சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி

தமிழின் பல வலைப்பதிவுகளில் 'சந்திராயன்' என்று எழுதப்படுகிறது. அது பிழையானது. அனேகமாக இந்தச் சொற்பிழை பத்திரிகைகளின் வழியாகப் புகுந்திருக்கலாம். நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள உந்தியின் பெயர் 'சந்திரயானம்', இது வடமொழிச் சொல்லாகும்.

யாநம் - சம்ஸ்க்ருத அகராதி தரும் பொருள்:
yAna mfn. leading , conducting (said of a road ; `" to "' gen. or adv. in %{-trA4}) RV. ; (%{yA4nI}) f. a path , course TS. MaitrS. Ka1t2h. (cf. g. %{gaurA7di}) ; n. (ifc. f. %{A}) a journey , travel ; going , moving , riding , marching &c. to (loc. or comp.) or upon (instr. or comp.) or against (acc. with %{prati}) Mn. MBh. &c. ; a vehicle of any kind , carriage , waggon , vessel , ship , litter , palanquin RV. &c. &c. ; (with Buddhists) the vehicle or method of arriving at knowledge , the means of release from repeated births (there are either 3 systems , the %{zrAvaka-yAna} , the %{pratyeka-buddha-y-} or %{pratyeka-y-} , and the %{mahA-y-} ; or more generally only 2 , the %{mahA-yAna} or `" Great method "' and the %{hina-y-} or `" Lesser method "' ; sometimes there is only `" One Vehicle "' , the %{eka-yAna} , or `" one way to beatitude "') SaddhP. Dharmas. 2 (cf. MWB. 159 &c.)

ஹரி சென்ற வழி = ஹரியானம். இதுவே ஹரியானா மாநிலப்பேர். (பஞ்சாப் = ஐயாறு, பிகார் = புத்த விகாரைகள் நிறைந்த நாடு.) மகாயாநம், ஈனயாநம் - பௌத்த மதப் பெரும்பிரிவுகள். மகாயானம் - பெரிய/உயர்ந்த பாதை/ஊர்தி (போதிசத்துவர்களைத் தேவதைகளாக வழிபடும் வழி ~ ஒருவகை பக்திமார்க்கம்). மஹாயானத்தில் பல சூத்திரங்கள் வடமொழியில் உள. ஹீனயானம் - சிங்களர்களின் தேரவாதம், இழிந்த/தாழ்ந்த வழி/ஊர்தி - இது நாத்திக அடிப்படையினால் இப்பெயரை மஹாயானத்தார் அளித்தனர். மஹாயானம் - வடநாடுகள் ஜப்பான், கொரியா, சீனா, நேப்பாளம். ஹீனயானம் - தென் இலங்கை, அங்கிருந்து பர்மா, தாய்லாந்து.

மேலும், சில சொல்லாய்வுச் செய்திகள்:

சந்திரயானில் சூரியஒளி இல்லாத இருட்பகுதியில் ராடார் மூலம் படம் எடுக்கும் கருவிகள் இருக்கின்றன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் விண்நிலையத்தின் பங்கும் உண்டு. சந்திரயான் (= திங்கட்செலவு/நிலவூர்தி) திட்டத்தின் இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகே உள்ள கோதைவாடி என்னும் ஊரினர். கோவை பொறியியற் கல்லூரிகளில் பயின்றவர். கோதை சேரர்களுக்கான குடிப்பெயர். கோதை மன்னர்களின் பாடி (முகாம்) இருந்த இடப்பெயர். கொங்குநாட்டின் ஆண்பெயர்களில் -சாமி என்னும் விகுதியைப் பரக்கக் காணலாம். பெரியசாமி, சின்னச்சாமி, மயில்சாமி, பழனிச்சாமி, குழந்தைசாமி, .... தமிழ் இலக்கியத்தில் முதலில் இவ்வாறு இடம்பெறுவதும் கொங்குவேளிரின் பெருங்கதையில் சீவகசாமி தான். பின்னர் சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையில் ராமசாமி என்பார்.


பொள்ளாச்சி போன்ற ஊர்களில் நடக்கும் வாரச் சந்தைகளில் வணிகருக்குப் பக்கத்தில் உதவியாக வேலைக்கு இருக்கும் ஆட்களுக்கு 'அள்ளைக்கை' (அள்ளக்கை) என்பது கலைச்சொற்பெயர்(technical vocabulary). இதை நன்கு விளக்கியுள்ள பதிவை இரசித்துப் படித்தேன்.
http://naiyaandinaina.blogspot.com/2008/09/blog-post_24.html
"முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் காண்பிப்பார்கள். அவர்களே பின்னாளில் அள்ள-கை என்று அழைக்கப் பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்."

அள்ளைக்கை போலவே, சந்தை வணிகத்தில் இருந்து தமிழ்ப் பயன்பாட்டுக்கு வந்த இன்னொரு தொடர்: "கூறுகெட்ட பையல்". "காய்கறிகளை தரம் பிரித்து கூறு கூறாய் கட்டி வைப்பார்கள், அந்தக் கூறுகளை அதன் தரத்துக்கேற்ப விலை சொல்வது அந்தக் காலத்து சந்தைகளில் வழக்கமாய் இருந்தது, அதை நானும் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆகவே கூறு என்பது தரம் என்னும் பொருளில் வருகிறது, மற்றும் காய்களில் பெரிய காய்களான பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகளை கூறு போட்டு விற்பார்கள், இங்கு கூறு போடுதல் பிளத்தல், அல்லது அறுத்தல் என்று பொருள் வரும். ஆகவே தரம் கெட்டுப் போனவர்களை, நல்ல வழக்கங்களிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு தீய வழக்கத்துக்கு ஆளானவர்களையும் 'கூறுகெட்ட பயல்' என்று அழைப்பது வழக்கத்திற்கு வந்திருக்கிறது." (தமிழ்த் தேனீ, மின்தமிழ்).

முதலில் திரைப்படங்களில் கோவை மாவட்ட நடிகர்கள் கவுண்டமணி, சத்தியராஜ் போன்றோரால் அறிமுகம் ஆகி பின்னர் பதிவுலகில் அடிக்கடி பயனாகும் சொல்: அள்ளைக்கை. இதனை 'அல்லக்கை' என்று எழுதுதல் சரியல்ல. அள்ளை = அடுத்திருப்பது (side). தமிழில் நிறையச் சொல்தொகுதிகளில் இரண்டாவது அட்சரமாக -ள்-/-ட்-/-ண்-/-ண்ட்- வரும். அச் சொற்றொகுதிகளின் பொருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். உதாரணம்:
(அ) குளம்/குடம்/குட்டை/குண்டா
(ஆ) வளை-/வடம்/வணங்கல்/வண்டி
(வண்டி - வளைந்த சக்கரம் உடையது. வடம் = கயிறு. கயிறு போன்ற விழுதுகள் நிலம் நோக்கித் தொங்குவதால் ஆலமரத்துக்கு 'வட விருட்சம்' என்றே வடமொழிப் பெயர்.)

அதேபோல், அள்ளைக்கை எனுஞ் சொல்லில் இருக்கும் "அள்ளை":
(இ) அள்ளை/அடுத்த/அட்டை/அண்டை.

அன்புடன்,
நா. கணேசன்

கிருஷாங்கினி கவிதைகளில் - அள்ளையில் தோன்றும் சிறகுகள்

பிரம்ம விருட்சம்
------------------------
கிருஷாங்கினி

இடைவெளி இன்றி அந்த உயர
மரத்தில் அடுக்கப் பட்டிருந்தன
கம்பளிப் பூச்சிகள்-
நெருக்கி யடித்தாலும் கனவுகள் சுமந்தபடி.
எட்டா உயரத்தில்
ஏணி ஏறி, உச்சி வெயிலில்
எட்டிவந்தன தீயின் கங்குகள் சுற்றிலும்;
அங்கிங்கென்று அலைந்து சிதறியவை
ஒன்றன்மீது ஒன்றேறி-
கொதித்துக் கொத்தாகிக் குவியலாயின.
தப்பிக்கும் எண்ணத்தில்
சற்றே பின் நாளில் வெளிவரும் உமிழ்நீர்
உடனே சுரக்கக் கூட்டுப்புழுவாக
முயன்று தோற்றுத் தொங்கின
இழை முடிவில் வாய் வழியே-
கொத்தாகிக் குவியலாயின கொதித்து.
அள்ளையில் இறகு முளைத்து
வண்ணம் பல பரப்பி
அனைவரையும் ஈர்க்கும் -அவை
வண்ணத்துப் பூச்சிகள் ஆகாமலேயே
நிணநீர் வெளிவர, பச்சை ரத்தம்
பொசுங்கப் பரவிய சதை மணத்துடன்
கொதித்துக் கொதித்துக்-
கொத்தாகிக் குவியலாயின.

பின் விளைவு
-----------------
க்ருஷாங்கினி

மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி
காத்திருக்கும் அருகம்புல்லும்
சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம்
உள் உறிஞ்சி வேர்விட உறங்கும்
அரசும் ஆலும்.
ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி
பறந்து காற்றில் படரும் வேருக்கும்
வெளவால், பறவை கழிவுடன்
வேரையும் உடன் இருத்தி மேலிருந்து
புவி விசையில் கீழ் இறங்கும் கனவிதையும்,
எப்போதும் நசநசத்த ஈரப்பரப்பில்
வேறற்ற காளானும் பாசியும்கூட
மண்ணுக்குள் வீடுகட்டி மேலெழும்பி
மற்றதை அரித்துத் தின்னும்
அள்ளையில் அன்றே முளைத்து, பறந்து
திரிந்து, சில மணியில்
செத்துமடியும் கரையானுக்கு
ஒளித்துளியாய் இறக்கையும்
முளைவிடக் காரணமானது
மழையின் பின்-விளைவு.