சங்கிலி அரசனின் வீணைக்கொடி

யாழ்ப்பாணம் ஊரின் பெயர், அதற்கான பழங்கதைகளை ஆய்ந்து வருகிறேன். விக்கிப்பீடியா போன்றவற்றில் யாழ்ப்பாணப் பெயர் பற்றிய நல்ல உசாத்துணைகளைக் காணோம்.

17-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் பாடல் ஒன்றை வைத்துச் சொல்லும் கதை மிகப் பிற்காலத்தது. வெள்ளைக்காரர்கள் அச்சு எந்திரத்தைக் கொடுத்ததும், மிஷனரிமார்களிடம் சொன்ன புனைகதை அதாகும். வீரராகவரின் நாடு சென்னையை உள்ளடக்கிய தொண்டைமண்டலம். திருவள்ளூர் வாழும் வீரராகவப் பெருமாளின் பெயரை அவருக்குப் பெற்றோர் இட்டனர்.

அந்தகக் கவியின் பாடல் இதுதான். அதில் யானையைப் பரிசாகப் பெற்றதாகத் தான் வருகிறது.
http://www.aaraamthinai.com/ilakkiyam/siruvarilakkiyam/feb02siruvar.asp

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் ''பூசும்'' என்றாள்
மாதங்கம் என்றேன் ''யாம் வாழ்ந்தோம்'' என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் ''தின்னும்'' என்றாள்
பகடு என்றேன் ''உழும்'' என்றாள் பழனந்தன்னை
கம்பமா என்றேன் ''நல் களியாம்'' என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

மேலும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் ஈழத்தில் வதிகிறார்கள். எனவே யாழ்ப்பாணம் எனும் பேர் 17-ஆம் நூற்றாண்டுப் பெயர் என்பது தொல்லியற் சான்றுகளுக்குப் பொருந்தாக் கட்டுக்கதை என்பது தெளிவு.

யாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்துவதும் உண்டு.

For example, see
"The current account of the founding of Jaffna is purely mythical, whether we regard the tale of the blind lutist, or the still more legendary story of Siva, Susangita and the lute of Ravana. " (Sinhalese Place Names in the Jaffna Peninsula By B. Horsburgh, C.C.S.THE CEYLON ANTIQUARY [VOL. II, Part 1] July, 1916 ).

திருக்கேதீச்சரத்தைப் பற்றிக் குறிக்கையில் இராவணன் ஆட்சி, அவனது வீணைக்கொடி பற்றிய தமிழ்ச்சைவக் குறிப்புகளுண்டு [1]. பாளி இலக்கியமான ராஜாவளியில் யாழ்நகர் அருகே இராவணன் இருந்ததைக் கூறுகிறது. Ancient Jaffna By C. Rasanayagam, pg. 9,
"the gods who presided over the destinies of Ceylon became enraged and caused the sea to deluge the land. Once before during the epoch called 'Duvapara yuga' on acoount of the wickedness of Ravana, the whole space from Mannar to Tutucorin in which were the fortress of Ravana with 25 palaces and 40000 streets were swallowed by the sea. So now, in this time of Tissa Raja, king of Calany, 100,000 large towns of the description called Pattunagam (paTTanam), ..."

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம், 1912 (2001 மறுபதிப்பு: க. குணராசா) நூலகம்.நெட் தளத்தில் கிடைக்கிறது. பக். 14,
"யாழ் கொடி: யாழ்பாடியுடைய கொடி யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி. அது மிதுனக் கொடியெனவும் படும். அதுவே சங்கிலியரசன் இறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து அரசரெல்லாம் கொண்ட கொடியாம். யாழ்ப்பாடி சாதியிலே தொண்டை மண்டலத்துயர்குடிச் சைவ வேளாண்முதலி யாழ்ப்பாடியினது திருவுருவச் சிலையைப் [*] பின்வந்த அரசர் தமது கோட்டை வாயிலிலே போற்றி வந்தனர்.

[*] யாழ்ப்பாடி திருவுருவச் சிலையொன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல ஸ்தானத்தில் அமைத்து வைத்தல் நம்மவர் கடனாம்."

மிதுனக்கொடி: கின்னரியாகிய மகரயாழ் அமைந்த கொடி. ஆண் பெண் கின்னர மிதுனங்கள்
இசைப்பது மகரயாழ் (கம்பன்). காமனுக்குக் கொடி மகர மீனாம். செயமகள் = துர்க்கை.

ஈழத்தில் வெற்றி அடைந்தபின்னர் புலிக்கொடி நாட்டிற்கு. யாழ் நகருக்கு மகரயாழ் கொடி சிறப்பு. நானும் ஆய்வுரை நிகழ்த்த ஈழநாட்டுப் பல்கலைக் கழகம் அன்றுச் செல்வேன்.
விரைவில் தமிழ் வடமொழி சான்றுகளைக் கட்டுரை யாத்துத் தருவேன். கவியரசர் கண்ணதாசன் 1970களிலே தீர்க்கதரிசனமாகப் பாடினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்

என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!

குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!

மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!

தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!

ஆ. முத்துத்தம்பியவர்கள் 1912-ல் குறிப்பிடும்,யாழ்ப்பாணச் சங்கிலி மன்னன், அவன் முன்னோரின் யாழ்க் கொடியின் பழைய (அ) 20-ஆம் நூற்றாண்டுப் படங்கள் (யாழ் அரசர்கள் பற்றிய ஏதாவது புத்தகங்களில் கிடக்கும்) தரமுடியுமா?

நன்றி!
நா. கணேசன்

[1] சிவராத்திரி தினத்தில் திருக்கேதீச்சரம் சிவலோகமாகிடும்:
http://74.125.95.132/search?q=cache:KUnRvCJL5f8J:www.forum.vettimani.com/forum/viewtopic.php%3Fp%3D1134+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF&hl=en&ct=clnk&cd=9&gl=us
ஈழத் திருநாட்டில் பாடல்பெற்ற தலங்களில் திருக்கேதீச்சரமும் ஒன்றாகும். இவ்வாலயம் மிகப் பழமையானது, என்பதைத் திருஞான சம்மந்தர் தேவாரமும் சுந்தரர் தேவாரமும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருஞான சம்மந்தர் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டாகும். திருக்கேதீச்சரம் வேத காலத்திற்கு முந்தியது என்பதை இராகு, கேது, வரலாறுகள் மூலம் அறியக் கிடக்கின்றது. மோட்சத்தையும்,பேரின்பத்தையும், தருவது மண்ணுலக சிவவழிபாடாகும், என்பதனைத் திருவாதவூரடிகள் அருளிய 'புவனியிற் போய்ப் பிறவாமை நாள் நாம் போக்குகின்றோம் அவமே" என்ற அடிகள் மூலம் அறியக் கிடைக்கிறது. திருக்கேதீச்சரம் இராவணன் காலத்திலும், சோழர் காலத்திலும், வழிபாட்டுத் தலமாக இருந்தது. இராவணனின் ஆட்சிப்பீடக் காலத்தில் மாந்தை தலைநகரமாக இருந்தது. வீணைக்கொடி பறந்தது. திருக்கேதீச்சரம் பல வீதிகள் கோபுரங்கள் உடைய மூர்த்தி தலம், தீர்த்தம் உடையதாக இருந்தது. சோழர் காலத்தில் மாந்தை புகழ்பெற்ற தலமாகக் காணப்பட்டது. புலிக்கொடி பறந்தது. கடல் கடந்து அரேபியர் போன்ற வணிகர்கள் முத்து, நெல், இரத்தினம், மற்றும் நெடுந்தீவுக் குதிரைகள் பெறுவதற்காக வந்தனர். இதனால் மாந்தை இந்தியாவின் திருப்பெரும்துறையோ என்று கணிக்கும்படி மாந்தைத் துறைமுகம் காணப்பட்டது. காலங்கள் உருண்டோடின, அந்நியரின் பார்வை இலங்கை எழிலிலும், வருமானத்திலும் மயங்கி இலங்கையை தம் ஆட்சிக் குட்படுத்திய காலத்தில் 17ஆம், 18ஆம் நூற்றாண்டளவில் சைவசமய ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டபோது திருக்கேதீச்சரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், தவத்திரு சிவயோக சுவாமிகளின் ஆசியும், வாழ்த்தும், 1954 ஆம் ஆண்டுகளில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. மகாசிவராத்திரி தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. சிவராத்திரி சிவனுக்குரியது. மாசிமாத அமாவாசைத் தினத்தன்று பஞ்சாட்ச்சரமாகிய திருவைந்தெழுத்து ஓதி ஆகம ஆசாரத்துடன் திருக்கேதீச்சரத்தில் கண்விழிக்க இலங்கையின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் எல்லாம் பேரூந்துகளில் வந்து சேர்வார்கள். சிவராத்திரி தினம் திருக்கேதீச்சரம் சிவலோகத்தைவிட விஞ்சிக் காணப்படும். 1991 முதல் 2002 வரை துயர்மிக்க காலமாகத் திகழ்ந்தது. 2002மீண்டும் சிவராத்திரி தினம் அனுட்டிக்கப்பட்டது. இப்போ மீண்டும் துயரம். இத்துயரம் அகல சிவராத்திரி தினத்தில் மேன்மைகொள் சைவ நீதி விளங்க வழி படுவோம்.

தொல்லியல் நிபுணர் எஸ். ராமச்சந்திரன் கூறுவதைப் பார்ப்போம்:
http://www.sishri.org/ramar.html
"புலஸ்திய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த இராவணன் வீணை இசைப்பதில் தேர்ந்த ஞானம் உடையவன் என்றும் அவனது கொடியில் வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் இராமாயணத்தினால் தெரியவருகிறது. 'சாம கானப் பிரியன்' எனப்பட்ட இராவணன் சாம வேதத்தின் இசை நுட்பங்களைக் கற்றறிந்திருந்த வைதிகனாவான். தவிரவும் கம்பன் இராவணனைக் குறிக்க 'ஆரிய' எனும் சொல்லையே பயன்படுத்துகிறான். கும்பகர்ணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராவணனின் காலைத் தொட்டு வணங்கி "ஆரியனே! விடைபெறுகிறேன்" என்று சொல்வதாகக் கம்பன் குறிப்பிடுகிறான். (கும்பகர்ணன் வதைப்படலம், பா. 98.)

இராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கதை முழுமையான கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால், இக்கதையிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு செய்தியுண்டு. தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் செய்தவராகக் கருதப்படுபவர் அகஸ்தியர் ஆவார். அகஸ்தியரின் இசை மரபும் இராவணன் அல்லது புலஸ்தியரின் இசைமரபும் தம்முள் முரண்பட்டும், மோதியும், ஊடுருவியும், ஒன்றுபட்டும், ஒன்றையொன்று பாதித்தும் வளர்ந்த மரபுகளாகும்."

3 comments:

Anonymous said...

கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் அருமையா இருக்கு.

வீணைக்கொடி பற்றித் தகவல் கிடச்சா தருவன்.

ரா. ராதா

ஆதித்தன் said...

அருமையான பதிவு.
தொடரட்டும் உங்கள் பணி.

பவள சங்கரி said...

அன்பின் ஐயா,

தங்களின் பணியும் ஆர்வமும் எனக்கு மலைப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. தங்களின் உன்னத பணிக்கு என்னால் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்வேன் ஐயா. மிக்க நன்றி.