யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...

கிரந்த எழுத்து பற்றித் தொல்காப்பியனார்:

தொல்காப்பியர் வரையறுத்துக் கூறும் "வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த தமிழ்ச் சொல் ஆகும்மே. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்." - தொல். சொல். 2.9:5-6 என்பதில் ஆராத நம்பிக்கை உடையவன் நான். கொங்குநாட்டின் நிரம்பை [1] ஊரைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் தொல். சூத்திரத்தை நன்கு விளக்குகிறார்: "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப் படாநின்ற மூன்று தமிழ்களும்". அதாவது, தமிழ் என்றால் அது நம் 18 மெய்யெழுத்துக்குள் அடங்கவேண்டும். மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு அயலானவை, அவை என்றும் தமிழாகா. கிரந்த எழுத்துக்கள் தவிர்த்து எப்படி எளிதாக யாரும் கணினி மடல்களில் எழுதமுடியும் என்று பேரா. செ. ரா. செல்வகுமார் 1999-லேயே காட்டியும் இருக்கிறார். அக் கட்டுரையை யாவரும் பயின்று சிந்திக்கலாம்.

யூனிக்கோடில் ஶ (sha) எழுத்தும் , அதன் கூட்டெழுத்து ஸ்ரீயும்:

வாழ்க்கையும், விஞ்ஞானமும் அதிவேகமாக நகர்ந்து கொண்டுள்ளன. பல கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் தமிழில் புகவேண்டும். அறிவியற் கலைச்சொற்கள் (tech jargon), கருதுகோள்கள் (hypothesis), தேற்றங்கள் (theory) போல்வன ஆங்கிலம், 'யப்பானியம் போன்றவற்றிலிருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும்போது சில படிநிலைகள் உள. முழுதுமாக உள்வாங்கித் தமிழ் தன்வயம் ஆக்க எதற்கும் சிலகாலம் செல்லும். அதற்கிடையில், சில கிரந்த எழுத்துக்களைப் பயனித்தல் தவிக்க முடியாத செயல். முதற்படியாக, தமிழுக்கு வேற்றுமொழிச் சொற்களை இறக்குகையில் ஶ எழுத்தை உபயோகிக்கலாம். மற்ற இந்திய மொழி வலைப்பக்கங்கள், செய்தித் தாள்களைத் தமிழ் எழுத்தில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கவும் இந்த ஶ (மலையாளத்தில் ശ, உரோமனில் śa) அவசியத் தேவையாக இருக்கிறது. எழுத்துப்பேர்ப்பு பற்றிப் பின்னர் ஒரு பதிவில் விரிவாக ஆய்வோம். முடிபுநிலை தமிழின் தனி மெய்கள் 18 தான். எனினும், பத்திரிகைகள், தமிழ்மக்கட் பெயர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றன பலர் பயன்படுத்துவதும் எதார்த்தநிலை தானே. எனவே கணினிக் குறியீட்டில் கிரந்த எழுத்துக்கள் தேவைப்படுகின்றன.

யூனிக்கோட் தொடர்பாக, அதன் தொழில்நுட்பக் குழுக்களில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேரகராதி 7 தொகுதிகளில் மு. இராகவையங்கார், ச. வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் போன்ற பேராசிரியர்கள் வழிப்படுத்தி உருவானது. அதில் ஒரு கிரந்த எழுத்து ஶ வரிசையில் ஒரு 20-30 வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஶ எழுத்து முன்னர் தமிழ் யூனிக்கோடு பிளாக்கில் (block) இல்லாதிருந்தது. தொட்டணன் சிவராசு முயற்சிகள் எடுத்தார். சிவராஜ் எழுதிய முன்னிகைக்குச் (proposal) சான்றளிக்கை, மேம்படுத்தலில் இண்பிட் ஒருங்குறிக் குழுவில் உதவினேன். சிவராசின் ஆவணம் இதுதான். இந்த ஶ யூனிக்கோடு பொந்தில் U+0BB6 பொருந்தி, அதன் உயிர்மெய் எழுத்துக்களுடன் விண்டோஸ் விஸ்டாவில் இப்பொழுது தொழிற்படுகிறது. அறிவியல், பொறியியல், கணியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாட்டார் கண்டுபிடிப்புகளைப் படிக்க வேண்டியதிருக்கிறது. அதற்காகவும் மக்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த நேர்கிறது அல்லவா? கல்லூரிகளில் அறிவியற் பட்டப் படிப்புகள் தமிழில் உருவாக முதலில் அறிவியலைத் தமிழ்ப்படுத்தும் முறை எளிதாக வேண்டியிருக்கிறது.

மைக்ரோசாவ்ட் நிறுவனம் விஸ்டா வெளியிடும்போது அவர்களிடம் தொடர்பு கொண்டு ஶ (U+0BB6) துணைக்கொண்டும் ஸ்ரீ தயாரிக்க ஏற்பாடு செய்தேன். இப்பொழுது தமிழில் ஸ்ரீ தோற்றம் இரு தொடர்களால் இயங்குகிறது: <0BB6, 0BCD, 0BB0, 0BC0> மற்றும் <0BB8, 0BCD, 0BB0, 0BC0 >

ஸ்ரீ < ஶ ~ இதனால் என்ன பயன்? தமிழக அரசாங்கம் யுனிக்கோடரிடம் அடுத்த மாதம் தனி மெய்யெழுத்துக்களும், உயிர்மெய்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் கேட்க இருக்கிறது. அப்போது யூனிக்கோட் அதிகாரிகள் "ஏற்கெனவே எல்லாத் தமிழ் எழுத்துக்களும் கணித்திரைகள் காட்டுகின்றனவே" என்ற காரணம் காட்டி மறுக்க வாய்ப்புள்ளது. அப்பொழுது, தமிழக அரசுக்குழு "ஸ்ரீ எழுத்தை இரண்டு விதமாகச் செய்ய அனுமதிக்கிறீர்களே, அதுபோலவே, தமிழ் மெய்யெழுத்துக்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் தந்து ஆதரிக்கவும்" என்று கோர இந்த ஶ எழுத்தின் ஸ்ரீ உறுதியாய் உதவும்.

யூனிக்கோடில் தமிழ் ஓம்:

தமிழ்நாட்டிலே, கோயிற் கருவறைகளில் கூட, டி-சட்டைகளிலும் இந்தி ஓம் போட்டுக்கொண்டு திரிவது பரவிவருகிறது. இதனை வடநாட்டார் செய்தால் பரவாயில்லை. ஆனால் சாமியார்கள் நடத்தும் 'திடீர்' யோகா வகுப்புகள், ... போன்றன பரப்புவதால் தமிழ் மக்களுக்கு இந்தி ஓம் தான் ஓம் என்றாகிவிடும்.

ஓங்கார எழுத்து அகர, உகர, மகரங்கள் கொண்டது என்று திருமூலர் பல திருமந்திரப் பாடல்களில் அறிவித்துள்ளார். பழங்காலத்தில், ஓகார நெடிலெழுத்துக்கு அடிச்சுழியில்லை, வீரமாமுனிவர் (Costantino Giuseppe Beschi, 1680-1747 CE) ஓகார நெடிலை ஒகரக் குறிலில் இருந்து வேறுபடுத்த ஓ என்று எழுதிச் (சுழி ஒன்றைக் கடைசியில் இட்டு) முதன்முதலாய்க் காட்டினார். அதுவே இன்று நிலைத்துவிட்டது. முற்காலத்தில் ஓ எழுத்தின் பக்கத்தில் அநுஸ்வாரம் என்னும் ஒரு சிறு பூச்சியம் இருக்கும். இச்சிறு வட்டம் மலையாள ஓமில் இன்னும் உண்டு. இத் துவாரம் ஓலைகளை அழிக்கும் என்பதால் எழுதாது விட்டு வெறும் ஒ எழுதி ஓம் என்று பனையேடுகளில் படித்தனர். ஒகரம் மருவி உருவடைந்தது தான் பிள்ளையார் சுழி (உ).

20-ஆம் நூற்றாண்டில், கோவில் ராயகோபுரங்களிலே ஓம் ஓரெழுத்தாக மகர மெய் உள்ளடங்கி உருவாகியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் 'ப்லெயின் டெக்ஸ்ட்' ஆகத் தமிழ் ஓங்காரம் வருவதில்லை என்று சொல்லி யூனிக்கோடு சில வருடங்கள் தரவில்லை. "வடமொழியில் நமஸ்தே/நமஸ்காரம் என்பதற்கு இணையான சொல் தமிழில் உண்டு, அது வணக்கம் என்பதாகும்" என இன்றைய வடக்கே இந்தி பேசுவோர் கூடத் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல் தமிழ்த் தெய்வம் முருகனுக்குத் தமிழ் ஓம் இருந்தால் நல்லது, மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் மறக்காது என்று முயற்சி மேற்கொண்டேன். ஈரான் தேசத்துப் பாரசீக (ஃபார்சி) மொழியின் நமாஸ் என்ற வார்த்தைக்கும், சம்ஸ்கிருத வார்த்தையான நமஸ்தே என்ற சொல்லுக்கும் மூலவேர் ஒன்றே: வளைதல்/வணங்கல். நமஸ்தே இந்துக்களாலும் நமாஸ் இசுலாமியராலும் அவரவர் மதங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆரிய மொழிகளான ஸம்ஸ்க்ருதம், பாரசீகம் (ஃபார்ஸி) இரண்டும் நெருங்கிய தொடர்புடைய உறவு மொழிகள்.

பாரதத்தில் தோன்றிய அனைத்துச் சமயங்களிலும் ~ வைணவம், சைவம், சீக்கியம், சமணம், பௌத்தம், ... ~ தியான மந்திரமாய் ஓங்காரம் திகழ்கிறது. தமிழில் அழகான ஓம் என்னும் குறியுண்டு என்று உலகுக்கு அறிவிக்க அரிய வழியிது என்று கருதி யூனிக்கோடில், இந்தி ஓமுக்கு சரியிணையாகத் தமிழ் ஓம் வைத்திட இண்பிட் முன்னிகை தயாரித்தேன். முத்து, கல்யாண், யுடிசி உமா போன்றோர் வெற்றிகாண உதவினர். இன்று யூனிக்கோடு 5.1ல் தமிழ் ஓம் அரங்கேறி வலைவலம் செய்கிறது. தமிழ் ஓம் புரபோசல் ஐஎஸ்ஓ வலைப்பீடத்தில் என்றும் வாழ்கிறது. இளைய தலைமுறை தமிழின் ஓம் எழுத்தை கூகுள் போன்ற தேடெந்திரங்களில் துழாவிப் பார்த்தால், அத்துடன் வணக்கம் என்று எழுதலாம். இந்தி வலைத்தாளைத் தமிழ் எழுத்தாக்கும்போது இந்த ஓம் ((U+0BD0) இந்தி ஓமின் சரிநிகர் சமானமாகக் காலமெல்லாம் கணினிகளில் பயன்படும்.

தமிழுக்கு ஏற்ற யூனிக்கோடு:

பொருளும், காலமும் செலவிட்டு சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளை ஆய்ந்து தமிழுக்குப் பொருத்தமான யுனிகோட் சார்ட் எது எனத் தேடினேன். எனக்குத் தெரிந்தளவில், தமிழ் ப்ளாக் அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்கவேண்டும். அப்படி மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம் அமைந்துள்ளது. ஆனால் தமிழக அரசு யூனிக்கோடு தமிழில் இடம்பெறும் போது கேள்விகள் எழுப்பாமல் விட்டது. யூனிக்கோட்டை அதிகாரிகள் கோட்டைவிட்டனர். இப்போது மாற்ற வேண்டுமென்கையில் தொல்லைகள் எழுகின்றன. பார்ப்போம்.

நா. கணேசன்

[1] நிரம்பை என்னும் ஊரினர் சிலம்பின் உரைகாரர் அடியார்க்கு நல்லார். முனைவர் செ. இராசுவின் 'கொங்குநாட்டில் சமணம்' என்னும் புத்தத்தில் தரவுகளைக் காணலாம். மதுரைப் பல்கலைக்கழக ஆய்வேடு (1991) அச்சேற உதவினோம். இராசுவின் ஈரோடு போன் எண்: 0424-2262664.

[2] சிலருக்குக் காலிக் கட்டங்களாகத் தெரியும் sha எழுத்து. ஏனெனில் அக் கணினியில் மேம்படுத்தப் பெற்ற எழுத்துரு இல்லாதிருக்கலாம். புதிதாக வரும் விஸ்டா போன்றவற்றில் இப் பிரச்சினை இருக்காது.

7 comments:

குறும்பன் said...

உங்கள் பதிவு மூலம் பல புதிய செய்திகளை தெரிந்துகொள்கிறேன்.

\\சிலருக்கு காலிகட்டங்களாகத் தெரியும் sha எழுத்து. ஏனெனில் அக் கணினியில் மேம்படுத்தப் பெற்ற எழுத்துரு இல்லாதிருக்கலாம்.\\
எனக்கு sha வட்டமாகவும் சதுரமாகவும் தெரிகிறது. எவ்வகை எழுத்துருவை நிறுவவேண்டும்?


\\இப்போது மாற்ற வேண்டுமென்கையில் தொல்லைகள் எழுகின்றன. பார்ப்போம். \\ இப்போ விட்டா எப்பவும் மாற்ற முடியாது, தொல்லைகள் வந்தாலும் வழுவாக எடுத்துச்சொல்லி மாற்ற வேண்டும்.

ஜயராமன் said...

ஐயா,

இந்த அரிய தகவல் கண்டு மகிழ்கிறேன். என் பதிவிலும் மற்றும் என் தனியான தேவைக்கும் இந்த புது வார்த்தைகள் அவசியம் தேவையாகின்றன. தற்போதைய எழுத்துருக்களில் இந்த புது எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு விட்டதா? இந்த புது எழுத்துடன் சா, சீ முதலிய உயிர்மெய் எழுத்துக்களும் எழுத்துருக்களில் எதிலாவது இருக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்தவும். விஸ்டா உபயோகித்தாவர்கள் இந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது என்பதையும் அறிய ஆவலாய் இருக்கிறேன். தங்கள் அறிய முயற்சிக்கு நன்றி.

ஜயராமன்

கோபி(Gopi) said...

சுவையான தகவல்கள். நன்றி

சுந்தரவடிவேல் said...

ஓம் எனக்குப் பிடித்தமான ஓசை!
நன்றி

Vijay said...

அருமையான தகவல்கள். ஒரு சந்தேகம்: 'ஷ' இற்கும் 'ஶ' இற்கும் உச்சரிப்பில் என்ன வித்தியாசம்?

Micro said...

Sir Thank you sir

Shyam said...

'ஶ' என்பது sugar எனும் ஆங்கிலச் சொல்லில் உள்ள su-வைப் போல் உச்சரிக்கப்படுகிறது. 'ஷ' என்பது நாவை உட்புறமாகச் சுழற்றி உச்சரிக்கப்படுகிறது. சம்ஸ்க்ருத மொழியில் श=ஶ ष=ஷ.