பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே
உண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமே
முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே
இந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே
ஆடல் வாழிய அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக்கும் பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை
பொங்கிடப் பொங்கலோ பொங்கல் என்றார்த்தே
புரையீர் வெல்லம் புலிப்பல் போன்ற
ஏலம் பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்து
இருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக்கு உழவர் வாழ்த்தி அத்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!
                                                   ~ பாரதிதாசனார்

கொழுமுனைக் கலன்கள் கொண்டுழும் வயல்களில்
உழுபடை மறவரும் உழைத்ததின் பயன்களாய்,
பழுத்தநெற் கதிரென, பயறுகள் வகையென,
செழித்தசெங் கரும்பென, சிவந்தநற் கிழங்கென,
பழுத்த பூசணி,பசுமைக் கறிகளும்,
கொழிக்கக் கண்டு கொள்ளுவர் உவகை.
நன்றியின் பெருக்கால் ஞாயிறைத் தொழுவர்,
நன்றியோடு அவர்களை நினைவோம். ஏனெனில்
சுழன்றும் ஏர்ப்பின் செல்லுமிவ் வுலகு,
பழையன கழித்துபின் புதியன புகுத்தி,
தென் தமிழ்க் குடிகள் திருநாள் காணும்
பொங்கல் நாளில் வாழ்த்தும் உம்மை.
பொங்குக உவகை! பொங்குக வளமை!
மங்குக மடமை! மங்குக வறுமை!
எங்கணும் அறம்பொருள் இன்பம்
தங்குக என்றும் தரணியில் நிலைத்தே.
                                                   ~ மு. சுந்தரமூர்த்தி

சில்லென்ற காலைச் சிலிர்ப்போடு நர்த்தமிட்டு
மெல்ல மறைந்தவம் மார்கழியாள் பின்னாலே
ஒல்கி ஒசிந்தவொரு மெல்லிழையாள் மேடைபற்றிக்
கல்கலெனக் காலில் சிலம்பொலிக்கக் காண்பவரைப்
புல்லரிக்கச் செய்கின்ற புன்னகையாள் பூவணிந்த
நல்லாள்தைத் திங்களெனும் நாயகிக்கு நல்வரவாய்
நெல்லோடு மஞ்சள் கரும்புஞ் சுமந்துழவ
னில்லா ளிடம்கொடுக்க வின்மொழியாள் அன்னவளும்
வெல்லமொடு வெண்பாலில் வெள்ளரிசி வேகவைத்துப்
பல்கிப் பெருகிடுக பொங்கலோ பொங்கலென
எல்லோ ருடன்சேர்ந் திடுங்குலவை விண்பிளப்ப
அல்லொழிக்கும் ஆதவன் கேட்டதனைத் தொல்லுலகில்
எல்லோர்க்கும் ஈயும் பரிசு.
                                                     ~ அனந்த்


செங்கதிர் எழுந்ததடி
எங்கும்ஒளி ஆனதடி
பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி

தெங்கில்இளம் பாளையைப்போல்
செந்நெல்அறுத் தார்உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்
சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டைவண்டி ஏற்றுகின்றார்

தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்
தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி

கொட்டுமுழக் கோடுநெல்லைக்
குற்றுகின்ற மாதர்எல்லாம்
பட்டுடை இழுத்துக்கட்டி என்னருந் தோழி - பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக்கருவி
முத்தரிசி பாலில்இட்டார் என்னருந் தோழி - வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி

தித்திக்கும் தேனும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்
ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல்பாடல்
பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு
பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்

இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய
இன்பம்நிலை கொள்ளவேண்டும் என்னருந் தோழி
                                     ~ பாரதிதாசனார்

நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க
    நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ
    புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய
சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால்
    சுழல்பூமி பசுமையாய் விழிபறிக்க
மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!
    மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!

பொங்கல் வாழ்த்து அஞ்சல்களிலும், இதழ்களிலும், நீங்கள் பார்த்ததோ, இயற்றியதோ ஆன பாடல்களை அனுப்புங்களேன்!

அன்புடன்,
நா. கணேசன்

10 comments:

தமிழ் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

காட்டாறு said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!

Agathiyan John Benedict said...

இதோ எனது பொங்கல் கவிதை

Thamizhan said...

பொங்கலோ பொங்கல்
புத்தாண்டு புத்தரிசி
புத்தாடை கரும்புண்டு
பொங்கிடவே பொங்கலுண்டு!

பிறந்த இடம் உறவெல்லாம்
பொங்கல்ங்கே கொண்டாட
வந்த இடம் வாழ்வுதர
வளமுடனே வாழ்ந்தாலும்
பொங்குகின்ற நெஞ்செல்லாம்
பொங்கலாய் பொங்கிடுதே!

உல்கெல்லாம் வாழ்கின்ற
தமிழருள்ளம் மகிழ்ந்திடவே
பொங்கட்டும் புத்தாண்டு
மலரட்டும் ஈழமது
வாழ்ந்திடுவோம் பெருமையிலே!

cheena (சீனா) said...

நல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்த்து கூறும் நல்ல உள்ளத்திற்கு நன்றியுடன் நல்வாழ்த்துகள்.

Anonymous said...

நல்ல பொங்கல் கவிதைகள். தெரிவு செய்தமைக்கு நன்றிகள் பல.

Yazhini said...

இணைய நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

முனைவர். கணேசன் அவர்களே, அரிய பல தகவல்களை தொடர்ந்து தாருங்கள்.

Satheeshtamil said...

௵உறவோடு கலந்த உணர்வு தைப்பொங்கல்
மனதோடு நிகல்ந்த நம் உறவு நற்ப்பொங்கல்
ஏழைகளின் திருநாள் தை திருநாள்
உழவன் புது நாள் இன்நாள் உழவனின் பொன்னாள்
உங்கள்ளுடன் பிரதீப்குமர்ர் சா
குலோபல்

ஹரி ஹர சுப்ரமணியன் said...

இணிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஹரி ஹர சுப்ரமணியன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்