தமிழ்ப் புள்ளிக் கோட்பாடும் பெருமையும்

யூனிக்கோட் 5.1 ஏப்ரல் நான்காம் தேதியில் இருந்து இயங்கவுள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள்:
http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txt

வங்காளியில் கண்ட-எழுத்து (த்):

தமிழ் தவிர, மற்ற இந்திய மொழி இலக்கணங்களில் தனி மெய்யெழுத்துக்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்தியில் மெய்களை அங்கே ஹல்லந்தம் என்பர். ஆனால் அதற்கு இலக்கணத்தில் அடிப்படையாக அங்கே பார்த்தால் காணோம். தனி மெய் இலக்கணமே பிற்காலத்தில் தான் வடநாட்டில் ஏற்படுகிறது. தமிழ் அல்லாத பிறமொழி அகராதிகளைப் பாருங்கள் - எதுவும் தனி மெய்யெழுத்தில் தொடங்காது (இத்தனைக்கும் அவற்றில் மெய்யெழுத்தில் துவங்கும் வார்த்தைகள் அனேகம் இருக்கும்). வங்காள மொழியில் "கண்ட தகர மெய்யெழுத்து" என்ற ஓர் எழுத்து இருக்கிறது. கண்டத் தகர-மெய் பற்றி விலாவாரியாக அறிய: (அ) & (ஆ)

"இது ஒருவகை மெய்யெழுத்து. அதைக் குறிப்பிடும் வகையில் annotation கொடுங்கள்" என்று யூனிகோட் கன்சார்த்தியத்திடம் எழுதியிருந்தேன். 20 கோடி+ சனங்கள் பயன்படுத்தும் ஒரு மொழியின் எழுத்தொன்றுக்கு ஓர் இலக்கணக் குறிப்பைக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txt

"09CE BENGALI LETTER KHANDA TA
* a dead consonant form of ta, without implicit vowel, used in some sequences"

தமிழில் புள்ளியின் தத்துவத் தாக்கம் மிக அதிகம். புள்ளி நம் மெய்யெழுத்துக்களில் இருப்பதனாலே, நமக்குக் கூட்டெழுத்துக்களின் தொல்லை இல்லை. புள்ளியை விராமம் (cessation) என்று பழைய தமிழ் நிகண்டுகள் பேசும். புள்ளித் தத்துவத்தின் விளைவாகத்தான் இந்திய மொழிகளில் முதன்முதலில் பல தொழில் நுட்பங்கள் வர வாய்ப்பமைந்தது. காட்டு: அச்சுப் புத்தகம் (ஐரோப்பாவில் இருந்து), தந்தி, தட்டச்சுப் பொறி, கணி எழுதுருக்கள், யாகூ குழுவில் 8-பிற் குறியீட்டில் தகுதர வலையாடல் [1]. மற்ற இந்திய மொழிகளுக்குப் புள்ளியால் ஆன தனி மெய்கள் இன்மையால் யாகூ குழுக்களில் தமிழ் ஒன்று மட்டும் இயங்கியது. தெலுங்கு, இந்தி போன்றன ரோமன் எழுத்தாக்கித் தான் எழுதினர்! ஒளிவழி எழுத்துணரி (ஓசிஆர்) நுட்பம் தமிழில் தான் உள்ள இந்திய எழுத்துக்களில் எளிமை.

உ/ஊ உயிர்மெய் எழுத்துச் சீர்மை - மக்களிடம் பரப்பும் வழி:

தமிழ் எழுத்துக்களை இன்னும் எளிமையாகக் கற்றுத்தர வேண்டும். யூனிகோடு குறியேற்றத்தில் ஃபாண்டை மாற்றினால், உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுத முடிகிறது. பயன் என்ன? என்று பார்த்தால், தமிழ் கற்கும் மக்களுக்கு நெடுங்கணக்கு வரிசை ஒரு தாய அணிவரிசை (Matrix of Tamil syllabary) ஆகிவிடுகிறது. 12 உயிர், 18 மெய், 10 உயிர்மெய்க் குறிகள், வேண்டுமானால் 5 கிரந்த எழுத்து என்று சுமார் 45 வரிவடிவங்களில் (glyphs) தமிழ் சீர்மை அடைகிறது [2]. நண்பர் உமர் தம்பி வாழ்கையில் எனக்காக வடித்துச் சில சீர்மை ஃபாண்டுகள் தந்தார். இயங்கு எழுத்துருக்களாகத் தமிழ் உ/ஊ உயிர்மெய்களின் சீர்மை எழுத்துருக்களை இலவசமாக வினியோகித்தால் வலைப்பதிவுகள், இணையத் தளங்கள் போன்றன உ/ஊ சீர்மை பயன்படுத்த வகை ஏற்படும் என்று நினைக்கிறேன்.

மேலும் பேசுவோம்,
நா. கணேசன்

[1] வலையாடி - netizen, one who writes in the web பொருத்தமாகத் தெரிகிறது. கொங்கில் பண்ணையைப் பார்க்கிறவரைப் பண்ணாடி என்றழைப்பது வழக்கம். தோட்ட மேலாளர் - காட்டுப்பண்ணாடி. சென்ற காலங்களில் பண்ணையமே மேலான தொழில், அதனால் "உங்க பண்ணாடி எங்கே?" என்றால் பண்ணாடிச்சி தன் கணவர் சென்ற இடத்தைச் சொல்லுவார். ஹஜ் பயணம் மேற்கொண்டவர்க்கு ஹாஜி என்பதுபோல, கங்கை, கயிலை சென்று மீண்டவரை கங்கையாடி, கயிலையாடி என்பது தமிழ்வழக்கு. கங்கையாடி பட்டர் சொல்லிக் கொடுத்த உரைகளுடன் மத்ய கேரளாவில் பகவதி கோவில் கூத்துமாடங்களில் புலவர்கள் கம்பனைத் தோல்பாவைக் கூத்தாக்கி வாரக்கணக்கில் நாடகம் நடத்தினர்.

[2] தமிழ் தட்டச்ச தமிழ்நெட்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுக. தமிழ்99 கூகுள்குழும நண்பர்கள் விசைப்பலகை ஒட்டிகள் செலவு செய்து தயாரித்துள்ளனர். வாங்கி ஆதரித்தால், தானாக தமிழ் டைப்ரைட்டர் விசைப்பலகை காலாவதி ஆகும் (டைப்ரைற்றர் தேவையில்லாமல் உ/ஊ உயிர்மெய்கள் பல இடங்களை அடைத்துள்ளது). தமிழ்99 விசைப்பலகை தான் தமிழ் தட்டச்சின் எதிர்காலம். தட்டச்சுப் பள்ளிகள் ஈழம், தமிழ்நாடுகளில் தமிழ்99க்கு மாற வேண்டும். அரசாங்கம் தமிழ்99 விசைப்பலகைகள் தயாரிக்க நிதிச் சலுகை அளிக்க வேண்டும். http://tamil99.org/

2 comments:

R. said...

அன்புள்ள கணேசன்,
அருமையான பயனுள்ள பதிவு.
பாராட்டுகின்றேன.
அன்புடன்
ராதாகிருட்டிணன்
ஏப்ரல் 1, 2008

ஞாயிறு said...

நல்ல பதிவு. எனக்கு புதிய செய்தி. மெய்யெழுத்துக்களைப் பொருத்த வரையில், தமிழ் பிற மொழிகளிலிருந்து எழுத்து வடிவில் மட்டும்தான் தனித்திருக்கிறதா, இல்லை வேறு வேற்றுமைகளும் இருக்கின்றனவா?