காஞ்சி காமாட்சியிடம் காளமேகத்தின் கேள்வி

காளமேகப் புலவர் 6 பறவைகள் வரும்படியாக ஒரு பாடல் செய்திருக்கிறார்: நாரை (குருகு), சக்ரவாகம், சிம்புள் (சரபம்), காக்கை, கொக்கு, குயில். இறுதி மூன்றும் ஈற்றடியிலே இருப்பது அதன் சிறப்பம்சம்.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


காஞ்சியில் கம்பா நதிக்கரையில் மணலால் இலிங்கம் தாபித்து உமையம்மை வழிபடுகையில் வெள்ளம் வர, சிவலிங்கத்தைத் தழுவினார். அதனால் பிருதுவித்தலம் என்ற பெயரும், வளைத்தழும்பு போன்றவையால் தழுவக் குழைந்தநாதர் என்ற பேரும் உண்டு என்கிறது தலபுராணம். சுந்தரமூர்த்தி நாயனார் கச்சியில் கண்பெற்று இக்கதையைச் சொல்லியிருக்கிறார்:

         எள்கல் இன்றி இமையவர் கோனை
                  ஈசனை வழிபாடு செய்வாள் போல்
         உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
                  வழிபடச் சென்று நின்றவா கண்டு
         வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
                  வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
         கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
                  காணக் கண் அடியேன் பெற்றவாறே!

                                                                       சுந்தரர் தேவாரம்

சரி, காளமேகம் பாட்டுக்கு வருவோம்.
பிற்காலச் சோழர் காலக் கோயில்களில் (உ-ம்: தாராசுரம் (குடந்தை) ) நரசிம்மரை அடக்க சிவபிரான் சரபேசுவரராகத் தோன்றினார் என்னும் சிற்பங்களைக் காணலாம். சரபம் ஒரு வலிய பறவை, மூக்கு கருடன் போலேயும், சிறகுகள் கொண்டதாகவும், சிங்கம் போன்ற உருவமுடனும் இருப்பதான கற்பனை வடிவம். திருபுவனம் என்ற ஊரில் உள்ள சரபமூர்த்தியின் படிமம் வெகு அழகு. கண்டபேரண்டப் பறவையாகப் பெருமாள் வந்து சரபம் அடங்கிற்று என்னும் வைணவக்கதையும் உண்டு.

குருகு என்றால் நாரை. வெண்ணிற சங்குகளால் வளையல்கள் சிந்துநதி நாகரீகந்தொட்டு அணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் சங்கின் வளையல்களைப் பரக்கக் காணலாம். மாக்கைக்கு இரங்கும் கை = மகிமை பொருந்திய பிராட்டியின் கைகளில் ஒலிக்கும் வளைகளின் தழும்பும், சக்கிரவாகப் பறவைகள் சோடியாக வாழ்வன, இணைபிரிந்தால் உயிர்துறக்கும். சக்கரவாகம் என்பது நகிற்சுவடு இப்பாட்டில். சக்கிரவாகத்தின் சுவடுகளாலும் எவ்வாறு சரபப்புள் குழைந்தது? என்று அம்பிகையை முன்னிறுத்திக் கவிஞர் கேட்கிறார். தழுவக் குழைந்த புராணம் பேசப்படுகிறது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு?


காமாக்‌ஷி அம்மன் அன்னச்சாலை நாட்டிக், கணவன் உட்பட உலகத்திற்கே படி அளந்தாள். காக்கை = (உலகைக்) காத்தல். கொக்கு = மாமரம், காஞ்சியில் மாமரம் தலவிருட்சம். அதனால் வடமொழியில் ஏகாம்ரேசுரர், (ஏகாம்பரம்) என்று பெயர். ஆம்ரம் = மாமரம். காமாட்சிதன் அண்ணன் விஷ்ணு போலக் கருத்த கருங்குயில். சாதாரணமாக, குயில் மாமரத்தில் மேல் இருக்கும். கச்சியிலோ குயில் போலும் அன்னை மாமரத்தின் கீழ் வீற்றிருக்கிறாள் என்கிறார் கவிஞர்.

                                                                                                  சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!

(நம்மைக் காத்தற்பொருட்டாய் மாவடி வைகும் குயிலாகிய அம்மையே!).

காளமேகப் புலவர் காஞ்சி காமாட்சி அம்பிகைமேல் சொல்லியது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


இன்னும் சில பழைய பாடல்களைப் பார்க்கலாமா?

நா. கணேசன்

9 comments:

Anu said...

Just came across
kalameegam peeru patthathudum..
Very nice informative.
continue writing

nayanan said...

பாடல் விளக்கமும் ஒப்புமையும் மிக அருமை.
தொடருங்கள் நிறைய.

சுவை மிகுந்த தேவாரப் பாடலை அழகாக
எடுத்துத் தந்திருக்கிறீர்கள். அந்தப் பாடலை
அந்தப் பதிகத்தின் ஏனைய பாடல்களோடு
பாடும்போது இந்தக் "கள்ள கம்பனை..."
என்ற இடம் ஒரு அற்புதச் சுவையைத் தரும்.
பாடல்களில் "நல்ல கம்பன்", "பெரிய கம்பன" மற்றும் பல
அடை கொடுத்துப் பின்னர் இந்தப் பாடலில் கள்ளக் கம்பன் என்றும் அப்பாடலில் தொனிக்கும் அந்த விளையாட்டும் இனிமையானவை.

ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்று
எண்ணுகிறேன். "வெள்ளம் காட்டி, வெருட்டிட அஞ்சி...." என்ற அடியில்
"அஞ்சி" என்பது "வஞ்சி" என்று வர வேண்டும்.

இரண்டு அருமையான பாடல்களை எடுத்துச்
சொன்னமைக்கு நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கணேசன்.
வெகு அர்த்தம் பொதிந்த
பாட்டுக்கு
நிறை அர்த்தம் கொடுத்துள்ளீர்கள்.
மீண்டும் படிக்க ஆனந்தமாக இருக்கிறது.

இன்னும் எழுதுங்கள்.

சீமாச்சு.. said...

அன்பு கணேசன்,
மிக நல்ல பாடல். நல்ல முயற்சி. படித்தேன். ரசித்தேன்.

தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

நா. கணேசன் said...

//ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்று
எண்ணுகிறேன். "வெள்ளம் காட்டி, வெருட்டிட அஞ்சி...." என்ற அடியில்
"அஞ்சி" என்பது "வஞ்சி" என்று வர வேண்டும்.//

திரு. இளங்கோ,

வருகைக்கு நன்றி.

"வ்" என்னும் ஒற்றை உடம்படுமெயாக்கிப் பொருள்சொன்னேன்.
'மிக அஞ்சி". ஆனால், நீங்கள் சொல்லும் வஞ்சி (வஞ்சிக்கொடி)இன்னும் பொருத்தமே.

அகநானூற்றில் ஒருபாடலில் மூங்கிற் குச்சியால் மிரட்டுவதாய் வரும். பொதுவாய் அதனை, "அஞ்ச" என்று
பதம் பிரிப்பர். ஆனால், ரா. ராகவர்
"வஞ்சக் கோல்" என்று கொண்டு தன் தமிழ்வரலாறு நூலில் (அண்ணாமலைப் ப., யாழ்நூலுக்கு அடுத்து வெளிவந்தது.)
பொருள் சொல்வார். வஞ்சம் = மூங்கில்
(வம்சம்).பாடலைப் பிறகு தருகிறேன்.

அன்புடன், நா. கணேசன்

குமரன் (Kumaran) said...

அருமை. அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி கணேசன் ஐயா.

Anonymous said...

காளமேகப் புலவரின் செய்யுள் விள்க்கம் அருமை.

கசி said...

பாடலும் விளக்கமும் அருமை கணேசன் அவர்களே.

ENNAR said...

கணேசன் நல்ல விளக்கம்