற்றி கறுப்பர் இன மக்களின் வெற்றி என்று சொன்னால் அது தவறு. உண்மையில் இது இனவெறியை ஓரங்கட்டிய அமெரிக்காவின் வெற்றி. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், வெள்ளை இனத்தவர்களின் பெருந்தன்மைக்குக் கிடைத்த வெற்றி.

அமெரிக்க மக்கள் தொகையில் கறுப்பர் இனத்தவர் வெறும் 13.1 சதவீதம்தான். இவர்களது ஒட்டுமொத்த வாக்குகள்கூட பராக் ஒபாமாவை வெற்றியடைய வைத்திருக்காது.

அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்கள், ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று விழைந்து மனமுவந்து வாக்களித்து ஒரு கறுப்பர் இனத்தவரை அதிபராக்கி இருக்கிறார்கள். தாங்கள் செய்த தவறை உணர்ந்து சரித்திரத்தை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்திலும் அண்ணல் காந்தியடிகள்தான் முன்னோடி என்று எப்படி சொல்லாமல் இருப்பது?

காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் அவர்களைப் போராடச் சொல்லவில்லை. உயர் சாதியினரிடம் தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜனங்கள், அதாவது கடவுளின் குழந்தைகள் என்று உணர்த்தினார். மனிதனை மனிதன் ஆண்டான், அடிமை என்று ஏற்றத்தாழ்வுடன் நடத்துவது தவறு என்று எடுத்துரைத்தார். நீங்கள் அவர்களை உங்களுக்கு சமமானவர்களாக நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போங்கள்' என்று கட்டளையிட்டார். தங்களை மேற்குடி என்று சொல்லிக் கொள்பவர்களின் சிந்தனையில் இருந்த சிலந்தி வலைகளை அகற்ற முற்பட்டார்.

மகாத்மா காந்தி என்கிற அந்த மாமனிதர் 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவை, தாழ்த்தப்பட்ட இனத்தவர்களே கொச்சைப்படுத்தாமல் இருந்திருந்தால், அவரது தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் இந்த விஷயத்தில் முனைப்புடன் சமுதாய உணர்வுடன் செயல்பட்டிருந்தால், அமெரிக்கா ஒரு பராக் ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்போல, இந்தியா எப்போதோ ஒரு ஹரிஜனத் தலைவரைத் தனது பிரதமராக்கி மனித இனத்துக்கு வழிகாட்டி இருக்கும்.

உலகின் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. இரட்டை கோபுரமே தகர்க்கப்பட முடியும் என்று தீவிரவாதிகள் அமெரிக்க நிர்வாகத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சவால் விட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில், 20 லட்சம் பேர் கூடியிருக்கும் திறந்தவெளியில், குண்டு துளைக்காத மேடையோ, சுற்றிலும் கறுப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் என்று கையில் துப்பாக்கி ஏந்திய பூனைப்படையினரோ இல்லாமல், துணிந்து பராக் ஒபாமா பதவி ஏற்கிறார், ஆச்சரியமாக இல்லை? சம்பிரதாயங்களை மீறி, திறந்தவெளியில் தைரியமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதன் மூலம், அமெரிக்க மக்கள் மத்தியில் இருந்த பயத்தையும் பீதியையும் போக்கி அவர்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறார் ஒபாமா.

அன்று நவகாளியில் சட்டை அணியாத திறந்த மார்புடன் தள்ளாத வயதில் தைரியமாக அண்ணல் காந்தியடிகள் நடந்த காட்சி நிழலாடுகிறது.

இது அண்ணல் காந்தியடிகள் கற்றுத் தந்த பாடமல்லவா? மக்களுக்காக நான் உயிரை விடவும் தயார் என்று சொல்லாமல் சொல்லி, அன்னிய ஏகாதிபத்தியத்தையே அச்சுறுத்திய அண்ணலில் வழித்தோன்றல்கள் இப்போது கறுப்புப்பூனைகளை அங்கீகாரமாகவும், தங்களது தகுதியின் அடையாளமாகவும் கருதுகிறார்களே, அதை யாரிடம் சொல்லி அழ?

நாம் வேண்டுமானால் மகாத்மா காந்தியை மறந்திருக்கலாம். ஆனால் உலகம் மறக்கவில்லை. நாம் அண்ணல் காந்தியடிகள் வகுத்துத்தந்த பாதையையும் அவரது வழிகாட்டுதல்களையும் மறந்திருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்னால் காந்தியடிகள் கண்ட கனவு நனவாகி இருக்கிறது.

"முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!' என்று மகாகவி பாரதி போற்றிய அண்ணல் காந்தியடிகளின் கனவு நனவாகி இருக்கிறது- இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில்!

தினமலரின் முதல் எழுத்துரு - 1987

தமிழ் தினசரி வெளியாகும் பத்திரிகைகளில் Dr. எம். என். கூப்பர் தான் தினமலருக்கு முதலில் ஃபாண்ட் செய்தவர்:
http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/Cooper.aspx

இதுவே தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகைக்கு ஃபாண்ட் வந்த வரலாறு. 2007-ல் முனைவர் கு. கல்யாண் அவர்களுக்கு கூப்பர் எழுதிய மடல்:


-----------------------------------------------------------------------------------------------------------------
Font Making at Modular Infotech, Pune

Modular Infotech was established in the year 1983 (It was named Modular Systems then). We had a dream, we wanted to enable Indian scripts on computer, mostly to boost printing industry. At that time PC were very uncommon and when available they were very expensive. We noticed that there was almost no work done in this line and we had to start from scratch.

We decided to develop a CRT based phototypesetter (PTS100) from first principles. We had to develop techniques for font coding, digitizing and rasterizing, Language composing and page setting, proof-printing on dot-matrix printer, preview of composed text on monitor before it is phototypeset on the typesetter. We also had to develop hardware for data entry in Indian scripts, and exposing the digitized fonts to print on photographic film. Well, we did all that and the phototypesetter PTS100 was ready by 1985. We sold the first PTS100 to Mr. C. S. Latkar, owner of Kalpana Mudranalaya, Pune. He too insisted that we digitize his font before the delivery of PTS100. We did that.

This caught the attention of owners of Dinamalar Newspaper chain and they came down to Pune for seeing this newly made PTS100. All of the five brothers were impressed and they decided to go for PTS100 for their newspaper. We had very little exposure to Tamil script at that time except what was available in primary school books. Mr. R. Krishnamoorthy, the editor Dinamalar, came to our rescue and volunteered to help us without expecting anything in return. He stayed in Pune for weeks to help us develop the Tamil fonts and the keyboard layout. It was a pleasure to work with Mr. Krishnamoorthy, a scholar of Tamil. This was our first encounter with Tamil script and we made it a success by finally delivering the PTS100 to Dinamalar Newspaper. We reinvested the revenue received from the above sale into developing more Tamil fonts.

We were thus unwittingly getting dragged into providing Indian Language solutions on PC.

Dr. M.N. Cooper
-------------------------------------------------------------------------------------------------------
கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டால் உங்கள் மொழி அறிவு, வரலாறு அறிவு வளரும். அகில இந்திய பணித் தேர்வுகளில் வெற்றி பெறலாம், என தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

ரீச் பவுண்டேஷனும், ஜானகி எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லூரி நாட்டியத் துறையும் இணைந்து நடத்திய தமிழ்க் கல்வெட்டுக் கற்றல் விழா, அக்கல்லூரியில் நேற்று (18/01/09) நடந்தது.

*"**தினமலர்**' **ஆசிரியர்** **தலைமை** **வகித்துப்** **பேசியதாவது**:-*
**
**தமிழகத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. மத்திய அரசின் கீழ்வுள்ள தொல் எழுத்துத் துறையிடம் 75 ஆயிரம் கல்வெட்டுக்கள் படியெடுத்து வைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு படிப்பதில் எனக்குள்ள ஈடுபாடு ஒரு வியக்கத்தக்கதாகத் தான் கருத வேண்டும். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த பின் தந்தை நடத்திய பத்திரிகையில் பணியாற்ற முற்பட்டேன். 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாளேட்டின் பக்கங்கள் கையால் தான் அச்சுக் கோர்க்கப்பட்டது. ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது வேகமாக அச்சுக் கோர்க்கலாம். ஆங்கில மொழிக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. தமிழ் மொழிக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் நேரம் அதிகரிக்கும். கடினமான வேலையாகவும் இருக்கும்.

பெரியார் அவர்களின் "விடுதலை" நாளேட்டில் எழுத்துச் சீர்மை செய்யப்பட்டிருந்தது. அச்சீர்மை சரியானது என்று உணர்ந்தேன். அதை செயல்படுத்துமுன், தமிழ் எழுத்துக்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் - பிராமி எழுத்துக்களைக் கற்றேன். அதன்பின் வந்த வட்டெழுத்துக்களைப் படித்தேன். மூன்று நூல்கள் எழுதினேன். அந்த ஆராய்ச்சியின் காரணமாக எனக்குத் துணிச்சல் ஏற்பட்டது. பெரியார் செயல்படுத்திய எழுத்துச் சீர்மையை 1977 ஆம் ஆண்டு திருச்சி தினமலர் நாளிதழில் புகுத்தினேன். ஆரம்பத்தில் சிறு எதிர்ப்பு இருந்தாலும் பிறகு வெற்றி கிடைத்தது. உற்பத்தி இரண்டு மடங்காக கூடியது. அதிகம் கல்வி கற்காதவர்கள் எளிதாகப் படிக்கத் துவங்கினர். எம்.ஜி.ஆர்., அரசு பிறகு தான் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தியது.


தமிழ் - பிராமி எழுத்து முறை கற்றதின் காரணமாக, மதுரையில் கிடைத்த சங்ககால நாணயத்தில் "பெருவழுதி" என்ற பெயர் இருப்பதைப் படிக்க முடிந்தது. 1984 ஆம் ஆண்டு அக்காசு கிடைத்தது. சங்ககால பாண்டிய மன்னன் வெளியிட்டது. இந்த நாணயம் தான் சங்ககால நாணய வரலாற்றுக்குத் திறவுகோல். கரூரில் இதுபோன்ற சங்ககால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளை முதன் முதலாகக் கண்டுபிடித்தேன். 1987ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. என் தொன்மை எழுத்து அறிவின் காரணமாக 1987ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்கான "சாப்ட்வேர்" தயார் செய்தேன். புனேயிலுள்ள ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் உதவி செய்தார். உலகெங்கும் இந்த "சாப்ட்வேர்" இப்பொழுதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேலைக்கு நான் எந்த காப்புரிமையும் பெறவில்லை. தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற எண்ணத்தில் தான் செய்தேன். கல்வெட்டுத் துறையில் ஆராய்ச்சி செய்தால் வாழ்வில் நன்மை பயக்கும்; பல வெற்றிகள் கிடைக்கும். கல்வெட்டு ஆராய்ச்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபடுவதால் ஆங்கிலம், தமிழ், வரலாறு என்ற பாடங்களிலும் அறிவு பெருகும்;திறமையும் வலுப்பெறும். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

*ரீச்** **பவுண்டேஷன்** **நிறுவனர்** **தியாக**.**சத்தியமூர்த்தி** **
பேசியதாவது**:-*

நாட்டில் உள்ள புராதன சின்னங்கள்,கல்வெட்டுக்கள் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பழங்கால சின்னங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. குறிப்பாக எந்த தேதியில் எப்படி, யாரால் கட்டப்பட்டது என்ற புள்ளிவிவரம் இல்லை. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அதில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுக்கள். திருப்பணி என்ற பெயரில் கோவில்களில் காணப்படும் கல்வெட்டுக்களை அழிக்கக் கூடாது. கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் மொழியை பாமரனையும் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் அறிவும்,கல்வெட்டு அறிவும் பெருகும். தமிழ் மொழி பெருமை அடையும். இவ்வாறு தியாக.சத்தியமூர்த்தி பேசினார்.

கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் பேசுகையில், "தொல்லியல் துறை, கல்வெட்டுத் துறை,நாணவியல் துறையின் ஆய்வாளர்களுக்கு டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி ரோல் மாடலாக விளங்குகிறார்,"என்றார். விழாவில் சந்திரசேகரன், டி.கே.வி.இராஜன் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில்,நாட்டிய ஆசிரியையான நடிகை சொர்ணமால்யா கணேஷ் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்

கமில் சுவலபில் (1927 - 2009)

பேரா. மு. இளங்கோவன் அவர்கள் தமிழ்/திராவிடவியல் முனைவர் கமில் ஃசுவலெபில்லின் மரணம் பற்றி அறிவித்தார். பேரறிஞர் சுவலெபில் மரணம் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

Dravidology என்ற கலைச்சொல்லை ஆக்கி, பல நூல்களை யாத்து, ஸம்ஸ்க்ருதப் பேராசிரியன்மாரிடம் தமிழை, தமிழின் தொன்மையை விளங்கச் செய்த மேதை அவர். அவர் பாட்டை போட்ட பின்னர் தான் ஹார்ட், பார்ப்போலா, ... தோன்றினர். குரோ பிரெஞ்சு மொழியில் தமிழை எழுதினார்.

குடத்து விளக்கைக் குன்றின்மேலிட்ட விளக்காக்கியவர் சுவலெபில்.

தமிழ்த்தாய் அம்மகனை அழைத்துத் தன் மடிநீழலில் இருத்தி இளைப்பாற்றுவாளாக!

நா. கணேசன்

On Jan 17, 12:22 pm, மு இளங்கோவன் wrote:
> செக்கோசுலேவியா நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் இன்று 17.01.2009 இயற்கை எய்திய செய்தியை அவர் துணைவியார் நினா சுவலபில் அம்மா அவர்கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் மொழியியல்,தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமில் சுவலபில் அவர்களைப் பற்றித் தமிழ் ஓசையில்(16.11.2008) அயலகத் தமிழறிஞர்கள் வரிசையில் நான் எழுதியிருந்தேன்.என் பதிவிலும் தகவல் உள்ளது.

நினா சுவலபில் அவர்களின் மடல்
Dear DR,Elangovan

Dear dr, Elongovan, I just want to inform you that my husband Kamil Zvelebil died 17th of January yours N. Zvelebil.

முழு வாழ்க்கைக்குறிப்பு அறிய என் பக்கம் செல்க!

http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html

அகநானூறு 141-ம் பாடலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபமும்

அகநானூறு 141

பாடியவர்: நக்கீரர், திணை: பாலை,
துறை: பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற
தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி 141-5

மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 141-10

விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 141-15

கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது: 141-20

நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை 141-25

நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே. 141-29akanAn2URu 141 and TiruvaNNaamalai legends
-----------------------------------------------------------------

This aka. poem 141 clearly refers to the Karrtikai viLakkITu festival. The most famous stalam for this festival in India is TiruvaNNaamalai where 'Siva rose as the linga of fire (Lingodbhava) [1]. The poem refers to a full-moon day when the aRu-miin, the ancient star asterism Pleiades is with the moon i.e., the kArttikai diipam festival day in all 'Siva temples in Tamilakam in the Tamil month of kArttikai. Deepavali occurs next to Aippasi amaavaasai, while Karttikai viLakkiiTu is on a Pournami day, exactly one fortnight after Deepavali.

Annamalai is akkin2i-t-talam (site of fire), agni is one of the five primal elements in Hinduism. All the five elemental 'Siva temples are located in Tamizhakam.

A day before Aippasi amaavaasai is the Deepaavali day, traditionally the start of the Dice game between 'Siva and Parvati. This game is disturbed by RaavaNan, the demon king of Lanka. Ravana shaking the Kailash mountain is told in Kalittokai and 100s of times in Tevaram especially by Appar. A good book on this dice game from Tamil, Sanskrit, art sources etc., is David Shulman et al., God Inside Out: Śiva's Game of Dice, OUP, 1997 (I've a copy somewhere.) He gives the Tevaram occurrence for Siva's dice game. Interestingly 'Siva is called vaTTan2 'one who plays dice' as the very first epithet in Appar's TiruvaNNaamalaip patikam. The entire patikam flows like a Tamil archana stotram on 'Siva. Starting from vaTTan2 in Appar's Annamalaip patikam, Shulman begins with the dice game and discusses later happenings of the myth cycle as narrated in all the Tamil stalapuranams, Kandapuranam legends and those in Sanskrit and Telugu. Here are the Ellora and Elephanta representations of the dice game:
http://groups.google.com/group/minTamil/msg/489e1c5b4025f669

Tiruppukaz refers to 'Siva-Parvati tiruviLaiyaaTTu "sacred game (of dice)":
http://groups.google.com/group/minTamil/msg/10451733300f4d2a
http://groups.google.com/group/minTamil/msg/4b16748e39381d65

The poem aka. 141 mentions the perfume, takaram made from a plant (as in many other Sangam poems). And this is "tagara" in Sanskrit. "takarai" is used on brides in Tamil weddings as in aka. 141. Traditionally for "Thalai Deepavali" (first Diwali), recently weds are invited back to parents' homes, and games (dice, ...) and a joyous holidays follow.

This poem (aka. 141) refers to the lady telling that her husband will join her soon from a war expedition in a desert, and I will mention below how Uma-I'svara uniting is suggested in aka. 141 itself which parallels the 'srI as a mark (maRu) on the chest of Vishnu.

The festival most famous in the agni-stala, Annamalai on the Pournami day in the month of Pleiades is the Karttikai ViaLkkiTu of aka. 141.

This aka. poem mentions many place names, is one of them Tiruvannamalai in commentaries?
i.e., "பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுஉடன் அயர," aka. 141, lines 10-11

Does "paza viRal" refers to ancient (= "paza") Lingodbhava legend, showing 'Siva parAkramam where he appears as a fiery pillar that Hari and Brahma could not reach the linga's top and bottom ends? mUtUr = 'ancient place/village', the place where Lingodhbhava incident supposedly took place. For another instance of Kartikai deepam festival at பழவிறல் மூதூர், possibly TiruvaNNaamalai in akanAn2URu, refer [2]. In puraaNams, this place is identified as TiruvaNNaamalai (site of medieval Rishis like Guru Namasivayar, Guhai N., and modern Ramanar). vizavu ("kArttikai viLakkITu") festival in "pazaviRal mUtUr" (Annamalai?).

"maalai tuukki" (aka. 141.9) = raising garlands. The mundane meaning is of course folks put up the earthen lamps (on the Karthikai diipam day) and the darkness is gone, say, like Xmas lighting. Another uLLuRai meaning the 'maruL/mayakkum iruL' (maal(ai)) is gone due to the "viLakku uRuttal" for "Kartikai viLakkIDu" which is the theme of the poem.

It is very interesting how the three most important 'Saiva calender festivals are alluded to in aka. 141.6-9:

"                                        விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி"

The mark (maRu) on the full moon, called the rabbit on the moon in world's folklore and in Sangam texts as well, seems to refer to Parvati devi (Cf. tiru-maRu on Vishnu's chest. Likewise Umaa as the maRu mark on the moon "soma"/"candra", a symbol of 'Siva). See the contemporary description of Kaarttikai viLakkiiDu festival in [1] where the most important event is the appearance of AruNaacale'svarar as ArdhanAri to devotees just before the large deepam is lighted upon the 2668-feet high hill.

Pleiades (= six women) joins the Moon with rabbit-mark "maRu"(symbolically 'Siva-Parvati) to bring up the product of their union, baby Murukan/Sanatkumara/Skanda.

Murukan's suura-samhAram festival date also falls in between the Diwali and Karttikai Deepam dates, and on that 'Sukla shaSTi day, the Kanda SaSTi vratam for Murukan ends. Watch Suura samhaaram festival in Trincomalee (tirukONamalai in Tevaram hymns).


In sum, aka. 141 poem is very important in recording the three 'Saivaite festivals of Tamils based on ancient astronomical calculations.

A beautiful sangam poem with astronomical allusions to three most important festivals in Tamil 'Saiva calender year cycle: (a) Deepavali, where the divine couple start the dice game (b) 'Siva parakrama episodes follow culminating in Lingodbhava utsavam in Tiruvannamalai and (c) 'Suura samhaaram by the divine couple's child, Murukan.

Regards,
N. Ganesan

[1] திருக் கார்த்திகை தீபம்
http://groups.google.com/group/minTamil/msg/2cf33854a95d5574
http://www.shaivam.org/siddhanta/karthikai.html

[2] விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, (அகம், 17, 19-20)

                                        வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப், (அகம் 185, 10-12)

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். தேவாரம் 2.47.3

மழைகால் நீங்கிய மாக விசும்பில் (அகம் 141),
வான் உலந்து (அகம் 185).

Cf. கார்த்திகைக்குப் பின் மழையில்லை; கர்ணனுக்குப் பின் கொடையில்லை (பழமொழி).


'Siva in sangam lit.
http://www.shaivam.org/tamil/sanga.htm

http://www.shaivam.org/siddhanta/karthikai.html

2009-ல் தமிழ்மணம் கமழ்க!

மணக்கின்ற தமிழே!

மணக்கின்ற தமிழே! உன்னை
மறைக்கின்ற நிழல்கள் தன்னைத்
தணக்கின்ற சொல்லால் சாய்த்துத்
தடுக்கின்ற ஆற்றல் போலக்
குணத்திடும் இணையம் தன்னில்
கோபுரம் போல ஓங்கி
மணத்திடும் "தமிழ்ம ணத்தை"
மாண்புறச் செய்தோர் வாழ்க! (1)

இணையத்தில் எழுது கின்ற
இன்றமிழ் இலக்கி யத்தை
இணையற்ற தொகுப்பா யாக்கி
ஈன்றநம் தமிழ்க்கு நல்கும்
பணியினைச் செய்ய வேண்டும்!
பாரெலாம் வியந்து நோக்கத்
துணிவுடன் தமிழ்ம ணத்தைத்
தூயதாய்ச் செய்தல் நன்றாம்! (2)

புகைந்திடா நெருப்பைப் போலப்
பூத்திடாப் பூவைப் போல
அகழ்ந்திடக் கிடைக்கும் நல்லோர்
அணிந்திடும் அறிவைத் தேடிப்
பகிர்ந்திடும் பணியைச் செய்யும்
பண்பினைப் பெறுதல் என்றால்
உகந்திடும் உவகைக் காக
ஒன்றியம் ஒன்றைச் செய்வீர்! (3)

செல்லுகள் அரித்த ரித்துச்
சிதைந்திடும் தமிழர் தம்மின்
தொல்லகப் படைப்பை யெல்லாம்
தூயதாய் மீட்டெ டுக்கும்
நல்லகர் அணியை ஆங்கு
நடத்திட வேண்டு கின்றேன்!
வல்லவர் குறைந்து போனால்
வதைபடும் தமிழும் என்னும் (4)

உண்மையைத் தமிழர் தாமும்
உணர்ந்திடச் செய்தல் வேண்டும்!
புண்ணிய தீர்த்தந் தேடிப்
போவது போலச் சென்று
மண்ணிலே மறைந்து போகும்
மணித்தமிழ்க் கலைகள் தம்மை
வண்மையாய் வாங்கி வந்து
வாழ்ந்திடச் செய்வோம் வாரீர்! (5)

ஒன்றியம் தன்னைப் போல
உருப்பெறும் தமிழ்ம ணத்தை
வென்றிடச் செய்ய வாரீர்!
விருதுகள் பலவும் பெற்றுச்
சென்றிடும் மகிழ்வு கொண்டு
செந்தமிழ்ப் பணிக்கு வாரீர்!
முன்றிலின் இணையந் தன்னில்
மொய்த்திடச் செய்வோம் வாரீர்! (6)

      இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: http://groups.google.com/group/thamizayam/topics?gvc=1தமிழ்மணம் சிறந்து வாழ்க!

தமிழ்மணம் கமழ வேண்டும்
தாரணி புகழ வேண்டும்
கமழுல கெல்லாம் நின்று
கற்றவர் குழும வேண்டும்
அமிழ்தினும் இனிய நீதி
அகிலெனப் பரவ வேண்டும்
சுமையெலாம் இறக்கி வைக்கும்
சுமைதாங்கி ஆக வேண்டும்!

உன்றனைக் கண்டேன் உள்ளம்
ஒளிபெற நின்றேன் வையப்
பொன்தடம் பதிந்த தாலே
பூமியை வென்றேன் என்பேன்
மன்பதை மனித மாண்பு
மகத்துவத் துள்ளோர் எல்லாம்
இன்பொடு ஒன்றாய் நின்றார்
இதுபுது உலகம் என்பேன்!

காலத்தை வென்ற நீதி
களிநடம் புரியும் வீரர்
பாலமாய்ச் சுமக்கும் பூமி
பட்டொளிக் கொடியே வீசும்
ஞாலத்தின் புதிய நாடு
நயமிடத் தமிழ்ம ணத்தின்
சீலமே உலகை ஈர்க்கச்
செய்திடும் ஆண்டாய் வாழ்க!!

    - நம்நாடு புதியபாரதி இணையம்

உலகை இணையம் இணைக்கும்;
உலவு பவரைப் பிணைக்கும்;
இலகு வாக எதுவும்
எவரும் சொல்ல உதவும்;
பலரும் பகலும் இரவும்
படித்து மகிழ்ந்து பரவும்
வலையின் துணையும் கொண்டே
வளர்வோம்; வரையும் உண்டே?
~ வி. சுப்பிரமணியன்


தமிழ்த்தாயின் இணையக்கோயில்!

இணையறியா எழிலுறுநன் னூல்கடிரு மேனிதனில் இழையாய்ப் பூண்டு
துணையதுவே என்றறிஞர் துருவுநிகண் டகராதி தொடையாச் சூடிக்
கணையனகூர் மதிபெருகக் கணினிவழி வலையுலவிக் கற்போர்க் கேற்ப
இணையமிதோர் இல்லமெனத் தேர்ந்துதமிழ்த் தாயேயீண் டிலங்கு வாயே.

பதம் பிரித்து:

இணை அறியா எழில் உறு நல் நூல்கள் திருமேனி தனில் இழையாய்ப் பூண்டு
துணை அதுவே என்று அறிஞர் துருவும் நிகண்டு அகராதி தொடையாச் சூடிக்
கணை அன கூர் மதி பெருகக் கணினி வழி வலை உலவிக் கற்போர்க்கு ஏற்ப
இணையம் இது ஓர் இல்லமெனத் தேர்ந்து தமிழ்த் தாயே ஈண்டு இலங்குவாயே.

                ~ வெண்பாவிரும்பி

 தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத் தேடி
அலையும்போது
உன்னைக் கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக் கண்டோம்!!!

தரணித் தமிழர்
ஒன்றாய்க் கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக் கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம்
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க

வாழ்த்துக்கள்
பலர்
வழங்கக் கண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!


இந்த புத்தாண்டில்
தமிழ்மண நிர்வாகிகளுக்கும்
தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
தமிழ்மணத்தை
மேலும் சிறப்பாக
வழிநடத்திச்செல்ல
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!


தேவா.....