கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை

ஹொகேனகல் தமிழில் "புகையின்கல்" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... "பொகெயினகல்" (misty boulders) > ஹொகெனகல் (கன்னடம்). வெங்கால மரங்கள் மிகுதியால் வெங்காலூர் [1] என்று பெயரிடப்பட்ட பெங்களூரை இப்போது குற்றியலுகரத்துடன் பெங்களூரு என்கிறார்கள். வெந்த கொள்ளின் ஊர் என்று சொல்வது ஒருவகை Urban legend கதை. கல்வெட்டுகளில் வெங்காலூர் என்றே உள்ளது. கொங்கின் கரூர்ப் பக்கத்து உள்நாடுகளில் ஒன்றனுக்கு வெங்கால நாடு என்றே பெயர். அதனையும் ஒப்பிடலாம். இதனைப் பட்டீசர் கண்ணாடி விடுதூதில் காணலாம் (கண்ணாடி விடுதூது காண வேணுமாயின், Cf. http://projectmadurai.org). ஹொகேனகல்லு என்றால் தான் சரியான கன்னடமா? "கல்பொரு சிறுநுரையார்" என்ற சங்ககாலப் புலவர் வாழ்ந்தும் இருக்கிறார். நீறு பூத்த நெருப்பைப் போல நகுகிற சீதையை "நகுமோமு கனலேனி" என்று தியாகையர் பாடுவார். பொகெயினகல்லுவுக்கு இலக்கியப் பெயர் தேவையெனில் "புகைநகுகல்".

கவிப்பேரரசு வைரமுத்து சொற்பொழிவு:
பாகம் ௧:


பாகம் ௨:


காவிரியின் மேல் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை முதலில் சொன்னவர் - கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். மூவர் உலாவில் உசாவலாம். கலிங்கத்துப் பரணி பாடியவர்; தமிழின் ஒரே உலகாயத நூலாம் காராணை விழுப்பரையன் மடல் இயற்றியவர். தமிழின் கருவூலங்களில் ஒன்றான மிக அழகிய இந்த வளமடல் அச்சேறாமல் இருக்கிறது. அதன் மூலச்சுவடியைக் காத்து அளித்தவர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள். அதனைச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை முன்னியத்தில் அளித்தேன். அவ் அரிய நூல் தொடுப்பு:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0060/valamatal.pdf
பிற பின்,

நலமே விளைக!
நா. கணேசன்

[1] வெங்காலூர் இடப்பெயர் ஆய்வு (குணா போன்றோர்) எழுதியிருக்கலாம். அக் கட்டுரைகள் உள்ள பொத்தகப் பெயர்களைத் தந்தாலோ, இணையத்தில் இருந்தாலோ எனக்கு அறியத் தர வேண்டுகிறேன். நன்றி.

3 comments:

Anonymous said...

கரு நாடக தமிழ் நாடு பிரச்சினைகளுக்கு தீர்வுண்டா?

நான் தீர்வு சொல்லவும் போவதில்லை. அப்படி சொன்னாலும் ஏற்றுக் கொள்பவர் உண்டா? ஆகவே ஒரு சிலருக்கு தெரிந்த, மிக பலருக்கு தெரியக்கூடாதன்று ஒரு சிலர் வைத்துகொண்டிருக்கும் ஆதார பூர்வமான சில விஷயங்கள் இதோ.

1. ஆங்கிலேயர் மதராஸ் என்று மாகாணப்பெயரிடும் முன், அதன் பெயர் கரு நாடகம்., கருத்த மேனியுடைய நாட்டவர் அகம்.

2. இன்றைய கன்னடத்தவர், ஹளே கன்னடா என்ற மொழியெ 200-300 ஆண்டுகள் முன்பு வரை பேசியவதாக ஒப்புக் கொள்கிறார்கள். அம் மொழியில், இன்றைய ஹ, ப-வாக இருந்தது. இன்றைய ள, பல இடங்களில் ழ -ஆக இருந்தது. சொற்க்கள் பல அம்-இல் முடிந்தன. ஆ ஏ போன்ற சொல் முடிவுகள், ஐ- ஆக இருந்தது (இல்லா-இல்லை). அவற்றையும் ஏக மனதாக ஒப்புக்கொள்வார்கள். அப்படியென்றால் ஹளே கன்னடாவை, ஹளே கன்னடாவில், பழைய கன்னடம், என்றழைப்பது தான் சரி. அது தமிழாகி விட்டதே!.

3. மலையாளம், கன்னடம் இரண்டுமே மானிலத்தை குறிப்பிடும் சொற்க்கள். மொழிகளை அல்ல.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுவையான செய்திகளும் சுட்டிகளும்.பாராட்டுக்கள்.

பிகு.வேர்ட் வெரிபிசேஷனை எடுத்து விடுங்களேன்..

thenkongu sathasivam said...

பெங்களூர் என்பது ”பெந்தக்காளூர்” என்பதிலிருந்து திரிந்து வந்திருக்கும் பெயர் எனும் கூற்றுக்கு பின்னால் ஒரு கதையுண்டு. இவ்வூரை நிர்மாணித்த மாகடி கெம்பெகௌடா வேட்டை முடித்து,களைப்பு மேலி்ட்டவராய் குடிசையொன்றில் நுழைந்து பசிக்கு உணவு கேட்டாராம்.அக்குடிசையிலிருந்து ஏழைக் கிழவி தன்னிடம் இருந்த பயிரை சிற்றரசருக்கு தந்தாளம். பசியாறிய பாளைக்காரர் மாகடியில் உள்ள தன் அரண்மனைக்கு வந்து பார்க்குமாறு கூறிவிட்டு போனாராம்.கிழவி அங்கு சென்று மன்னரைக் கண்ட போது கெம்பெ கௌடா அவளுக்கு ஒரு வீட்டையும் பொருகளையும் வழங்கி கெளரவித்தார். மாகடியிலிருந்து சற்றத் தொலைவிலுள்ள பகுதியை ஒரு நகரமாய் உருவாக்கவும் ஏற்பாடு செய்தார். 1537ல் கெம்பகௌடா ஏறப்படுத்திய புதிய நகருக்கு அக்கிழவியின் நினைவாக, அவள் வேகவைத்த பயிறு தந்த பசியைப் போக்கிய செயலின் நினைவாக ”பெந்தக்காளூர்” என்று பெயரிட்டார்.கன்னடத்தில் “பெந்த“ என்றால் “வென்ற“ என்றும், “காளு“ என்றால் பயறு என்றும் பொருள். அதுவே காலபோக்கில் பெங்களூர் என்றானதாய் ஒரு கூற்று. அதே சமயம் பெங்களூர் எனும் பேகூர் கோயிலுள்ள கி.பி.890ஐ சேர்ந்த கங்கர் காலத்துக் கல்வெட்டுக் குறிபொன்றில் காணப்படுவதாய் தெரிய வருகிறது. மைசூர் தேச வரலாற்றை விரிவாய் எழுதியுள்ள வரலாற்று அறிஞர் ஹயவதன ராவ், பெங்களூரைப் பற்றிச் சொல்லுகையில் இரு விவரங்களையுமே தந்திருக்கிறார்.
மேற்க்கோள் நூல்-தமிழகக் கோட்டைகள்.
ஆசிரியர்- விட்டல் ராவ்.