இந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க?

இந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க?
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

(1994-ல் ஏப்ரல் புத்தாண்டன்று எழுதிய கவிதை)

எனக்குத் தெரியும் என்றாலும்
எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன்:
'எப்பொழுது தமிழ்ப் புத்தாண்டு வரும்?'
'எப்போழுதும் தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரலில் தப்பாது வரும்' - என்றான்.

'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்கு
கைக்குட்டை கொண்டு போ' - என்றேன்

எங்கும் இன்பத்தமிழ்
ஒலிக்க வேண்டும்.
ஏமாற்றமா?
இல்லவே இல்லை
என் ஆசைக்கு.

காதார தமிழ் பேச்சைக்
கேட்கின்றேன் கல்லறைகளிலிருந்து.

மறைமலை, திருவிக, பாரதிதாசன்
தனித்தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே
கேட்கலையா உங்கள் செவிகள்.

ஆனாலும் அன்றைய
தொல்காப்பியன் திரும்பி வந்தான்.
மழலையர் பள்ளியில்
ஆங்கிலம் படித்தான்.
அதிலே தவறி
ஐந்தாம் வகுப்பிலேயே
கல்வியை முடித்தான்.

ஆவலினால் வள்ளுவனும்
திரும்பிவந்தான்.
தமிழில் படிக்க
வாய்ப்பில்லாக் காரணத்தால்
தறிக்குழியில் போய் விழுந்தான்.

இங்கு தமிழ்நாடு
சரியில்லை என்பதால்
பள்ளிகளில் அயல்நாட்டைப்
பயிரிடுகிறோம்
பெற்ற பிள்ளைகளையே
மறு பிரசவம் செய்கிறோம்
ஆங்கிலப் பிள்ளைகளாய்...

கோயில்களில் குருக்கள்
தொப்பை தெய்வத்தை
மறைக்க
மந்திரங்கள் தமிழை
மறைக்கும்.

தமிழ்ப்பால் ஊட்டிய
தாய் உமையாள்
தன் மார்புக்கச்சையை
இறுக்கிக்கொண்டு புட்டியில்
வடமொழிப்பால் புகட்டுகிறாள்.

சம்பந்தன் தமிழ்ச்
சம்பந்தம் இழந்தான்.

நியாயத்தைப் பார்க்க
மாட்டேன் என்று
கண்களைக் கட்டிக்கொண்ட
நியாய தேவதை
காதுகளையும் கட்டிக்கொண்டாள்.
தமிழ் கேட்க மாட்டாளாம்...

தமிழுக்குச் சவப்பெட்டியா
இந்த தொலைக்காட்சிப் பெட்டி?
அலைவரிசையெல்லாம்
வேற்று மொழியின்
கைவரிசை.

தமிழை விற்ற காசில்
வேற்று மொழியில் செய்த
விளம்பரங்கள் கடைத்தெருவில்.

தமிழை விற்றவன்
தகப்பனையும் ஒருநாள்
மலிவுவிலையில் விற்பான்.

தாயை விற்க
ஒருநாள் தாமதிப்பான்.

இந்த புத்தாண்டில்
என்ன சிந்திக்க?
இனி தமிழைப் பரப்ப
எங்கும் இடம் கிடையாது.....
எங்கும் தான் பரப்பிவிட்டோம்.......

இந்தப் புத்தாண்டு முதல்
புதிய நாடுகளை உருவாக்கிப்
பூந்தமிழைப் பரப்புவோம்
அங்கெல்லாம்.....
புகட்டுவோம் அவர்களுக்கெல்லாம்
செந்தமிழை.

-தமிழன்பன்
ஏப்ரல் 14, 1994

3 comments:

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

அன்பு முனைவர் நா.க
தமிழை தமிழன் மறந்து போவானோ என்று அச்சப் பட்டுக்கொண்டிருக்கும் என்னைப் போன்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கவிதையாக ஈரோடு தமிழன்பன் படைப்பு இருக்கக் கண்டேன். அக்கவிதை என்னைப் பாதித்ததைப் போலவே நம் எல்லோரையும் பாத்தித்துள்ளது என்பதற்கு நம் எல்லோரின் மனமும் கவிதையின் கருத்தை ஏற்றுள்ளது என்பதைக் கூறலாம்.

தமிழ் வழங்குமிடமெல்லாம் "தமிழ்க் கொங்கு"ம் வழங்கும். என்பதை அறிவேன். மிக்க மகிழ்ச்சி.

இவண்
இரவா

பழமைபேசி said...

மிக்க நன்றி! அழகான, சிந்தனைக்கான கவிதை!!

மு.வேலன் said...

//இந்த புத்தாண்டில்
என்ன சிந்திக்க?
இனி தமிழைப் பரப்ப
எங்கும் இடம் கிடையாது.....
எங்கும் தான் பரப்பிவிட்டோம்.......

இந்தப் புத்தாண்டு முதல்
புதிய நாடுகளை உருவாக்கிப்
பூந்தமிழைப் பரப்புவோம்
அங்கெல்லாம்.....
புகட்டுவோம் அவர்களுக்கெல்லாம்
செந்தமிழை. //

அருமை... அருமை...