அந்தோணி முத்துவின் டிவி செவ்வி எவ்வாறு? எப்போது?

வாழ்விலும் வலைப்பதிவுலகிலும் சாதனைகள் புரிந்துவரும் அந்தோணி முத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குமாறு தமிழர்கள் உதவி செய்யவேண்டித் தமிழ்மணம் வலைத்திரட்டியில் அ. முத்துவிற்கு உதவி கோரி மின்னி (ticker) சில வாரங்கள் சுடரொளி வீசியது. இன்று பலரும் அவருக்குப் பெரும் உதவி செய்கிறார்கள். இப்போது, ஆனந்த விகடனிலும் அந்தோணி முத்து பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதியுள்ள தோழர் முத்து பற்றிய பதிவு: http://balaji_ammu.blogspot.com/2008/03/427.html
மக்கள் டிவியில் பாலன் மூலமாக எப்படி முத்தின் நேர்காணலை ஒளிபரப்புவது என்பதற்கு வழிவகையை அப்துல் ஜப்பார் அவர்கள் முத்தமிழ் குழுமத்தில் எழுதியிருக்கிறார்:

"மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி வி.கே.டி.பாலன் பொதிகை தொலைக் காட்சியில் "வெளிச்சத்தின் மறுபக்கம்" என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். 310 வஆரங்களுக்குப் பிறகு அது நின்று போய், இப்போது மக்கள் தொலைகாட்சியில் "இவர்கள்" என்ற பெயரில் வருகிறது. நான் ஏப்ரல் முதல் வாரம்தான் தாயகம் திரும்புகிறேன். திரு அந்தோணி முத்து அவர்களோ அல்லது அவர் சார்பாக வேறு யாருமோ பாலன் அவர்களைத் தொடர்பு கொண்டால் இனி வரும் வாரங்களில் நிச்சயம் அவரது பேட்டி இடம் பெறும்.

அந்தோணிமுத்து போன்ற தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்கள் தமிழ் உலகுக்கு உரிய முறையில் தெரியப் படுத்தப் பட வேண்டும் என்பது தான் என் அவா.

அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்."

சீக்கிரமாக நண்பர் முத்துவின் பேட்டி தமிழ்நாட்டு டிவியில் தெரிய ஏற்பாடு செய்யுங்கள். நன்றி, நா. கணேசன்

ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து: ''உலகம் என் உள்ளங்கையில்''

செங்குன்றத்தில் குறுகலான தெருவில் இருக்கிறது, பத்துக்கு ஐந்து அளவுள்ள அந்த ஒற்றை அறை. கலைந்து கிடக்கும் மெத்தையில் உட்கார்ந்து டைப் அடித்துக்கொண்டு இருக்கிறார் அந்தோணி. வலைப்பூ (blog) எழுத்தாளரான அந்தோணிக்கு கைகளைத் தவிர, வேறு எந்த உறுப்புகளும் செயல்படாது. ஆனாலும் அந்தோணியின் கனவுகளும், கற்பனைகளும் சிறகு முளைத்து அந்த ஒற்றை அறையில் இருந்து கிளம்பி இன்று உலகை வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

என்னுடைய மிகப் பெரிய பலம் தன்னம்பிக்கை. 'பாஸிட்டிவ்' என்கிற வார்த்தையைச் சொல்லும்போதே ஒரு எனர்ஜி கிடைக்கும்! அதனால என் பேருக்கு முன்னாடி 'பாஸிட்டிவ்' சேர்த்துக்கிட்டு, 'பாஸிட்டிவ் அந்தோணி' ஆகிட்டேன். எனக்கு இது சில்வர் ஜூப்ளி வருஷம்! 25வது வருஷமா இந்த ரூம்லேயே அடைஞ்சு கிடக்கிறேன். ஆனா, என் உலகம் ரொம்பப் பெரிசு சார்!'' அழுத்தமாகக் கை குலுக்கியபடி பேச ஆரம்பிக்கிறார் பாஸிட்டிவ் அந்தோணி.

''எனக்குச் சொந்த ஊரு திருவண்ணாமலை பக்கம்! பெரிய குடும்பத்தோட கடைக்குட்டி நான். எல்லோர் மாதிரியும் நார்மலா பிறந்து வளர்ந்தவன்தான். பயங்கரமா சேட்டை பண்ணுவேன். ஒரு இடத்துலயும் நிக்காம ஓடிக் கிட்டே இருப்பேன். துறுதுறுன்னு எதையாவது பண்ணிக்கிட்டு இருப் பேன். எப்பவும் விளையாட்டுதான்.என்னோட 11வது வயசுல வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கிணத்துல தவறி விழுந்தேன். கிணத்துல ஒரு சொட்டுத் தண்ணிகூட இல்லை. அவ்ளோ உயரத்துல இருந்து விழுந்ததுல முதுகெலும்பு முறிஞ்சு போச்சு! மரண வலின்னு கேள்விப்பட்டிருப்போமே, அதை அன்னிக்கு அனுபவபூர்வமா உணர்ந்தேன்.கால்கள்ல எந்த உணர்ச்சியும் இல்லை. கைகளைத் தவிர உடம்புல எதுவும் செயல்படலை. எனக்கு வந்திருக்கிறது 'பாரலிசிஸ் அட்டாக்'னு டாக்டர் சொன்னார். ஓடிட்டே இருந்தவன் ஒரேயடியா முடங்கிட்டேன். ஸ்கூலுக்குப் போகாம வீட்டுல அடைஞ்சு கிடப்பது மகா வேதனையாக இருந்தது. வெறுமை உணர்வும் தனிமை உணர்வும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக் கிட்டு இருந்தன. யாராவது என் வயிற்றை அழுத்திவிட்டாதான் என்னால இயற்கை உபாதைகளைப் கழிக்கமுடியும். வளர்ந்து நிக்குற வயசுல, எந்த ஒண்ணுக்கும் குழந்தை மாதிரி மத்தவங்களை எதிர்பார்த்து வாழறதைப் போல கொடுமை வேற இல்லை. ஏதாவது அதிசயம் நடந்து, நான் பழையபடி எழுந்து நடக்க மாட்டேனானுஏங் கிட்டு இருந்தேன். அப்பா, அம்மா இறந்த பிறகு, என் அக்கா பவுலீனா தான் எனக்கு இன்னொரு அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க.

நம்ம வாழ்க்கை இனி இப்படித் தான் இருக்கும்கிற உண்மை புரிய ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட யோசிச்சிருக்கேன். இளையராஜா வோட இசைதான் என்னை மீட்டெடுத்துச்சு. அவரோட பாடல் களைக் கேட்கக் கேட்க மனசு லேசாச்சு! ஒரு கீபோர்டு வாங்கி இளையராஜா பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சேன். நம்பிக்கை வர ஆரம்பிச்சுது. கழுத்துக்குக் கீழே முடக்கப்பட்ட சக்தி முழுசும் என் மூளையில் இருக்குறதா நினைச்சேன். 24 மணி நேரமும் இசையோடு விளையாட ஆரம்பிச்சேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., மியூஸிக் அஞ்சல் வழியில படிச்சேன். இசையோட நுணுக்கங் கள் பிடிபட ஆரம்பிச்சதும், நானே டியூன் போட்டு மியூஸிக் ஆல்பம் பண்ணினேன். ராகங்களை அடிப் படையாகக்கொண்ட ஒரு சவுண்ட் சிஸ்டத்தை 90ம் வருஷம் கண்டுபிடிச்சேன். அந்த சிஸ்டம் இப்ப உள்ள டி.டி.எஸ்., டால்ஃபியைப் போன்றது. நானே சுயமா உருவாக்கினது. அதுக்கான பேட்டன்ட் வாங்க, என்னால அலைய முடியலை. அதனால அந்த முயற்சியை அப்படியே விட்டுட்டேன். என்னோட மியூஸிக் ஆர்வத்துக்குச் செலவுபண்ற அளவுக்குக் குடும்பத்துலயும் வசதி இல்லை. நம்மளால இசையை ரசிக்க மட்டும்தான் முடியும்னு புரிஞ்சுது. பத்து நிமிஷம் அழுதுட்டு என் கீபோர்டுக்கு 'குட் பை' சொல்லிட்டேன்.

இசையை விட்டுப் புத்தகங்கள் பக்கம் திரும்பினேன். ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், சுஜாதானு படிக்க ஆரம்பிச்சேன். சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜே.கே.ரௌலிங்னு இங்கிலீஷ் நாவல்களையும் விடலை. ரேடியோ மெக்கானிசம் பழகினேன். என் ஃப்ரெண்ட் 'கோமதி'னு ஒரு டீச்சர் எனக்கு கம்ப்யூட்டர் ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. மற்ற நண்பர்கள் சாஃப்ட்வேர் கொடுத்தாங்க. ஒரு கம்ப்யூட்டர், கீபோர்டு, மவுஸ், ஹெட்ஃபோன், டெலிபோன் இவ்வளவுதான் என்னோட சொத்து. ஆனா, அதை வெச்சே வாழ்க்கையை வாழணும்னு முடிவு பண்ணினேன். இப்போ எனக்கு எம்.எஸ்.ஆபீஸ், ஃபோட்டோ ஷாப், டேட்டா என்ட்ரி எல்லாம் தெரியும். மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் கத்துக்கிட்டு இருக்கேன்.. 'தமிழ்க்குஞ்சு'ங்கிற பேர்ல<http://positiveanthonytamil.blogspot.com) பேர்ல வலைப்பூ தொடங்கி, என்னோட கனவுகளை, என்னோட நினைவுகளை எழு திட்டு வரேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுட்டு வருது.

இன்னும் படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், ஸ்டீவன் ஹாக்கின்ஸ் மாதிரி பலபேருக்கு ரோல்மாடலா ஆகணும்னு எனக்குள் இருக்குற தாகங்கள் அதிகம்! நான் முழு வேகத்துல இயங்கும்போது, என் வேகத்துக்கு ஈடு கொடுக்காம இந்த எலெக்ட்ரானிக் பொருள்கள் அப்பப்போ மக்கர் பண்ணுது. இந்த கம்ப்யூட்டர் ரொம்பப் பழசாயிடுச்சு. என் வலது கண்ணுல பார்வை மங்கிட்டே வருது. ஒரு கையை சாய்ச்சுவெச்சு தொடர்ந்து டைப் பண்ண முடியலை. ஒரு லேப்டாப்பும், வீல் சேரும் இருந்தா நான் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் படிப்பை முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன். அதை வாங்குறதுக்கான முயற்சிகள்ல இருக்கேன். பார்த்துட்டே இருங்க, என்னோட வாழ்க்கையில் புது அத்தியாயம் ஆரம்பிக்கப் போகுது!'' நம்பிக்கை சுடர்விடும் குரலில் பேசுகிறார் அந்தோணி.

ஆமோதிப்பது போல் ஒலிக்கிறது தொலைபேசி மணி!

நன்றி: விகடன் -ஆர்.சரண் படங்கள்: கே.ராஜசேகரன்

1 comments:

தமிழச்சி said...

தோழருக்கு வணக்கங்கள், அந்தோணிக்கு உங்களுடைய பதிவைப் பற்றிய லீங்க் அனுப்பியுள்ளேன். மேற்கொண்டு அந்தோணி பற்றி அறிய விரும்பினால் இந்த மின்அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி
periyar2007@yahoo.fr